காணாமற்போனோர் பற்றிய அலுவலகம் விவாதத்துக்கு வருகிறது
காணாமற்போன ஆட்கள் பற்றிய அலுவலகம் (ஸ்தாபித்தலும் நிர்வகித்தலும், பணிகளை நிறைவேற்றுதலும் (திருத்தச்) சட்டமூலம் தொடர்பில், எதிர்வரும் 22ஆம் திகதி வியாழக்கிழமை, நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தப்படவுள்ளது.
நாடாளுமன்ற கட்டடத்தொகுதியில் நேற்று (05) இடம்பெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தின் போதே, மேற்கண்ட தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக அறியமுடிகிறது.
அத்துடன், அந்த சட்டமூலத்தில் மேற்கொள்ளவேண்டிய திருத்தங்கள், அன்றையதினம் முன்வைக்கப்பட்டு, விவாதிக்கப்படும் என்றும் அறியமுடிகின்றது.
காணாமல் போனோர் அலுவலகம் ஒன்றை அமைப்பதற்கு, அமைச்சரவை கடந்த மே மாதம் அனுமதியளித்திருந்தது.
மறைந்துபோனவர்கள் அல்லது காணாமல் போனவர்கள் தொடர்பில் அவர்களுடைய உறவினர்களுக்கு உண்மை நிலையை அறிவதற்கு சரியான தகவலை வழங்க கடும் அழுத்தங்கள் இருப்பதாக அரசாங்கம் கூறியிருந்தது.
காணாமற் போனோர் அலுவலகத்தை அமைப்பதற்கு, திருத்தங்களுடன் கூடிய ஒரு சட்டமூலம், வாக்கெடுப்பின்றி, கடந்த ஓகஸ்ட் மாதம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
அதன்பின்னர், அந்த சட்டமூலம் தொடர்பில், பல்வேறான திருத்தங்கள், முன்வைக்கப்பட்டன. அவை தொடர்பிலேயே எதிர்வரும் 22ஆம் திகதியன்று விவாதம் நடத்தப்படவுள்ளது.








