Breaking News

அமைச்சரவை மாற்றம் குறித்து முதலமைச்சர் தீவிர ஆலோசனை – முடிவை நாளை அறிவிப்பார்?

தம்மால் நியமிக்கப்பட்ட விசாரணைக்குழுவினால் இரண்டு அமைச்சர்கள் மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில், அமைச்சரவையை மாற்றியமைப்பது குறித்து, வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கவனம் செலுத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


நான்கு அமைச்சர்கள் மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்ட நிலையில், அவர்களில் இருவரின் குற்றச்சாட்டுகள் விசாரணைக் குழு உறுதிப்படுத்தியிருந்தது. ஏனைய இரு அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை என்றும் கூறப்பட்டிருந்தது.

இந்த நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளான, ஈபிஆர்எல்எவ், புளொட், ரெலோ என்பன, அமைச்சர்கள் நால்வரையும் நீக்கவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளன.

குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டவர்கள் மாத்திரமன்றி, ஏனைய அமைச்சர்களையும், நீக்கி விட்டு புதியவர்களை நியமிக்க வேண்டும் என்று பங்காளிக் கட்சிகள் வலியுறுத்தியுள்ள போதிலும், இலங்கை தமிழ் அரசுக் கட்சி எந்தக் கருத்தையும் வெளியிடவில்லை.

இந்த நிலையில், அமைச்சரவை மாற்றம் தொடர்பாக முதலமைச்சர் விக்னேஸ்வரன், ஆளும்கட்சியின் அனைத்து மாகாணசபை உறுப்பினர்களினதும் கருத்துக்களைக் கேட்டறிந்து வருகிறார்.

நாளை வடக்கு மாகாணசபையில் நடக்கவுள்ள சிறப்பு அமர்வில், முதலமைச்சர் விக்னேஸ்வரன் இது தொடர்பான அறிவிப்பை வெளியிடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.