Breaking News

தமிழர் பகுதிகளில் புத்தர் சிலை வைப்பதால் ஏற்படும் அசௌரியங்கள் பற்றி விளக்கம்

தமிழர் தாயகப் பகுதிகளில் மக்கள் மீள்குடியேற்றப்படாத நிலையில், புத்தர் சிலைகள் புதிதாக வைக்கப்படுவதால், தமிழ் மக்களுக்கு ஏற்பட்டுள்ள அசௌரியங்கள் குறித்து கதிர்காம ஆலயத்தின் பஸ்நாயக்க நிலமே டி.பீ.குமாரகேயிடம் எடுத்துரைக்கப்பட்டுள்ளது. 

யாழ்ப்பாணத்திற்கு​ நேற்று விஜயம் செய்த கதிர்காம பஸ்நாயக்க நிலமேயுடனான சந்திப்பின் போது, இந்து மாமன்றத்தின் உப தலைவர் ஆறு திருமுருகன் இந்த விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளார். 

யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்திற்கு சென்ற குமாரகேவை ஆலய தரப்பினர் வரவேற்றனர். 

இதனையடுத்து, அவர் நல்லை ஆதின குருமுதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர பரமாச்சாரிய ஞானதேசிக சம்பந்தர் சுவாமிகளை சந்திப்பதற்காக நல்லை ஆதினத்திற்கு சென்றிருந்தார். 

இதன்போது நல்லை ஆதின குருமுதல்வர், கதிர்காம ஆலய பஸ்நாயக்க நிலமேயை பொன்னாடை போர்த்தி வரவேற்றார். 

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள மத ரீதியான முரண்பாடுகள் குறித்து இந்த கலந்துரையாடலில் நல்லை ஆதின குருமுதல்வர் கதிர்காம ஆலய நிலமேக்கு எடுத்துரைத்துள்ளார். 

இதனையடுத்து அகில இலங்கை இந்துமாமன்ற அலுவலகத்திற்கு சென்ற பஸ்நாயக்க நிலமே டி.பீ குமாரகே, இந்து மாமன்ற உப தலைவர் ஆறு திருமுருகனுடன் கலந்துரையாடினார். 

இந்து மா மன்றத்தில் பௌத்த மதத்திற்கு மதிப்பளிப்பதாக குறிப்பிட்ட ஆறு திருமுருகன், தற்போதைய சூழ்நிலையில் இடம்பெயர்ந்த மக்கள் தமது சொந்த இடங்களுக்கு செல்ல முடியாத நிலையில், அவ்விடங்களில் புத்தர் சிலைகள் வைக்கப்படுகின்றமை மனவருத்தம் அளிப்பதாக குறிப்பிட்டார். 

தமது யாழ்ப்பாணத்திற்கான விஜயம் குறித்து தெளிவுபடுத்தும் வகையில் ஊடகவிலாளர்களை சந்தித்த டி.பீ.குமாரகே, வடக்கிற்கும் தெற்கிற்கும் இடையிலான தொடர்புகளை வலுப்படுத்தினால் பிரச்சினைகளை தவிர்த்துக் கொள்ளலாம் எனக் குறிப்பிட்டார். 

தற்போது சிறிய மதவாத இனவாத செயற்பாடுகளில் சிலர் ஈடுபடுகின்றனர். இது மிகவும் பாரிய குற்றமாகும். யுத்தத்திற்கு பின்னர் இருதரப்பினரும் வாழ்வதற்கு ஏற்ற நிலைமை உருவாகியுள்ளது. தமிழ் மற்றும் சிங்கள மக்களைப் போன்று அனைத்து மக்களுக்கும் வாழ்வதற்கு ஏற்ற நிலைமை ஏற்படுத்தப்பட்டுள்ளமை குறித்து நாம் மகிழ்ச்சி அடைய வேண்டும். 

தற்போதுள்ள நிலைமையை பாதுகாக்கும் நோக்கிலேயே நான் இங்கு வருகைதந்தேன். இந்த நிலைமையை பாதுகாக்க வேண்டுமாயின் அங்கிருந்து இங்கு வர வேண்டும். இங்கிருந்து அங்கு வர வேண்டும். எம் இரு தரப்பினருக்கும் இடையில் தொடர்புகள் இருக்க வேண்டும். எம்மை ஒருவருக்கு ஒருவர் தெரியாமல் இருப்பதே இங்கிருக்கும் பிரச்சினை என நான் கருதுகின்றேன். 

தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டால் பாதுகாப்பு தொடர்பில் பிரச்சினை இருக்காது. தங்குமிடங்கள் தொடர்பில் பிரச்சினை இருக்காது. கதிர்காமத்திற்கு வருவது தொடர்பான பிரச்சினையும் இருக்காது. எமக்கு இடையில் உள்ள ஒத்துழைப்பு குறித்த தெளிவின்மையே தற்போதுள்ள பெரிய பிரச்சினை. தெளிவின்மையால் நாமே எமக்குள் பிரச்சினையை ஏற்படுத்திக் கொள்கின்றோம். 

முதலாவதாக நான் இன்று வந்து உங்களைச் சந்தித்தது போல் நீங்களும் வாருங்கள். மீண்டும் நான் இங்கு வருகின்றேன். இரண்டு தடவைகள் இவ்வாறு செய்யும் போது உறவினர்கள், சகோதரர்கள் போல் மாறிவிடுவோம். சிறு பாராயத்ததில் எமது கிராமத்திற்கு வருவது போல் தான் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்தோம். 

பாரிய தொடர்புகள் இருந்தன. மீண்டும் அந்த தொடர்புகளை ஏற்படுத்திக்கொள்ள முடியும். இவ்வாறு நாம் பாரிய தூரம் பயணிக்கலாம் என்ற நம்பிக்கை எனக்கு இருகின்றது என்றார்.