Breaking News

கதிரைப் பந்தையம்; சம்பந்தனுக்கு விருந்துபடைத்த பசுபதிப்பிள்ளை!

வடக்குமாகாணசபைக்குள் நிலவிய குழப்பங்கள்,
அதன் பின்னர் தட்டுத்தடுமாறி அறிக்கைகள் வெளியிட்ட உறுப்பினர்கள் என நீண்ட சுவாரஸ்யங்கள் இன்னமும் முடிவுறாது நீள்கின்றன. இவ்வாறான குத்துக்கரணங்களுக்குள் முதலமைச்சர் தொடக்கம் சாதாரண உறுப்பினர் வரையில் விதிவிலக்காகவில்லை.

2009 போருக்குப் பின்னான சூழல் என்பது ஒவ்வொரு அரசியல் பிரமுகர்களையும் தங்களுடைய சுயங்களை வெளிக்காட்டி நிற்கும் வகையிலான செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கான திறந்தவெளியாகவே காணப்பட்டுவருகிறது.

நேரடியாகவே தமிழ்த் தேசியத்திற்கு எதிரான போக்கினைக் கொண்டு செயற்படுதல், கடும் தேசியவாதிகளாக செயற்படுதல் அல்லது அவ்வாறு நடப்பது போல பாசாங்கு செய்தல் என்பன பிரதான இடத்தை வகிக்கின்றன. ஆனாலும் இரண்டையும் கடந்து சந்தர்ப்ப சூழலுக்கு ஏற்ப வலுவாக அரசியலில் காலூன்றி நிற்கும் தரப்புக்களோடு கை கோர்த்து அரசியல் செய்யும் ஒரு பகுதியும் காணப்படுகிறது.

இவ்வாறான சந்தர்ப்ப சூழலுக்குள் தம்மை இணைத்துக்கொண்டு அரசியல் செய்கின்ற குழுவில் முதன்நிலையில் அடையாளப்பட்டிருக்கின்றார் கிளிநொச்சியை சேர்ந்த மாகாணசபை உறுப்பினர் பசுபதிப்பிள்ளை அவர்கள்.

நூறு நாட்களைத் தாண்டி கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் முன்னெடுக்கப்படுகின்ற போராட்டத்திற்கு திடீர் பிரசன்னமாகியிருந்தார் கூட்டமைப்பின்  தலைவர் இரா.சம்பந்தன்.

மூன்று மாதங்களைக் கடந்த அந்தப் போராட்டத்தில் சம்பந்தன் திடீர் எனப் பங்கேற்றது ஏன் என்பது கூட்டமைப்பின் போக்கினைப் புரிந்தவர்களுக்கு இலகுவாக தெரிந்துகொள்ளக்கூடிய விடயம் தான். ஆனால் அப்பாவி மக்களைப் பொறுத்தவரையில் அது ஒரு மக்கள் நலன் சார்ந்த செயற்பாடாகவே தென்பட்டிருக்கலாம். அவ்வாறு தென்பட்டதன் காரணமாகவே அங்கு போராடத்தில் ஈடுபட்ட மக்கள் சம்பந்தனின் காலில் வீழ்ந்தும் கண்ணீர்விட்டும் தங்களுடைய ஆதங்கங்களை வெளிப்படுத்தியிருந்தனர்.

ஆனால்,
இதுகாலவரையில் சிறைச்சாலைகளில் வாடுகின்ற தமிழ் அரசியல் கைதிகள் எவரையும் ஒரு சந்தர்ப்பத்திலேனும் சென்று பார்க்காத இரா.சம்பந்தன் திடீர் ஞானோதயமாக கிளிநொச்சி சென்றாரா என்றால் அதுதான் இல்லை.

கூட்டமைப்பில் குறிப்பாக தமிழரசுக்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற சில அரசியல் பிரமுகர்கள் தங்களுடைய வாக்குவங்கியில் வீழ்ச்சி ஏற்படுவதாக உணர்கின்ற சந்தர்ப்பங்களிலோ அல்லது தேர்தல் காலங்களிலோ தமிழீழ விடுதலைப்புலிகளையோ, மாவீர்களையோ தங்களுக்கு துணையாக அழைத்து தங்கள் செல்வாக்கு வீழ்ச்சியை ஈடுசெய்துகொள்வார்கள்.

இது காலாகாலமாக தொடர்கின்ற ஒரு விடயமாகும். இந்த விடயங்களோடு தான் சம்பந்தனின் கிளிநொச்சி பயணத்தையும் பார்க்கவேண்டியுள்ளது.
நல்லாட்சி அரசாங்கத்தில் பங்கேற்கும் கட்சிகள் தேர்தலில் பங்கேற்கும் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவை கோரியிருந்தபோது நிபந்தனையற்ற வகையில் ஆதரவு வழங்கியிருந்தார் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்.

சந்திரிகா கனவான் போன்றவர், எனவே அவர் தீர்வினையும் ஏனைய விடயங்களையும் தமிழ் மக்களுக்கு பெற்றுத்தருவார் என்ற சாரப்பட சம்பந்தன் அப்போது ஊடகங்களுக்கு கதைவிட்டிருந்தார்.

எந்தச் சந்தர்ப்பத்திலும் தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யுங்கள், காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் நடவடிக்கை எடுங்கள் என்று அவர், அரசாங்கத்தை வலியுறுத்தியதாக தெரியவில்லை. அதேபோல சர்வதேச நெருக்கடி ஏற்படும் எனக் கருதப்பட்ட சந்தர்ப்பங்களிலெல்லாம் சர்வதேசத்தின் மத்தியில் கால அவகாசம் கோருகின்ற பொறுப்பினை சம்பந்தனே ஏற்றிருந்தார்.

இந்த இடத்தில் தான் சம்பந்தன் கிளிநொச்சிக்கு மேற்கொண்ட திடீர் பயணத்தின் உள்நோக்கத்தினைப் புரிந்துகொள்ளமுடியும். வடக்கு முதல்வருக்கு எதிராக கொண்டுவந்த நம்பிக்கையில்லாத்தீர்மானத்தின் எதிரொலி வடக்கு மட்டுமல்லாது கிழக்கிலும் எதிரொலிக்கவே செய்தது.

இந்த நிலையில் அவசர மக்கள் சந்திப்புக்களை முன்னெடுத்த தமிழரசுக்கட்சி, மக்கள் எதிர்ப்புக்களுக்கு அஞ்சி, கேள்விகளை எழுத்தில் தரவேண்டும் எனக் கோரிக்கை வைத்ததுடன் பல கூட்டங்களுக்கு பிரசன்னமாவதை தவிர்க்கவும் முற்பட்டது.

சயந்தன் தலைமையிலான குழுவினர் முன்னெடுத்த நடவடிக்கை தமிழரசுக்கட்சியின் மூத்தவர்கள் மத்தியல் பலத்த சலசலப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில்தான் கிளிநொச்சிக்கு சென்ற சம்பந்தன், கூட்டமைப்புத் தொடர்பிலும் தமிழீழவிடுதலைப்புலிகள் தொடர்பிலும் அங்கு வைத்து கதை சொல்லியிருக்கிறார். அப்பாவி மக்கள், உணர்வின் பாற்பட்டவர்கள், அவர்களை இலகுவாக ஏமாற்றிவிடமுடியும் என்பதை கையிலெடுத்தே அவர் அந்த நடவடிக்கையில் ஈடுபட்டார். இது பட்டவர்த்தனமான விடயம்.

இந்த இடத்தில் தான் இதன் ஒரு முக்கியவிடயமாக மாகாணசபை உறுப்பினர் பசுபதிப்பிள்ளை அவர்கள் சம்பந்தன் அவர்களுக்கு தன்னுடைய வீட்டில் விருந்துபரிமாறியமை தொடர்பிலும் தமிழ்கிங்டொத்திற்கு தெரியவந்திருக்கின்றது, மாகாணசபையில் நெருக்கடி ஏற்படுவதற்கு முன்பாக சயந்தன் தலைமையிலான குழுவினரை விமர்சிக்கும் அணியில் பசுபதிப்பிள்ளையும் முக்கிய ஒருவராக தன்னைக்காட்டிக்கொண்டிருந்தார். பல்வேறு கூட்டங்களில் சுமந்திரன், சயந்தன் குழுவினரை கடுமையாக வசைபாடியும் இருந்தார்.

இருப்பினும் முதலமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாத்தீர்மானம் கொண்டுவரப்பட்டபோது தமிழரசுக்கட்சியினர் ஆளுநர் அலுவலகம் சென்றிருந்தனர். அந்தக் குழுவில் பிரதான இடத்தில் இருந்த பசுபதிப்பிள்ளை அவர்கள் சயந்தன் குழுவின் திட்டத்தினை நடைமுறைப்படுத்துவதில் முழு ஈடுபாட்டுடன் நின்றுசெயற்பட்டார்.

இந்த இடத்தில் தான் இன்னொரு விடயத்தினையும் பார்க்கமுடிகிறது. வழமையாக தேர்தல் வருகின்றபோது தமிழரசுக்கட்சியின் சின்னத்தினைப் பயன்படுத்தியே போட்டியிடுகின்ற கூட்டமைப்பினர் தமிழரசுக்கட்சியின் நடவடிக்கைகளுக்கு கட்டுப்பட்டே நடக்கவேண்டி ஏற்படுவது வழமையாகும்.
எனவே சம்பந்தனுக்கு விருந்தோம்பல் மேற்கொள்வதன் மூலம், அவர்களுக்கு தன் மீது தப்பபிப்பிராயம் இருந்தால் அது கழுவுப்பட்டு அடுத்த முறையும் தேர்தல் கதிரையை அலங்கரிக்கலாம் என்று அவர் எதிர்பார்த்திருப்பதாகவே கிளிநொச்சி வட்டாரங்களிலிருந்து அறியக்கிடைக்கின்றது.