Breaking News

தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைமை ஏமாற்றப்படுகின்றதா !

கடந்த 60 வரு­ட­கா­ல­மாக புரை­யோ­டிப்­போ­யி­ருக்கும் தேசிய பிரச்­சி­னையைத் தீர்க்க முடி­யா­மையை இட்டு நாம் வெட்­க­ம­டை­ய­வேண்டும். எனக்கு ஆறுவய­தாக இருக்­கும்­போது தேசியபிரச்­சினை ஆரம்­பித்­தது. இன்று எனக்கு 66 வய­தா­கி­விட்­டது. இன்னும் இந்தப் பிரச்­சினை தீர்க்­கப்­ப­ட­வில்லை. 

காரணம் நாட்டின் நலனை விடுத்து கட்­சியின் நல­னுக்­காக நாம் செயற்­பட்­டி­ருக்­கின்றோம். – அமைச்சர் ராஜித தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பு தானும் ஏமாற்­ற­ம­டைந்­துள்ள­துடன் தமிழ் மக்­க­ளையும் ஏமாற்­றி­யுள்­ளது. எனவே கூட்­ட ­மைப்­பா­னது இதற்குப் பின்­னரும் அர­சாங்கம் தீர்­வுத்­திட்­டத்தை முன்­வைக்கும் என நம்பி ஆத­ரவு வழங்­கிக்­கொண் டி­ருப்­பதில் அர்த்­த­மில்லை. -

கெஹெலிய ரம்புக்வெல்ல தமிழ் பேசும் மக்களுக்கான அரசியல் தீர்வுக்கான சாத்தியங்கள் குறைவடைந்து செல்வதைப்போன்ற தோற்றம் தெரிய ஆரம்பி த்திருக்கின்றது. 

புதுவிதமான நம்பிக்கை புதிய அரசாங்கத்தின் ஆரம்ப காலத்தில் துளிர்விட்ட போதும் தற்போது அந்த நம்பிக்கை, படிப்படியாக சிதை வடைந்துகொண்டு போகின்றது. 

வரலாற்றில் தமிழ் மக்கள் அனைத்து சந்தர்ப்பங்களிலும் அரசியல் அதிகார விடயத்தில் ஏமாற்றப்பட்டமை போன்ற நிகழ்வுகள் மீண்டும் இடம்பெற ஆர ம்பித்திருக்கின்றன. 

அதாவது வரலாறு மீளவும் திரும்பிக்கொண்டிருக்கின்றது என்று கூற முடி யும். என்னதான் வளர்ச்சிப்போக்கில் மனிதனின் செயற்பாடுகள் காணப்பட்டா லும் ஒரு சில விடயங்களில் இன்னும் எடுகோள்களை மாற்றமுடியாத நிலைமை காணப்படுகின்றது. 

இலங்கையைப் பொறுத்தவரையில் சமஷ்டி தீர்வுத்திட்டம் ஒன்று பெறுவது கடினமான ஒன்றென தோற்றப்பாடு காட்டப்பட்டு வருகிறது. அதனை மாற்றியமைக்க முடியும் என்ற சிந்தனைகள் முன்வைக்கப்பட்ட போதிலும் அது சாத்தியமற்ற ஒன்றாகவே நீடித்து வருகிறது. 

அந்தவகையில் பார்க்கும்போது தமிழ் பேசும் மக்களுக்கான அரசியல் அபி லாஷைகளைப் பூர்த்தி செய்யக்கூடிய வகையிலான தீர்வுத்திட்டம் சாத்திய மற்றுப்போய்விடுமோ என்ற அவநம்பிக்கை ஏற்பட ஆரம்பித்து விட்டது. 

அதாவது வரலாற்றில் முக்கிய திருப்பமாக இரண்டு பிரதான கட்சிகளும் ஒன்றிணைந்து ஆட்சி அமைத்திருக்கின்ற தற்போதைய சூழலில் தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வைக் காணமுடியாவிடின் வேறு எப்போதுதான் இது சாத்தியமாகும் என்ற கேள்வி இங்கு எழுவதை தவிர்க்க முடியாது உள்ளது. 

தமிழ் பேசும் மக்களைப் பொறுத்தவரையில் இலங்கைக்கு சுதந்திரம் கிடைத்ததிலிருந்து தமது அரசியல் உரிமைகள் நிலைநாட்டப்படவேண்டும் என்பதை வலியுறுத்திவருகின்றனர். 

தமிழர்களுக்கான அரசியல் உரிமைகள், வழங்கப்படவேண்டும் என்பது ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்றாகவே இருந்து வருகின்றது. எனினும் அதனை வழங்குவதற்கு பெரும்பான்மை சமூகம் தயார் நிலையில் இல்லாமையே இங்கு சிக்கலுக்குரியதாக மாறியிருக்கிறது. 

இந்நிலையில் அரசியல் தீர்வுக்கான போராட்டங்கள் கடந்த காலங்களில் பல பரிமாணங்களைப் பெற்றிருந்தது. சாத்வீகப் போராட்டம், ஆயுதப் போராட்டம் என வடிவங்களைப் பெற்றிருந்தாலும் இறுதிவரை விடிவு பிறக்கவில்லை. 

தற்போது யுத்தம் முடிவடைந்துள்ள நிலையில் தமிழ் பேசும் மக்களின அரசியல் உரிமை கோரலானது மீண்டும் ஆரம்ப இடத்திற்கே வந்திருக்கின்றது. 

இந்த இடத்திலிருந்து மீண்டும் மக்கள் தமது தீர்வுக்கான செயற்பாடுகளை ஆரம்பிக்கவேண்டியவர்களாக இருக்கின்றனர். வரலாற்றில் தமிழ்பேசும் மக்கள் தீர்வுத்திட்ட விடயத்தில் ஏமாற்றப்பட்டு வந்துள்ளமை தொடர்பில் இவ்வாரம் அமைச்சரவைப் பேச்சாளர் ராஜித சேனாரட்ன ஒரு சிறந்த கருத்தை வெளியிட்டிருந்தார். 

அதாவது எந்தளவு தூரம் தீர்வுகளை காண்பதற்கான சந்தர்ப்பங்கள் கிடைத்தும் கட்சி நலன் சார்ந்த சுயநல அரசியல் காரணமாக இந்த நாடு பலவற்றை இழந்திருப்பதாக அவர் குறிப்பிட்டிருந்தார். 

இதுதொடர்பில் அமைச்சர் ராஜித சேனாரட்ன இவ்வாறு கருத்து வெளியிட்டிருந்தார். ''உலகில் ஒஸ்ரியாவிலும் ஜெர்மனியிலும் மட்டும்தான் இவ்வாறு தேசிய அரசாங்கங்கள் இருக்கின்றன. அதனை எமது நாட்டிலும் முன்னெடுத்துள்ளோம். 

குறிப்பாக நாட்டின் தேசிய பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக இந்த முயற்சி எடுக்கப்பட்டது. கடந்த 60 வருடகாலமாக புரையோடிப்போயிருக்கும் தேசிய பிரச்சினையைத் தீர்க்க முடியாமையை இட்டு நாம் வெட்கமடையவேண்டும். எனக்கு ஆறு வயதாக இருக்கும்போது தேசிய பிரச்சினை ஆரம்பித்தது. 

இன்று எனக்கு 66 வயதாகிவிட்டது. இன்னும் இந்தப் பிரச்சினை தீர்க்கப்பட வில்லை. காரணம் நாட்டின் நலனை விடுத்து கட்சியின் நலனுக்காக நாம் செயற்பட்டிருக்கின்றோம். 

தற்போது புதிய அரசியலமைப்பை கொண்டுவர முயற்சிக்கின்றோம். அந்த முயற்சி கைகூடவேண்டும்’’. இவ்வாறு அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரி வித்திருக்கின்றார். 

அதாவது நீண்டகாலமாக தமிழ் பேசும் மக்களின் உரிமைகள் உறுதிப்படு த்தப்படவேண்டும் என்பதற்காக குரல்கொடுத்து வருகின்ற தென்னிலங்கை யின் அரசியல்வாதி என்ற வகையில் அமைச்சர் ராஜித சேனாரட்ன மிகவும் உறுதியாக இந்த விடயத்தை வெளியிட்டிருக்கின்றார். 

எப்படியாவது இந்தப் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வைக் கண்டுவிட வேண்டும் என்பதில் அமைச்சர்களான ராஜித சேனாரட்ன, டிலான் பெரேரா போன்ற வர்கள் என்னதான் முயற்சிகளை மேற்கொண்டாலும் அவர்களைத் தாண்டி இனவாத சக்திகளின் கைகள் மேலோங்கிவிடுகின்றன. எனவேதான் இந்தப் பிரச்சினையை 60 வருடங்களாக தீர்க்க முடியாமையை இட்டு வெட்க மடைவதாக அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்திருக்கின்றார். 

எவ்வாறெனினும் கடந்த காலங்களில் நாட்டின் தேசிய பிரச்சினையைத் தீர்ப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன என்பதை மறுக்க முடியாது. ஆனால் வழமைபோன்று இனவாத சக்திகளின் நகர்வுகள் காரணமாக அந்தப் பேச்சுவார்த்தைகளின் பிரதிபலனைப் பெற முடியாமல் போனது. 

மாறாக ஏமாற்றம் மட்டுமே மக்களுக்கு நிரந்தரமாக இருக்கின்றது. தற்போது சிறிலங்கா சுதந்திரக்கட்சியும் ஐக்கிய தேசியக்கட்சியும் இணைந்து ஆட்சி அமைத்துள்ள நிலையில் தீர்வுத் திட்டம் ஒன்றை காண்பதற்கு ஒரு சிறந்த சூழல் உருவாகியுள்ளதாக சுட்டிக்காட்டப்படுகின்றது. 

ஆனால் அந்த சிறந்த சூழலிலும் இந்த நாடு பயன்பெறுகின்றதா என்பதே இங்கு முக்கிய விடயமாகும். தேசிய அரசாங்கம் புதிய அரசியலமைப்பொன்றை உருவாக்குவதற்காக பாரிய முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. 

அந்த புதிய அரசியலமைப்பில் இனப்பிரச்சினைக்கான தீர்வுத்திட்டம் தேர்தல் முறை மாற்றம் மற்றும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையில் மாற்றம் ஆகிய மூன்று விடயங்கள் முக்கிய அங்கங்களாக இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

எனவே இதனூடாக நாட்டில் புரையோடிப்போயிருக்கின்ற தேசிய பிரச்சி னைக்கு தீர்வு கண்டுவிடலாம் என்ற நம்பிக்கை ஆரம்பத்தில் ஏற்பட்டிருந்தது. 

ஆனால் தற்போது புதிய அரசியலமைப்பை தயாரிக்கும் பணிகளில் ஏற்ப ட்டுள்ள இழுபறி நிலைமையை பார்க்கும்போது எங்கே தீர்வுத்திட்டம் என்பது சாத்தியமாகுமா என்ற கேள்வி எழுகிறது. 

அரசாங்கத்திற்கு புதிய அரசியலமைப்பின் ஊடாக இனப்பிரச்சினைக்கு தீர்வைக் காண்பதற்கான அவசியம் இருந்தாலும் கூட அதனைக் குழப்பி நிலைமையை மறுபக்கம் திருப்பும் வகையில் இனவாத சக்திகள் செயற்பட லாம் என்ற அச்சம் காணப்படுகின்றது. 

அந்த அச்சத்தின் காரணமாக அரசாங்கம் இந்தத் தீர்வு விடயத்தில் சற்று அடக்கி வாசிப்பதாகவே தெரிகிறது. அதாவது தீர்வு விடயத்தில் தமது முழுமையான அர்ப்பணிப்பை வெளிக்காட்டினால் எங்கே அரசாங்கத்தின் இருப்புக்கே சவால் விடப்பட்டுவிடுமா என்ற அச்சம் அரசாங்கத்தின் தலை வர்கள் மத்தியில் இருப்பதாகவே தெரிகிறது. 

ஒருவகையில் பார்க்கும்போது அவர்களின் பக்கத்தில் அது நியாயமான ஒரு சங்கடத்திற்குரிய அச்சமாகவே இருக்கலாம். ஆனால் அதற்காக தீர்வை அடைவதற்கு கிடைக்கப் பெற்றுள்ள இந்த சூழலை பயன்படுத்தாமல் விடுவது ஒரு மிகப்பெரிய துரதிர்ஷ்டமாகும் என்பதை மறந்துவிடக்கூடாது. 

ஆரம்பத்தில் முழுவீச்சுடன் மேற்கொள்ளப்பட்ட புதிய அரசியலமைப்பை தயாரிக்கும் செயற்பாடுகள் தற்போது மந்தகதியை அடைந்துள்ளன. விசேட மாக புதிய அரசியலமைப்பா அல்லது அரசியலமைப்பு திருத்தமா என்ற இறுதி இணக்கப்பாடு கூட இதுவரை கட்சிகளுக்கிடையில் எடுக்கப்பட்டதாக தெரிய வில்லை. 

அந்தளவிற்கு இன்னும் முரண்பாடான நிலைமைகள் காணப்படுகின்றன. ஐக்கிய தேசியக்கட்சியும் தமிழ் தேசியக்கூட்டமைப்பும் புதிய அரசியல மைப்பை உருவாக்கி அதனூடாக இனப்பிரச்சினைக்குத் தீர்வு கண்டு அதனை சர்வஜன வாக்கெடுப்பிற்கு உட்படுத்த வேண்டுமென்ற நிலைப்பாட்டில் இரு க்கின்றன. 

கிட்டத்தட்ட ஜே.வி.பி.யும் இதே நிலைப்பாட்டில் தான் இருக்கின்றது. ஆனால் சிறிலங்கா சுதந்திரக்கட்சி இதிலிருந்து முற்றிலும் மாறுபட்ட நிலைப்பாட்டில் உள்ளது. 

சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்படக்கூடாது என்றும் அரசியலமைப்பு திருத்தத்தை முன்னெடுத்து அரசியல் தீர்வையும் தேர்தல் முறை மாற்றத்தையும் மேற்கொள்ளலாம் என்றும் சுதந்திரக்கட்சி கூறிவருகிறது. 

அந்த வகையில் பார்க்கும்போது தேசிய அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் இரண்டு பிரதான கட்சிகளுகிடையேக்கூட புதிய அரசியலமைப்பா? 

அல்லது அரசியலமைப்பு திருத்தமா என்பது தொடர்பில் இணக்கப்பாடு எட்ட ப்படாத நிலைமை காணப்படுகின்றது. இதேவேளை வரலாற்றில் எப்போது மில்லாதவாறு தற்போதைய சூழலில் பிரதான எதிர்க்கட்சியான தமிழ் தேசிய க்கூட்டமைப்பு இராஜதந்திர ரீதியில் அரசாங்கத்திற்கு ஆதரவைக் காட்டும் போக்கில் செயற்படுகின்றது. 

தீர்வுத்திட்டமொன்றை பெற்றுக்கொள்வதற்காக தமிழ்தேசியக்கூட்டமைப்பு இவ்வாறு இராஜதந்திர ரீதியில் செயற்படுவதை காணமுடிகின்றது. இந்நிலை யில் இவ்வாறானதொரு ஆதரவு இருந்தும் கூட அரசாங்கத்தினால் தீர்வு த்திட்டத்தை உள்ளடக்கிய புதிய அரசியலமைப்பை கொண்டுவர முடியா விடின் அது மிகவும் துரதிர்ஷ்டவசமானதாகும். 

ஆனால் அந்த நிலையை நோக்கியே தற்போது நாடு பயணிப்பதாக தெரிகிறது. இந்நிலையில் தற்போதைய தீர்வுகாண்பதற்கான அரசியல் சூழல் தொடர்பில் கருத்து வெளியிட்டிருந்த முன்னைய அரசாங்கத்தின் பாதுகாப்பு பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான கெஹெலிய ரம்புக்வெல்ல கீழ்க்கண்டவாறு ஒரு கருத்தை வெளியிட்டிருந்தார். 

"நல்லாட்சி அரசாங்கத்தின் செயற்பாடுகளையும் நகர்வுகளையும் பார்க்கும்போது தமிழ் பேசும் மக்களுக்கான அரசியல் தீர்வுத்திட்டம் என்பது சாத்தியமற்ற ஒன்றாகவே காணப்படுகின்றது. 

சம்பந்தன் மற்றும் சுமந்திரன் உள்ளிட்ட தமிழ் தேசியக்கூட்டமைப்பினர் நல்லாட்சி அரசாங்கம் தீர்வுத்திட்டத்தை நிச்சயம் வழங்கும் என்ற நம்பிக்கையை தமிழ் பேசும் மக்கள் மத்தியில் விதைத்தனர். 

அதனால் தமிழ் மக்கள் நல்லாட்சி அரசாங்கத்தை கொண்டுவர தமது பங்களிப்பை வழங்கினர். ஆனால் இரண்டரை வருடங்கள் கடந்தும் இன்னும் சாதகமான செயற்பாடுகளை காணவில்லை. 

மேலும் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் இரண்டு பிரதான கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சியும் சிறிலங்கா சுதந்திரக்கட்சியும் இதுவரை இனப்பிரச்சினை தொடர்பான தமது நிலைப்பாட்டை முன்வைக்கவில்லை. 

இவ்வாறு இரண்டு பிரதான கட்சிகளும் இதுவரை தமது நிலைப்பாட்டை முன்வைக்காத நிலையில் தீர்வுத்திட்டம் என்பது சாத்தியமாகுமா? 

அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் பிரதான கட்சிகள் எந்த யோசனையையும் இதுவரை தீர்வு தொடர்பில் முன்வைக்கவில்லை. எனவே தமிழ் பேசும் மக்களுக்கான தீர்வு என்பது இங்கு சாத்தியமான ஒன்றாக எமக்குத் தெரியவில்லை. 

தென்னிலங்கையில் அரசாங்கத்தின் செயற்பாடுகள் மக்களை குழப்பியுள்ள தைப் போன்று வடக்கு, கிழக்கிலும் கூட்டமைப்பின் செயற்பாடுகள் மக்களை குழப்பியுள்ளன. 

எனவே தீர்வுத்திட்டம் என்பது நல்லாட்சி அரசாங்கத்தின் ஊடாக முன்வைக்கப்படும் என்ற நம்பிக்கை இல்லாமல் போய்விட்டது. இதனால் தமிழ் தேசியக்கூட்டமைப்பு தானும் ஏமாற்றமடைந்துள்ளதுடன் தமிழ் மக்களையும் ஏமாற்றியுள்ளது. 

எனவே கூட்டமைப்பானது இதற்குப் பின்னரும் அரசாங்கம் தீர்வுத்திட்டத்தை முன்வைக்கும் என நம்பி ஆதரவு வழங்கிக்கொண்டிருப்பதில் அர்த்தமில்லை. உடனடியாக தமது ஆதரவை தமிழ் கூட்டமைப்பு விலக்கிக் கொள்ளவேண்டி யிருக்கிறது" இவ்வாறு சில முக்கியமான விடயங்களை கெஹெலிய ரம்பு க்வெல்ல முன்வைத்திருக்கின்றார். 

கெஹெலிய ரம்புக்வெல்ல கூறுவதுபோன்று தமிழ் மக்கள் ஏமாற்றப்பட்டு க்கொண்டிருப்பது உண்மையாக இருந்தாலும் கூட தமிழ் தேசியக்கூட்டமைப்பு உடனடியாக அரசாங்கத்திற்கான ஆதரவை விலக்கிக்கொள்வது புத்திசாலி த்தனமானதல்ல. 

அவ்வாறு கூட்டமைப்பு செய்யுமாயின் அரசாங்கம் ஒரு குற்றச்சாட்டை முன்வைக்கலாம். அதாவது அரசாங்கம் ஒரு தீர்வைக்காண அர்ப்பணிப்புடன் இருந்ததாகவும், எனினும் கூட்டமைப்பு அர்ப்பணிப்புடன் செயற்படாததால் தீர்வைக் காண முடியவில்லை என்றும் கூறும் சாத்தியம் இருக்கின்றது. 

அதுமட்டுமின்றி தமிழ் தேசியக்கூட்டமைப்பானது தமது மக்களுக்கான தீர்வுத்திட்டம் ஒன்றை பெற்றுக்கொள்வதற்காக அனைத்து வகையான இராஜ தந்திர வழிகளையும் பயன்படுத்தவேண்டியது அவசியமாகும். 

அதனையே கூட்டமைப்பு தற்போது செய்துகொண்டிருக்கின்றது என்று கருதலாம். எப்படியிருப்பினும் காலம் செல்லச்செல்ல நிலைமைகள் இறுக்க மடைந்து செல்வதை காணமுடிகின்றது. 

நல்லாட்சி அரசாங்கத்தின் பதவிக்காலத்தில் இரண்டு வருடங்கள் முடிந்து விட்டன. இதுவரை தீர்வுத்திட்டத்திற்கான அடிப்படை வரைபுகூட தயாரிக்க ப்பட்டதா என்பது தெளிவாக வெளிப்படுத்தப்படவில்லை. எனவே வழமை போன்று தமிழ் மக்கள் ஏமாற்றப்படுகின்றார்களா? 

அல்லது தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைமை ஏமாற்றப்படுகின்றதா என்பது தெளிவற்ற நிலைமையில் காணப்படுகின்றது. இது தொடர்பில் தமிழ் தேசியக்கூட்டமைப்பு விரைந்து தன்னை சுதாகரித்துக்கொள்ளவேண்டிய தேவை காணப்படுகின்றது. 

அதேபோன்று அரசாங்கமும் தொடர்ந்து தமிழ் பேசும் மக்களை ஏமாற்ற முயற்சிக்காமல் தீர்வுத்திட்டத்திற்காக இதய சுத்தியுடன் செயற்பட வேண்டி யது அவசியமாகும். 

ஆனால் இவை சாத்தியமாகுமா என்பதே தெளிவற்ற நிலைமையிலேயே காணப்படுகின்றது. 

 ரொபட் அன்டனி