மைத்திரி காட்டும் பூதம்!!
“விரோதங்கள் வன்முறைகளின் மூலம் என்னைப் பலவீனப்படுத்தி னால், தீயசக்திகள் தான் பலம் பெ றும்” – கடந்த 13ஆம் திகதி யாழ்ப்பா ணம் இந்துக் கல்லூரியில் நடந்த தமிழ்மொழித் தின விழாவில் உரையாற்றிய போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறிய விடயமே இது. இந்த விழாவில் பங்கேற்க யாழ்ப்பாணம் சென்றிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக போராட்டம் நடத்தப்பட்டிருந்தது. அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி போரா ட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களைக் கடந்து சென்ற போது, வாகனத்தை விட்டுக் கீழே இறங்கி, அவர்களுடன் பேச்சு நடத்தியிருந்தார் ஜனாதிபதி.
அதற்குப் பின்னர், தமிழ்மொழித் தின விழாவில் உரையாற்றிய போதே, தன்னைப் பலவீனப்படுத்தினால், தீயசக்திகள் பலம் பெறும் என்று அவர் கூறியிருந்தார்.
இதனை அறிவுரை என்று எடுத்துக் கொள்வதா- அல்லது எச்சரிக்கை என்று எடுத்துக் கொள்வதா என்பது அவரவர் பார்வைக் கோணத்தைப் பொறுத்த விடயம்.
ஆனாலும், தன்னைப் பலவீனப்படுத்தினால் தீயசக்திகள் பலம் பெறும் என்பது போன்ற கருத்துகளின் ஊடாக, ஜனாதிபதியும் அவரது அரசாங்கமும், தமிழ் மக்களின் கோரிக்கைகள், நியாயங்கள், உரிமைகளை அடக்குவதற்கே முனைகின்றனர் என்பது வெளிப்படை.
யாழ்ப்பாணத்தில் ஜனாதிபதி மாத்திரம் இந்தக் கருத்தைக் கூறவில்லை. அதுபோல, தமிழர் தரப்பை நோக்கி இது முதல் முறையாகக் கூறப்பட்ட கருத்தும் அல்ல. அண்மையில் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஒரு செவ்வியில் இதுபற்றி விரிவாகக் கூறியிருந்தார்.
“அரசதரப்பில் உள்ளவர்கள் எம்முடன் வந்து நன்றாக கலந்துரையாடுவார்கள். நாங்கள் அவர்களிடம் எமது கோரிக்கைகளை முன்வைப்போம். அதனை நிறைவேற்றுவதாக வாக்குறுதி அளித்து விட்டுப் போவார்கள்.
ஒன்றும் நடக்காது.
பின்பொருமுறை சந்திக்கும் போது அளிக்கப்பட்ட வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை என்று கேட்டால், அதனை நிறைவேற்றினால், மஹிந்த ராஜபக் ஷ ஆட்சியைக் கவிழ்த்து விடுவார், அவர் மீண்டும் ஆட்சிக்கு வந்து விடுவார் என்று பயம் காட்டுகிறார்கள்” என்று அவர் கூறியிருந்தார்.
அதாவது தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கான வாக்குறுதிகளைக் கூடக் காப்பாற்ற முடியாத அரசாங்கமாகத் தான் இது இருக்கிறது.
இத்தகைய தருணங்களின் போதெல்லாம், தீயசக்திகள் பலம் பெறும் என்றோ, மஹிந்த ராஜபக் ஷ ஆட்சியைக் கவிழ்த்து விடுவார் அல்லது அதிகாரத்துக்கு வந்து விடுவார் என்றோ பயமுறுத்துவது தான் அரசாங்கத்தின் வழக்கமாக மாறியிருக்கிறது.
மஹிந்த ராஜபக் ஷவை அல்லது தீயசக்திகளைக் காண்பித்து தமிழர்களைப் பயமுறுத்தி, அவர்கள் தரப்பு நியாயங்களை அரசாங்கம் அமுக்கப் பார்க் கிறதோ என்ற சந்தேகம் தமிழ் மக்கள் மத்தியில் ஏற்பட்டிருக்கிறது.
மஹிந்த ராஜபக் ஷவின் ஒரு தசாப்த ஆட்சிக்காலம் என்பது, தமிழர்களைப் பொறுத்தவரையில் மிக மோசமானது என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை.
படுகொலைகள், போர்க்குற்றங்கள், காணாமல் ஆக்கப்படுதல்கள், கைதுகள், சித்திரவதைகள், இடம்பெயர்வுகள் என்று இந்த ஆட்சிக்காலத்தில் தமிழர்கள் சந்தித்த துன்ப துயரங்கள், முன்னைய எந்தவொரு ஆட்சிக்காலத்திலும் அனுபவித்திராதவை.
சர்வதேச நாடுகள் பலவற்றினால் கூட இன்று எதேச்சாதிகார ஆட்சி என்று வர்ணிக்கப்படும் மஹிந்த ராஜபக் ஷவின் ஆட்சியில், தமிழ் மக்கள் மோசமாக நடத்தப்பட்டனர்.
மோசமான வாழ்வு நிலைக்குள் சிக்கியிருந்தனர். அதிலிருந்து வெளியே வர வேண்டும் என்பதற்காக மாத்திரம், தமிழ் மக்கள் ஒன்றிணைந்து, 2015 இல்ஆட்சி மாற்றத்தை நிகழ்த்தவில்லை.
தமக்கு நீதியும், நியாயமும், உரிமையும், அதிகாரங்களும் கிட்ட வேண்டும் என்பதற்காகவும் தான், மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதியாகச் தெரிவு செய்வதற்குத் தமிழ் மக்கள் துணை நின்றனர்.
மஹிந்த ராஜபக் ஷவின் ஆட்சிக்காலத்தில், தமிழ் மக்கள் மிக மோசமான சூழ்நிலைக்குள் இருந்த போதும் கூட, தமது கோரிக்கைகள், உரிமைகள், அதிகாரங்கள் விடயத்தில், ஒருபோதும் விட்டுக்கொடுக்கவோ, போராடாமல் ஒதுங்கியிருக்கவோ இல்லை.
அடக்குமுறைகளுக்கு மத்தியிலும், தமது எதிர்ப்புகளை சாத்தியமான வழிகளில் எல்லாம் வெளிப்படுத்திக் கொண்டேயிருந்தனர்.
2015 ஆட்சி மாற்றம், புதிய சூழலையும், ஜனநாயக இடைவெளியையும் ஏற்படுத்தியிருக்கிறது. இந்த மாற்றத்தினால் தான், ஜனாதிபதி பங்கேற்கும் நிகழ்வுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தையும் நடத்த முடிந்திருக்கிறது.
இதுவே மஹிந்த ராஜபக் ஷ ஆட்சிக்காலத்தில் என்றால், அதிகார பலத்தைக் கொண்டு அடக்கப்பட்டிருக்கும் அல்லது அகற்றப்பட்டிருக்கும்.
அதற்காக தற்போதைய அரசாங்கம், போராட்டங்களை அனுமதிக்கிறது என்பதற்காக, அதற்கான சூழல் விட்டு வைக்கப்பட்டுள்ளது என்பதற்காக, தமிழ் மக்களின் கோரிக்கைகளையோ, உரிமைகளையோ, அதிகாரத்தையோ நியாயமற்றதாக காட்டுவது அல்லது விட்டுக்கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்துவது தவறானது.
மீண்டும் மஹிந்த ராஜபக் ஷ ஆட்சிக்கு வந்து விடுவார் என்று கூறி, பேசாமல் அமைதியாக இருக்கச் செய்வது தான், அரசாங்கத்தின் உத்தியாக இருக்கிறது. அவ்வாறாயின், தமிழ் மக்களின் கோரிக்கைகளான, அடிப்படை உரிமைகளையும், அதிகாரத்தையும் எப்போது கோருவது, எப்போது அதற்கான போராட்டங்களை நடத்துவது?
ஓர் அரசாங்கம் என்பது ஒருபோதும் நூறு வீதம் பாதுகாப்பானது என்று கூறமுடியாது. அதுவும் ஜனநாயக அரசியல் சூழல் உள்ள நாடுகளில், நிலையான அரசாங்கம் இருப்பது போலத் தோற்றமளித்தாலும், அதற்குப் பின்னால் ஆபத்து ஒளிந்து கொண்டேயிருக்கும்.
ஆளும்கட்சியைப் பிளவுபடுத்தி, அல்லது தமது பக்கம் இழுத்து என்று பல்வேறு வழிகளில் ஆட்சியைக் கவிழ்க்க முனைவது வழக்கம். எந்தவொரு அரசியல் கட்சியினதும் பிரதான இலக்கு ஆட்சியை.
அதிகாரத்தைப் பிடிப்பது தான். அந்த இலக்கில்லாமல் நடத்தப்படும் கட்சிகளால் ஒருபோதும் உருப்படவே முடியாது. அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காக மோதுவதும், போராடுவதும் தான் அரசியல்.
அதிகாரத்தில் இருந்து தோன்றியது தான் அரசு. இங்கேயும் அதில் எந்த மாற்றமும் இல்லை.
மஹிந்த ராஜபக் ஷ ஆட்சியைப் பிடிக்க முனைவதும், அத னைத் தடுப்பதற்கான காய்நகர்த்தல்களை முன்னெடுப்பதும் தான், அரசியலில் நிலைத்திருப்பதற்கான ஒரே வழி.
தன்னைத் தெரிவு செய்த மக்கள் கூட்டத்தின் கோரிக்கைகளையும், தேவைகளையும் நிறைவேற்றுவதே ஒரு அரசாங்கத்தின் கடமை. அந்தக் கடமையை நிறைவேற்றுவதற்கான வழிகளைத் தேடுவதற்குப் பதிலாக, அதிலிருந்து விடு பட்டு ஓடி ஒளிவதற்கான வழிகளையே தேடுகிறது தற்போதைய அரசாங்கம்.
அரசாங்கம் எதைச் செய்யப் போகிறது என்பதை, எதிர்க்கட்சியே தீர்மானிக்கிறது என்ற நிலை ஏற்பட்டிருக்கிறது.
இதுதான் மிகவும் பலவீனமான ஓர் அரசாங்கத்தின் அறிகுறி. தற்துணிவின் பேரில் முடிவுகளை எடுத்துச் செயற்படத் திராணியற்ற அரசாங்கங்கள் தான் எதிர்க்கட்சியைக் காரணம் கூறும். அத்தகைய நிலையில் தான் தற்போதைய அரசாங்கம் இருந்து கொண்டிருக்கிறது.
அதிகார ஆசனத்தை இறுகப் பற்றிக் கொண்டிருப்பது மாத்திரம் முக்கியமல்ல. அதனை மக்களுக்காகப் பயன்படுத்திக் கொள்வதும் முக்கியம். அதுதான் ஆட்சியை நிலைப்படுத்தும்.
தற்போதைய அரசாங்கம் எதற்கெடுத்தாலும், மஹிந்த என்ற பூதத்தைக் காட்டி தமிழ் மக்களின் வாயை அடைக்கப் பார்க்கிறது. மஹிந்த ராஜபக் ஷ போன்ற எதிர்த்தரப்பினரால் அரசாங்கம் மாத்திரம் நெருக்கடிகளை எதிர்கொள்ளவில்லை.
தெற்கில் நடப்பது போன்ற இதே இழுபறிப் போர் வடக்கிலும் நடக்கிறது. அரசாங்கத்துடன் ஒத்துழைத்துச் செயற்படும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இதே பிரச்சினை இருக்கிறது.
அரசாங்கத்துடன் விட்டுக்கொடுத்துச் செயற்படுவதாலும், அரசியலமைப்பு உருவாக்கம் போன்ற விடயங்களுக்கு இணங்கிப் போவதாலும், தமிழர் தர ப்பில் உள்ள கடும்போக்காளர்களின் கடுமையான விமர்சனங்களையும் எதிர்ப்பையும் கூட்டமைப்பு சந்தித்துக் கொண்டிருக்கிறது.
அந்த எதிர்ப்புகளைக் கண்டு சம்பந்தன், தனது பாதையை மாற்றிக் கொள்ள வில்லை. தமது அரசியல் எதிர்காலம் பற்றிய அச்சங்களை உதறி விட்டு அவர், தெரிவு செய்த வழியில் பிரச்சினைக்குத் தீர்வு காண முனைகிறார்.
ஆனால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவோ, மஹிந்த ராஜபக் ஷ என்று பயமுறுத்தி, காலத்தைக் கடத்த முனைகிறார். அரசாங்கம் தனது பொறுப்பு களை நிறைவேற்றுவதில் இருந்து நழுவிக் கொள்வதற்கான ஒரு காரணியாக மஹிந்த ராஜபக் ஷவை காண்பித்து வருகிறது.
தமிழர் தரப்பின் கோரிக்கைகளை நிறைவேற்றாமல் இருப்பதற்காக மஹிந்த ராஜபக் ஷவை ஒரு பூதமாக காண்பிக்கிறது. ஆனால், இந்த பயமுறுத்தல்கள் நீண்டகாலத்துக்கு பயனளிக்காது என்பதை அரசாங்கம் புரிந்து கொள்ள வேண்டும்.
‘தெரியாத பேயை விட தெரிந்த பூதமே மேல்’ என்று கூறும் வழக்கம் ஒன்று உள்ளது. தமிழ் மக்களும், அப்படியொரு முடிவை எடுக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பேயாகும்.








