Breaking News

அணு, இரசாயன, உயிரியல் ஆயுதங்களுக்கு இலங்கையில் தடை



அணு, இரசாயன, மற்றும் உயிரியல் ஆயுதங்களை சிறிலங்காவில் தடை செய்யும், சிறப்பு வர்த்தமானி அறிவித்தல் அரசாங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ளது.

2017ஆம் ஆண்டின் ஐ.நா ஒழுங்குமுறைகளின் படி ஐக்கிய நாடுகள் சட்டத்தின் கீழ் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன இந்த வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார்.

இதற்கமைய, அணுசக்தி, இரசாயன அல்லது உயிரியல் ஆயுதங்களை தயாரிப்பது, பெறுதல், வைத்திருத்தல், இடமாற்றம் செய்தல் அல்லது பயன்படுத்தியதாக எவர் ஒருவரும் உயர்நீதிமன்றினால் குற்றவாளியாக காணப்பட்டால், 20 ஆண்டுகளுக்கு உட்பட்ட சிறைத்தண்டனை அல்லது 5 மில்லியன் ரூபாவுக்கு உட்பட்ட அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும்.

மேற்குறிப்பிடப்பட்ட நடவடிக்கைகளுக்கு உதவுகின்ற எந்தவொரு நபரும் அல்லது குழுவும் புதிய விதிமுறைகளின்படி அதே குற்றத்தைச் செய்ததாக கருதப்படும்.

இதற்கு ஐந்து ஆண்டுகளுக்கு மேற்படாத சிறைத்தண்டனையை அல்லது ஒரு மில்லியன் ரூபாவுக்கு மேற்படாத அபராதத்தை அல்லது இரண்டையும் அனுபவிக்க நேரிடும்.

புதிய ஒழுங்குமுறைகளின் கீழ், இரசாயன அல்லது உயிரியல் ஆயுதங்களை உற்பத்தி செய்வதற்கு, பெற்றுக் கொள்வதற்கு, அபிவிருத்தி செய்வதற்கு, போக்குவரத்து செய்வதற்கு, பரிமாற்றம் செய்வதற்கு, பயன்படுத்துவதற்கு தனிநபர்கள், நிதியை அல்லது நிதி உதவிகளைப் பயன்படுத்த முடியாது.

புதிய ஒழுங்குமுறைகளை நடைமுறைப்படுத்த பாதுகாப்பு அமைச்சர் தகுதிவாய்ந்த அதிகாரி ஒருவரை நியமிப்பார்.