தூத்துக்குடியில் மீண்டும் துப்பாக்கிச்சூடு: ஒருவர் உயிரிழப்பு
தூத்துக்குடியில் போராட்டக்காரர்கள் மீது மீண்டும் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இரண்டு பேர் படுகாயமடைந்துள்ளனர்.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டத்தில் 100வது நாளான நேற்று வன்முறை வெடித்தது. அங்கு வன்முறையை கட்டுப்படுத்த போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூடு மற்றும் தடியடியில் இதுவரை 12 பேர் உயிரிழந்துள்ளனர். துப்பாக்கிச் சூட்டை கண்டித்து தமிழகத்தின் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் வலுத்துள்ளன.

இந்நிலையில் தூத்துக்குடி அண்ணா நகரில் ஸ்டெர்லைட்டுக்கு எதிராக பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்குள்ள டாஸ்மாக் கடைகளும் போராட்டக்காரர்களால் அடித்து நொறுக்கி சூறையாடப்பட்டன.
இதையடுத்து போராட்டக்காரர்கள் மீது போலீசார் மீண்டும் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இரண்டு பேர் படுகாயமடைந்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக 6 பேரை கைது செய்து அவர்களிடம் ஆயுதங்கள் ஏதேனும் உள்ளதா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
துப்பாக்கிச்சூடு நடைபெற்ற அண்ணா நகரில் உள்ள சாலைகள் முழுவதும் கற்கள் குவிந்து கிடக்கின்றன. மேலும் அண்ணா நகர் பகுதிக்குள் செல்ல வாகனங்கள் செல்ல அனுமதிக்கபடவில்லை.
தூத்துகுடியில் நிலைமை நேற்றே கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாக போலீசார் தெரிவித்த நிலையில் மீண்டும் போலீசார் நடத்திய துப்பக்கிச்சூடு அனைவரிடத்திலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.