Breaking News

அமைச்சரவை நீக்கம் செல்லாது -மேல்நீதிமன்றம் தீர்ப்பு

வடக்கு மாகாண அமைச்சராகப் பதவி வகித்த
பா.டெனீஸ்வரனை பதவிநீக்கியது செல்லாது என மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. கடந்த ஆண்டு ஓகஸ்ட் மாதம், வடக்கு மாகாண முதலமைச்சர் பதவி நீக்கியிருந்தார். இதற்கு எதிராக பா.டெனீஸ்வரன் மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்திருந்த வழக்கின் தீர்ப்பே இன்று வழங்கப்பட்டுள்ளது.

இதுவரைகாலமும் வடமாகாணசபை முதலமைச்சருக்கும் இருக்கும் அதிகாரங்கள் எந்த வரையறைக்குள் உள்ளது என்பதையும் அதிகாரங்களை மாகாணத்திற்கு பெறவேண்டிய தரப்புக்கள் நீதிமன்றத்தில் வாதாடி அதனை மத்திய அரசுக்கு பெற்றுக்கொடுக்கும் கைங்கரியத்தை வெற்றிகரமாக செய்து முடித்துள்ளனர்.

இரு தரப்பு சமர்பணங்களுக்கும் முடிவடைந்த பின்னர், வழக்கு தீர்ப்புக்காக இன்று எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன்போது, அமைச்சர் பதவியிலிருந்து டெனீஸ்வரனை பதவி நீக்கியதை நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

அவரது அமைச்சுப் பதவிகளை தற்போது வகிக்கும் அமைச்சர்களையும் தொடர்ந்து செயற்படுவதற்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது. தீர்ப்பின் பிரதி வடக்கு மாகாண ஆளுநர், வடக்கு மாகாண முதலமைச்சருக்கு அனுப்பப்படவுள்ளது.

விக்னேஸ்வரனிற்கு எதிரான செயற்படும் தமிழரசுக்கட்சியின் அரசியல் நோக்குநிலையிலிருந்தே இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. முன்னாள் அமைச்சர் ப.சத்தியலிங்கம் சார்பில், எம்.எ.சுமந்திரன் ஆஜராகியிருந்தார். இந்த வழக்கில் நீதிமன்றத்திற்குள் தமிழரசுக்கட்சி அணி வெற்றிபெற்றிருந்தாலும், அரசியல்ரீதியாக மாகாணசபையின் அதிகாரமற்ற தன்மையை தீர்ப்பு புலப்படுத்துகிறது. மாகாண முதலமைச்சர்களிற்கும், ஆளுனரிற்குமிடையிலுள்ள அதிகார பேதத்தை இந்த தீர்ப்பு துல்லியமாக வெளிப்படுத்தியுள்ளது. இந்த மாகாணசபை முறைமையின் பலவீனம் தொடர்பான உரையாடல்களை மீளவும் இந்த தீர்ப்பு ஏற்படுத்த சந்தர்ப்பம் உள்ளது.