Breaking News

அனந்தியின் கட்சி இன்று உதயமாகிறது!

வடக்கு மாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன்
தனது புதிய கட்சியின் அங்குரார்ப்பண நிகழ்விற்கு அழைப்பு விடுத்துள்ளார்.
ஈழத் தமிழர் சுயாட்சிக் கழகம் எனும் தனது புதிய கட்சியின் அங்குராப்பண நிகழ்வு இன்று முற்பகல் 09 மணிக்கு யாழ் யூ.எஸ் விருந்தினர் விடுதியில் நடைபெறும் என குறிப்பிட்டுள்ள அவர், முன்னராக கட்சியின் அங்குரார்ப்பண நிகழ்வினை நவராத்திரியின் ஆயுத பூசை விழா அன்று நடத்த திட்டமிட்டிருந்தபோதும் சில அரசியல் சக்திகளின் இடையூறுகள் காரணமாக நிகழ்வினை பிற்போட்டிருப்பதாக குறிப்பிட்டிருக்கிறார்.

இன்றைய நிகழ்வின்போது ஈழத் தமிழர் சுயாட்சிக் கழகத்தின் கொள்கைப் பிரகடனம் இடம்பெறுவதோடு கட்சியின் கொடி அறிமுகம் செய்துவைக்கப்படும் எனவும் கட்சியின் பொதுச் செயலாளராக அனந்தி சசிதரன் செயற்படுவார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

விடுதலைப் புலிகளின் திருமலை மாவட்ட முன்னாள் அரசியல்துறைப் பொறுப்பளரான எழிலனின் மனைவியான அனந்தி சசிதரன் கடந்த வடக்கு மாகாணசபைத் தேர்தலில் போட்டியிட்டு வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரனுக்கு அடுத்தபடியான வாக்குகளைப் பெற்று இரண்டாம் நிலையினைப் பெற்றிருந்தார். தற்போது மகளீர் விவகார அமைச்சராக இருக்கும் அவருக்கு எதிராக அவரது கட்சியான தமிழரசுக் கட்சி பல்வேறு நெருகடிகளை ஏற்படுத்தியிருந்தது.

குறிப்பாக அவரது தொகுதியான வலிகாமம் மேற்கில் அனந்தி சசிதரனின் செல்வாக்கு அதிகரித்தால் எதிர்காலத்தில் தனது நாடாளுமன்ற உறுப்பினர் ஆசனம் கேள்விக்குறியாகலாம் எனக்கருதிய தமிழரசுகட்சியின் வட்டுக்கோட்டைத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரான சரவணபவன் அனந்தி சசிதரனுக்கு எதிராக தனது ஊடகத்தைப் பயன்படுத்தி பல்வேறு நெருக்கடிகளை ஏற்படுத்திவந்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.