Breaking News

மாற்று அணிக்குள் மோதல்கள் -நிலாந்தன்

கடந்த திங்கட்கிழமை ஜ.பி.சி தொலைக்காட்சியின்
நிலவரம் நிகழ்ச்சியில் பங்குபற்றிய பொழுது என்னிடம் கேள்வி கேட்ட ஊடகவியலாளர் ஒரு விடயத்தை சுட்டிக்காட்டினார்.

விக்னேஸ்வரனின் புதிய கூட்டு இந்தியாவின் அனுசரணையோடு உருவாக்கப்பட்டிருக்கிறது என்று தமிழ் தேசிய மக்கள் முன்னணி கூறுகிறது. அதற்கு ஆதாரமாக சிவாஜிலிங்கம் அண்மையில் இந்தியாவுக்குச் சென்று வந்ததை அக்கட்சி சுட்டிக்காட்டுகிறது.

தர்க்க ரீதியாகப் பார்த்தால் அக்கட்சி கேட்பது சரி போலத் தோன்றும். பத்தாண்டுகளாக சிவாஜிலிங்கத்துக்கு இந்திய விசா மறுக்கப்பட்டு வந்தது. இப்பொழுது திடீரென்று அவருக்கு விசா வழங்கப்பட்டிருக்கிறது. எந்த அடிப்படையில் அவர் மீது விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டது என்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் சேர்ந்தவர்கள் கேட்பதாக மேற்படி ஊடகவியலாளர் சுட்டிக்காட்டினார்.

சிவாஜிலிங்கத்துக்கு கடந்த 10 ஆண்டுகளாக மறுக்கப்பட்டு வந்த இந்திய விசா எந்த அடிப்படையில் வழங்கப்பட்டது அதை அவரிடமே கேட்டேன். மருத்துவ காரணங்களுக்காக தான் விசாவுக்கு விண்ணப்பித்ததாக அவர் சொன்னார். தனக்கு ஏற்கனவே விசா மறுக்கப்பட்டிருக்கும் ஒரு பின்னணியில் இது தொடர்பில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு ஒரு தனிப்பட்ட கடிதம் எழுதியதாகவும் அவர் சொன்னார். இந்திய வெளியுறவுத்துறை அமைச்சராக இருக்கும் ஜெய்சங்கரை தனக்கு முன்னரே தெரியும் என்றும் சொன்னார். மேலும் பொதுவாக பத்து ஆண்டுகளின் பின் முடிவுகளை மறுபரிசீலனை செய்யும் ஒரு வழமையின் அடிப்படையில் தனக்கு விசா வழங்கப்பட்டிருக்கலாம் என்றும் அவர் சொன்னார்.

அவருடைய இந்த விளக்கத்தை தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஏற்குமோ தெரியவில்லை. ஆனால் கடந்த பத்தாண்டுகளாக தனது அரசியல் எதிரிகள் மீது அக் கட்சியை சேர்ந்தவர்கள் இப்படிப்பட்ட சூழ்ச்சிக் கோட்பாடுகளை உருவாக்கி குற்றம்சாட்டி வருகிறார்கள்.

ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு. சில சமயங்களில் சூழ்ச்சிகள் இருக்கும் ஆனால் சூழ்ச்சி கோட்பாடுகள் அவற்றுக்கு இருப்பதில்லை. சில சமயங்களில் சூழ்ச்சிக் கோட்பாடுகள் இருக்கும் ஆனால் சூழ்ச்சிகள் இருப்பதில்லை….. கடந்த 10 ஆண்டுகளாக ஈழத்தமிழர்கள் அதிகரித்த அளவில் சூழ்ச்சிக் கோட்பாடுகளை உருவாக்கி வருகிறார்கள். தங்களுக்கு பிடிக்காத ஒருவரை அரசியலில் தனிமை படுத்துவதற்கு இக் கோட்பாடுகள் பயன்படுத்தப்படுகின்றன. இது ஒரு நோய்க் கூறாக தொடர்ந்தும் காணப்படுகிறது.

தமிழ் தேசிய அரசியலில் ஒரு பலமான கட்சி அல்லது ஒரு பலமான மக்கள் இயக்கம் இல்லாத வெற்றிடத்திலேயே இவ்வாறான சூழ்ச்சி கோட்பாடுகள் உருவாக்கப்படுகின்றன. தமது அரசியல் எதிரியை குறித்து துலக்கமான சரியான புலனாய்வு அறிக்கையைப் பெறுவதற்கு இப்பொழுது அரங்கில் உள்ள எந்த ஒரு தமிழ் கட்சியிடமும் புலனாய்வுக் கட்டமைப்பு கிடையாது. அவ்வாறு புலனாய்வுக் கட்டமைப்பு எதுவுமற்ற ஒரு வெற்றிடத்தில் அவரவர் தத்தமது கொள்ளளவுக்கு ஏற்ப ஊகங்களின் அடிப்படையில் சூழ்ச்சிக் கோட்பாடுகளை உருவாக்கி வருகிறார்கள்

தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் மேற்படி விமர்சனங்களுக்குப் பதிலாக விக்னேஸ்வரன் ஒரு கேள்வி பதில் அறிக்கை வெளியிட்டிருந்தார். அங்கேயும் அவர் தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கு எதிரான சூழ்ச்சி கோட்பாடுகளை சுட்டிக்காட்டியிருக்கிறார். தமிழ் தேசிய மக்கள் முன்னணி விக்னேஸ்வரன் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தபோது அவர் பெருமளவுக்கு அமைதி காத்தார். புதிய கூட்டு உருவாக்கப்பட்ட பின் வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு கூட்டின் அங்கத்துவக் கட்சிகளின் தலைவர்களான ஸ்ரீகாந்தா சிவாஜிலிங்கம் அனந்தி சுரேஷ் பிரேமச்சந்திரன் போன்றவர்கள் தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கு எதிராக குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்கள் .இப்பொழுது விக்னேஸ்வரன் அதைச் செய்திருக்கிறார்.

அவருடைய புதிய கூட்டு உருவாக்கப்பட்ட பின் அவர் இருமுனை எதிர்ப்புகளை எதிர்கொள்ள வேண்டி இருக்கிறது. ஒருபுறம் தமிழ் தேசிய கூட்டமைப்பு. இன்னொருபுறம் தமிழ் தேசிய மக்கள் முன்னணி. இந்த இரண்டு எதிர்ப்புகளையும் எதிர்கொண்டு அவர் புதிய கூட்டை கட்டி எழுப்ப வேண்டியிருக்கிறது.

அவர் ஒரே சமயத்தில் கூட்டமைப்புக்கு மாற்றீடான கட்சியாகவும் அதேசமயம் கஜேந்திர குமாருக்கு எதிராகத் தானே உண்மையான மாற்று அணி என்றும் நிரூபிக்கவும் வேண்டியிருக்கிறது. எனவே தொகுத்துப் பார்த்தால் வரவிருக்கும் தேர்தலில் தமிழ் தரப்பு மூன்று பிரதான கூறுகளாக பிரிந்து நிற்கும் என்று தோன்றுகிறது.

அதுமட்டுமல்ல அதைவிட மேலும் புதிய கூறுகள் மேலெழலாம் என்று தோன்றுகிறது. கடந்த வாரத்தில் இரண்டு காணொளிகள் வெளியாகின. அதில் ஒன்று சாதிரீதியாக ஓடுக்கப்பட்ட மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அமைப்புகள் தங்களுக்கிடையே ஐக்கிய முன்னணியை உருவாக்க முயற்சிப்பதாக அந்த முயற்சியில் ஈடுபடும் சில செயற்பாட்டாளர்கள் ஊடகவியலாளர் சந்திப்பை நடத்தி இருந்தார்கள்.

இரண்டாவது காணொளி மன்னாரில் இந்து மத குருமார்கள் தங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு வேட்பாளரை நிறுத்தப்போவதாக அறிவித்திருப்பது.

முதலாவதாக சாதிரீதியாக ஒடுக்கப்பட்டிருக்கும் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைப்புகள் தங்களுக்கிடையே ஐக்கிய முன்னணியை உருவாக்க முயற்சிப்பது பற்றி பார்க்கலாம்.

ஏற்கனவே கிளிநொச்சியை தளமாகக் கொண்டியங்கும் சந்திரகுமார் ஒரு கட்சியை பதியும் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கிறார். அவருக்கு கிளிநொச்சியில் கிட்டத்தட்ட 20 ஆயிரம் வாக்குகள் உண்டு. அங்குள்ள நிதி ரீதியாக நலிவுற்ற மலையக வம்சாவளியினர் மத்தியில் அவர் தன்னுடைய வாக்கு வங்கியை ஸ்தாபிக்க முற்படுகிறார். அதோடு தன்னிடமுள்ள 20 ஆயிரம் வாக்குகளை மேலும் பெருக்குவதற்கு வடக்கிலுள்ள குறிப்பிட்ட சமூகங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சுயேட்சைக் குழுக்களை அணிதிரட்ட முயற்சிக்கிறார். காரைநகரில் உள்ள ஒரு செயற்பாட்டு அமைப்பு வலிகாமத்தில் உள்ள சில செயற்பாட்டு அமைப்புகள் வடமராட்சியில் உள்ள ஒரு சுயேச்சை குழு முதலாக வடக்கு முழுவதிலுமுள்ள குறிப்பிட்ட சமூகங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளையும் அமைப்புகளையும் ஓரணியில் திரட்டி தனது சின்னத்தின் கீழ் போட்டியிட சந்திரகுமார் முற்படுவதாக கிளிநொச்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போதுள்ள வாக்காளர்களில் கிட்டத்தட்ட 68 வீதமான வாக்காளர்கள் இவ்வாறு சாதி ரீதியாக தாழ்த்தப்பட்ட சமூகங்களைச் சேர்ந்தவர்கள் என்று ஒரு தகவலை கிளிநொச்சியைச் சேர்ந்த செயற்பாட்டாளர் ஒருவர் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்

அதாவது குறிப்பிட்ட சமூகங்களை மையப்படுத்தி வாக்குகளை திரட்டும் ஒரு கட்சி உருவாகப் போகிறதா? ஏற்கனவே டக்ளஸ் தேவானந்தாவின் வாக்கு வங்கியும் அதுதான். அங்கஜனின் வாக்கு வங்கியும் அந்த மக்களை மையமாகக் கொண்டதுதான். இந்நிலையில் குறிப்பிட்ட சில சமூகங்களின் வாக்குகளை ஒன்று திரட்டி ஒரு நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தை பெற முயற்சிப்பது தமிழ் மக்களை திரட்டுமா? அல்லது சிதறடிக்குமா?

இரண்டாவது காணொளி சில நாட்களுக்கு முன் வெளிவந்தது.மன்னாரைச் சேர்ந்த இந்து மதகுருமார்களின் ஒன்றியம் மதரீதியான ஒரு பிரதிநிதித்துவத்தை வற்புறுத்தி ஓர் ஊடக சந்திப்பை ஒழுங்கு படுத்தியிருந்தது. திருக்கேதீச்சரம் வளைவு தொடர்பான சர்ச்சைகளின் பின்னணியில் இந்து சமயத்தைச் சேர்ந்தவர்கள் தங்களுக்கும் ஒரு பிரதிநிதித்துவம் வேண்டும் என்று கேட்கும் ஒரு நிலைமை தோன்றி இருக்கிறது.

சில மாதங்களுக்கு முன்பு மன்னாரை சேர்ந்த ஒரு கத்தோலிக்க மதகுரு என்னிடம் கேட்டார் கத்தோலிக்கர்களை பிரதிநிதித்துவம் செய்யும் விதத்தில் ஒரு சுயேற்சை வேட்பாளரை நிறுத்தினால் என்ன என்று. “நிறுத்தினால் மன்னாரில் அவர் அனேகமாக வெல்லக் கூடும் ஆனால் முழுத் தமிழ் மக்களும் அதனால் தோற்கடிக்கப் படக்கூடும்” என்று நான் சொன்னேன்.

கத்தோலிக்க மத குருவுக்கு நான் கூறிய அதே பதிலைத்தான் இந்து மத குருமார் ஒன்றியத்துக்கும் கூறலாம். மன்னாரிலுள்ள நிலவரங்களை பொறுத்தவரை அங்கே கத்தோலிக்க வேட்பாளர் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

ஏற்கனவே செல்வம் அடைக்கலநாதன் இருக்கிறார். விக்னேஸ்வரனின் கட்சியில் அன்ரன் புனிதநாயகம் இணையலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பெரும்பாலும் வரும் தேர்தலில் அன்ரன் புனிதநாயகம் கத்தோலிக்க வாக்குகளை அதிகம் கவரக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எதுவாயினும் மதரீதியிலான வாக்குகள் தமிழ் தேசிய திரட்சிக்குள் கரைக்கப்படுமாக இருந்தால் அது முற்போக்கானது .இல்லையென்றால் மத ரீதியாக பிரிந்து நின்று வாக்கு கேட்டால் அது தமிழ் மக்களைச் சிதறடித்து விடும்.

இவை யாவும் வடக்கில். கிழக்கிலோ புதிய அணிச் சேர்க்கைகள் ஏற்கனவே தொடங்கிவிட்டன. அவை அநேகமாக பிரதேச உணர்வுகளை முதன்மைப்படுத்துபவை அல்லது வடக்கின் முதன்மையை எதிர்பவை.

எனவே மேற்கூறப்பட்டவற்றை தொகுத்துப் பார்த்தால் மத ரீதியாகவும் சாதி ரீதியாகவும் பிரதேச ரீதியாகவும் தமிழ் மக்களை மேலும் கூறு போடும் நிலைமைகள் அதிகரித்து வருகின்றன என்றே தெரிகிறது.

இவ்வாறு தமிழ்ச் சமூகத்தில் காணப்படும் உப கூறுகள் ஒன்றுக்கொன்று முரணானவைகளாக கட்டியெழுப்பப்படுவதற்கு தமிழ் மக்கள் மத்தியில் ஒரு தேசியப் பெரும் கட்சி அல்லது பேரியக்கம் இல்லாத வெற்றிடமே காரணம். தமிழ் மக்களை ஒரு பெருந்திரளாகத் திரட்ட வல்ல ஒரு பெரும் கட்சி அல்லது பேரியக்கம் அரங்கில் இல்லை. கடந்த பத்தாண்டுகளில் அப்படிப்பட்ட ஒரு வெற்றிடம் ஏற்படக் காரணம் கூட்டமைப்புதான் .எனவே கூட்டமைப்பை பிரதியீடு செய்வதற்கு ஒரு பலமான மாற்று அணி தேவை.

ஆனால் அப்படி எதிர்பார்க்கப்பட்ட மாற்று அணிக்குள்ளேயே மோதல்கள் அதிகரித்திருக்கின்றன. இரண்டு தரப்பும் மாறி மாறி ஒருவர் மற்றவரின் மீது சூழ்ச்சிக்கு கோட்பாடுகளை புனைகிறார்கள். சேற்றை வாரி வீசுகிறார்கள்.

அதாவது எந்தக் கூட்டமைப்பு செய்வது பிழை என்று கூறி ஒரு மாற்று அணியை குறித்து சிந்திக்க பட்டதோ அதே மாற்று அணிக்குள் ஏற்பட்டிருக்கும் மோதல் ஆனது வாக்காளர்களை மேலும் குழப்புவதாக காணப்படுகிறது. அரங்கில் இப்பொழுது கூட்டமைப்பும் பலமாக இல்லை. மாற்று அணியும் பலமாக இல்லை. இது யாருக்குச் சேவகம் செய்யும் ?