Breaking News

தமிழ்த் தேசிய நீக்க அரசியல் -கோபி இரத்தினம்.!

கடந்த ஒரு பேப்பரில் அரசியலற்ற அரசியல் பற்றி எழுதியிருந்தேன் அதனுடைய  தொடர்ச்சியாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் முன்னெடுக்கப்படும் தமிழ் தேசிய நீக்கஅரசியல் பற்றியதாக இக்கட்டுரை அமைகிறது. அரசியலற்ற அரிசியலுக்கான குறியீடாகவிக்னேஸ்வரனைப் பார்ப்பதுபோன்று தமிழ்த் தேசிய நீக்க அரசியலின் குறியீடாக சுமந்திரனைக் குறிப்பிடலாம்.

தமிழ் அரசியலிலிருந்து தமிழ்த் தேசியத்தை நீக்கும் முயற்சியின் பின்னாலுள்ள கருதுகோள் இவ்வாறு அமைகிறது: முள்ளிவாய்க்கால் பேரவலம் நடைபெற்றபோது அதனைத் தடுக்க உலக நாடுகள் எதுவும் முன்வராமைக்கான காரணம் அவற்றால் தமிழ் மக்களின் விடுதலைப்போராட்டத்தை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. 

மனிதவுரிமைகளையும் ஜனநாயகத்த்தையும் விடுதலைப்புலிகள் மதிக்காமற் செயற்பட்டதனாலேயே சர்வதேச சமூகத்தின் ஆதரவினைத்தமிழர்கள் பெற்றுக் கொள்ள முடியவில்லை. ஆகவே எங்களது பக்கத்திலும் தவறினைவைத்துக் கொண்டு நாம் மற்றவர்களைக் குறைகூற முடியாது. சிங்கள அரசியல்தலைமைத்துவத்தில் தமிழ்மக்களுக்கு நீதியான தீர்வினை வழங்க வேண்டும் என்ற கருத்துடன் உள்ளவர்களை நாம் பலப்படுத்துவதன் மூலம் சிங்கள மக்களும் ஏற்றுக்கொள்ளக்கூடியவகையில் ஒரு நியாயமான தீர்வினைப் பெற்றுக்கொள்ள முடியும். முன்னர் இவ்வாறு கிடைத்த சந்தரப்பங்களை தமிழர் தரப்பு தவறவிட்டுவிட்டது. ஆகவே தீர்வு கிடையாமைக்கு நாம் சிங்களத் தரப்பை மாத்திரம் குறைகூற முடியாது.

இங்கு அனுமானிக்கப்படும் விடயங்கள்: 

மேற்குலக அரசுகள் ஒரளவுக்கு நேர்மையாகச் செயற்படுபவை. அவை ஜனநாயகத்தையும், மனிதவுரிமைகளையும் மதிப்பவை. இவற்றுக்கு முரணாகச் செயற்படுபவர்கள் மீது அவை காலந் தாழ்த்தியேனும் நடவடிக்கை எடுக்கும். அதற்காகவே ஐ.நா. போன்ற சர்வதேச அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்தவிடயங்களில் நாம் முழுமையாக நம்பிக்கை கொள்ளாவிட்டாலும் கூட, மேற்கத்தைய மற்றும் இந்திய அரசுகளின் விருப்பிற்கேற்ப நடப்பதைத்தவிர எமக்கு வேறு வழியில்லை. மேற்குறித்த விடயங்களை முன்வைத்தே தமிழ்த் தேசிய நீக்க அரசியல் முன்நகர்த்தப்படுகிறது.

2009க்கு முன்னரும் தமிழ்த்தேசிய எதிர்ப்பு அரசியலை முன்நகர்த்த எத்தனித்தவர்கள் தோல்வியடைந்தார்கள். ஆனால், முன்பு விடுதலைப்புலிகளை ஆதரித்தவர்களில் சிலரும் இப்போது இவ்வரசியலை ஏற்றுக்கொள்கிறார்கள். இரண்டு வகையானவர்கள் இவ்வாறு மாறியுள்ளார்கள் . ஒரு தரப்பினர் விடுதலைப் போராட்டத்தின் நியாயத்தை விளங்கிக் கொள்ளாமல் வெறுமனே பலமாயிருக்கிற பக்கம் சாய்பவர்கள் அல்லது மதில் மேற் பூனையாக இருந்தவர்கள். மற்றைய தரப்பினர், விடுதலைப்புலிகள் பாரிய பின்னடைவைச் சந்தித்தன் பின்னர் தோல்வி மனப்பான்மையால் பாதிக்கப்பட்டு ஏது செய்வது என்றறியாத குழப்பதில் இருப்பவர்கள்.

2009க்கு பின்னரான காலத்தில், தமிழ் அரசியலில் தமிழ்த்தேசிய நீக்கம் செய்யப்பட வேண்டும் என்ற அழுத்தம் இந்திய, மேற்குலக ஆட்சிமையங்களினால் தமிழ் அரசியல்தரப்புகள் மீது திணிக்கப்பட்டுவருகிறது. இதனை ஏற்றுக்கொண்டவர்களை மேற்படிதரப்புகள் தமிழ்மக்களின்

பிரதிநிதிகளாக ஏற்றுக் கொள்கிறார்கள். அழுத்தங்களுக்கு செவிசாய்க்க மறுப்பவர்களை நடைமுறை யதார்த்தத்தைப் புரிந்துகொள்ளாத கடுங்கோட்பாளர்களாக முத்திரை குத்திஒதுக்கி வைக்கிறார்கள். இவ்வாறான அழுத்தம் வெளிப்படையாகவேமேற்கொள்ளப்படுகிறது. 2010 ஆண்டு பெப்பரிவரியில் சர்வதேச முரண்பாடுகளுக்கான குழு (International Crisis Group) வெளியிட்ட “The Sri Lankan Tamil Diaspora after the LTTE”என்ற தலைப்பிலான அறிக்கை மேற்குலகத்தின் எதிர்பார்ப்புகளை வெளிப்படுத்துகிறது.

இதுதவிரவும், அமெரிக்க இராஜங்கத் திணைக்களம், பிரித்தானியா, இந்தியா, மற்றும் ஐரோப்பிய நாடுகளின் வெளியுறவுத்துறை அதிகாரிகளுடன் தமிழ் அரசியற்
செய்பாட்டாளர்கள் மேற்கொண்ட சந்திப்புகளிலும் இவ்விடயம் வலியுறுத்தப்பட்டுள்ளது.

தமிழ் அரசியலில் தமிழ்த் தேசிய நீக்கத்தை மேற்கொள்ளுவதற்கு அதிகார மையங்களினால் தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்தான் சுமந்திரன். ஆதலால் சுமந்திரனின் நடவடிக்கைகளிலிருந்து தமிழ்தேசிய நீக்க அரசியலை ஒரளவிற்காவது புரிந்துகொள்ள முடிகிறது. வெளிப்படையாகப் பேசும் விடயங்களிலிருந்து மட்டுமல்ல அவர் தனது சகாக்களுடன் ஊடகங்களுக்குப் புறம்பானது எனக் கூறுகிற விடயங்களிலிருந்தும் இவற்றை அறிந்துகொள்ள முடிகிறது.

💥💥💥சுமந்திரனை வெளித்தரப்புகள் தேர்ந்தெடுத்ததற்கு சமாதான காலப்பகுதியில் அவர் வெளியிட்ட கருத்துகள் காரணமாக அமைந்திருக்கலாம். 2003ம் ஆண்டு பெப்பிரவரி மாதத்தில் வெளியான Northeastern Herald பத்திரிகையில் Tamil self-determination and Sri Lanka’s sovereignty என்ற தலைப்பில் அவர் எழுதிய கட்டுரைகூட அவரை இனங்காட்டியிருக்கலாம். 

சுமந்திரனின் தொழில், மத நடவடிக்கைகளும் அவர் இதற்கு பொருத்தமானவர் என்ற நம்பிக்கையை மேற்படிதரப்புகளுக்குக் கொடுத்திருக்கும். சுமந்திரன் ஒரு சட்டத்தரணி. தனது தரப்பின் வெற்றிக்காக அத்தரப்பை நியாயப்படுத்தி வாதாடி தீர்ப்பை தமக்குச் சார்பாகப் பெற்றுக்கொள்வது அவரது தொழில். அவரது மற்றைய பணி, ச மெதடிஸ்த தேவாலயத்தில் உபதேசியார் (preacher). பொதுவில் மதப்பிரச்சாரகர்கள் ஆன்மீகவிடயங்களில் கவனம் செலுத்தாமல் பிரார்த்தனைக்கு வருபவர்களை தமது திருச்சபைமீது நம்பிக்கை கொள்ள வைப்பதனையும், புதியவர்களை இணைப்பதனையும் குறிவைத்துச் செயற்படுவார்கள். தர்க்க ரீதியாகச் சிந்திக்கும்போது தாங்கள் நம்ப மறுக்கும் விடயங்களைக்கூட மற்றவர்களை நம்ப வைப்பார்கள். இது அநேகமாக எல்லா மதப்பிரசாரகர்களுக்கும் பொருந்தும்.

இடத்திற்கேற்ப, முன்னுக்குப்பின் முரணாகப் பேசுவதனை சுமந்திரனை வாடிக்கையாகக் கொண்டிருப்பதனை மேற்குறித்த அவரது தகமைகளின் அடிப்படையிலேயே விளங்கிக்கொள்ள முடிகிறது. உதாரணத்திற்கு, இலங்கைத்த்தீவில் இழைக்கப்பட்ட போர்க்குற்றங்கள் தொடர்பில் ஒரு சர்வதேச விசாரணை முடிவடைந்து விட்டது என சுமந்திரன் கூறிவரும் விடயத்தை எடுத்துக்கொள்வோம். 

ஐ.நா. மனிதவரிமைச் சபை ஒரு விசாரணையை (OISL) நடத்தி அறிக்கையை வெளியிட்டது. சர்வதேச அமைப்பு ஒன்று இலங்கைத் தீவிற்கு வெளியில் மேற்கொண்ட விசாரைணயிது. ஆகவே மேலோட்டமாக இதனை ஒரு சர்வதேச விசாரணை என்று கூறி மக்களை நம்பவைக்க முடியும். இவ்விடயம்தொடர்பில் முழுமையான அறிவுகொண்டவர்களால் மாத்திரமே சுமந்திரன் தவறான கருத்தை வெளியிட்டு வருகிறார் என வாதிட்டு வெல்ல முடியும்.

ஐ.நா. மனிதவரிமைச்சபை OISL தொடர்பில் விசாரணை ஆரம்பிப்பதற்கு முன்னரே, தமது நடவடிக்கை தொடர்பில் ஒரு விரிவான விளக்கத்தை வெளியிட்டது. அது இப்போதும் ஐ.நா.மனிதவுரிமைச் சபையின் இணைய தளத்தில் காணப்படுகிறது.  அவர்கள் வழங்கிய விளக்கத்தில், அவ்விசாரணை வெறுமனே ஆவணங்களை ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிப்பதாகவே (desk research) அமையும் எனவும் சம்பந்தபட்ட தரப்புகளை நேரடியாக விசாரணை செய்வதோ, குறிப்பிட்டு யார் மீதாவது நடவடிக்கை எடுப்பதாகவோ இவ்விசாரணை அமையாது எனவும் தெளிவாகக் குறிப்பிட்டப்பட்டுள்ளது.

இவ்விசாரணை முடிந்து வெளியான அறிக்கை ஒரு கலப்புப் பொறிமுறையினை விசாரணையை வேண்டியிருந்தது. அதற்குப் பதிலாக அது சர்வேதச விசாரணையைக் கோரியிருக்க முடியும். அதே சமயத்தில் ஐநா. மனிதவுரிமைச் சபையில் 2015 செப்ரெம்பரில் கொண்டுவரப்பட்ட 30-1 தீர்மானத்தில் பரிந்துரைக்கப்பட்ட விடயங்களை சிறிலங்கா அரசாங்கம் நிறைவேற்றப்படாதவிடத்து சர்வதேச நீதி விசாரணைக்கு உட்படுத்தப்படுவதற்கு சாத்தியமிருக்கிறது.

இவற்றையெல்லா நன்கு அறிந்திருந்தும் சுமந்திரன் சர்வதேச விசாரணை முடிந்து விட்டது என மக்களை ஏமாற்றுகிறார். இவ்விடயங்களைப் புரிந்துகொள்ளுமளவிற்கு அடிப்படை அறிவில்லாமலும், புரிந்துகொண்டும் மக்களை ஏமாற்றுபவர்களாகவும் சிலர் அவரது தமிழ்த் தேசிய நீக்க அரசியலுககு உதவி வருகிறார்கள்.