இந்தியாவில் கொரோனா வைரஸ்: ஒரே நாளில் 2000 பேருக்கு மேல் பலி!
இந்தியாவில் இதுவரை இல்லாத அளவில் ஒரே நாளில் கொரோனா வைரஸ் காரணமாக 2000-க்கும் அதிகமானோர் பலியாகியுள்ளர்.
இந்தியாவில் கொரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள மாநிலமான மகராஷ்டிராவில் இதுவரை பதிவு செய்யப்படாத கொரோனா மரணங்கள் நேற்று கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டதை தொடர்ந்து,
இன்று காலை 9
மணியளவில் இந்திய அரசு வெளியிட்ட தரவுகளின்படி, ஒரே நாளில் அந்த மாநிலத்தில் மொத்தம் 1328 பேரின் இறப்பு பலியாகியுள்ளதாக, தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று மும்பையில் மட்டும் 862 மரணங்கள் பதிவாகியுள்ளன. இதன் மூலம் அந்த மாநிலத்தின் மொத்த கொரோனா பலி எண்ணிக்கை 5537-ஆக அதிகரித்துள்ளது.
மகராஷ்டிராவுக்கு அடுத்தபடியாக டெல்லியில் நேற்று அதிக கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளது. மகராஷ்டிராவை போல டெல்லியும் இதுவரை பதிவாகாத கொரோன மரணங்களை கணக்கில் எடுத்துக் கொண்டதால், அம்மாநிலத்தின் பலி எண்ணிக்கையும் அதிகரித்து காணப்படுகிறது.
இந்தியா முழுவதும் நேற்று புதிதாக 10,974 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவின் ஒட்டுமொத்த கொரோனா மரணங்கள் 11903-ஆக உயர்ந்துள்ளது.
நாடு முழுவதும் சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை சுமார் 1,55,000 ஆகவும் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை சுமார் 1,87,000 ஆகவும் உள்ளன.
தற்போதைய நிலவரப்படி கொரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களின் பட்டியலில் மகராஷ்டிரா, தமிழகம், டெல்லி மற்றும் குஜராத் ஆகியவை முதல் நான்கு இடங்களில் உள்ளன.
ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைகழக தரவுகளின்படி, உலக அளவில் கொரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியா நான்காம் இடத்தில் உள்ளது.








