Breaking News

தமிழ்த்தேசிய மக்கள் முன்னணிக்கு -நிக்ஸன்

ஜே.ஆர் ஜயவர்த்தனா 1982இல் விகிதாசாரத் தேர்தலை அறிமுகப்படுத்தியது இரண்டு காரணங்களின் அடிப்படையில்- ஒன்று தொகுதிவாரித் தேர்தல் முறையின் மூலம் தமிழ்த்தரப்பு எதிர்க்கட்சியாகக் கூட வரவே கூடாதென்பது, இரண்டாவது- விகிதாசாரத் தேர்தல் முறையினால் கட்சிகளுக்குள்ளேயே ஒவ்வொரு வேட்பாளர்களும் அடிபட்டு உடைப்பட்டுச் சின்னா பின்னமாக வேண்டும் என்பது-

இந்த இரண்டிலும் முதலாவது நோக்கத்தை ஜே.ஆர் அடைந்துவிட்டார் என்று சொல்வதைவிட, இலங்கை ஒற்றையாட்சி அரசு வெற்றி கொண்டதெனலாம்.

பிரதான சிங்களக் கட்சிகளுக்குள் ஏற்பட்ட முரண்பாடுகளினால் தவிர்க்க முடியாத நிலையில் மைத்திரி- ரணில் அரசாங்கத்தில் சம்பந்தன் எதிர்க்கடசித் தலைவராகப் பதவி வகிக்க முடிந்ததமைக்குக் காரணங்கள் வேறு-

சிங்களக் கட்சிகள் கூட அடிபட்டுப் புடுங்குப் பட்டு ஆட்சியைக் கூடத் தனித்து நடத்த முடியாமல் சிறிய கட்சிகளையும் இணைத்துக் கொண்ட கூட்டுக் கட்சிகளாகவே ஆட்சி அமைக்க வேண்டியதொரு நிலை, ஜே.ஆரின் இரண்டாவது நோக்கத்தினால் ஏற்பட்டிருக்கிறது.

விகிதாசாரத் தேர்தல் முறையினால் சிங்களக் கட்சிகள் கூடத் தமக்குள் அடிபட்டும் கூட்டுக் கட்சிகளோடு முரண்பட்டும் வருகின்ற நிலை, 1988 ஆம் ஆண்டில் இருந்து இன்று வரை தொடர்கதைதான்.

ஆனால் வடக்குக் கிழக்குத் தாயகப் பகுதிகளில் தமிழ்க் கட்சிகள் இந்த விகிதாசாரத் தோ்தல் முறையினால் சிங்களக் கட்சி வேட்பாளர்கள் போன்று பெரியளவில் அடிபட்டதாகக் கூற முடியாது.

ஆனாலும் 2009 ஆம் ஆண்டு மே மாதத்தின் பின்னரான சூழலில், விகிதாசாரத் தேர்தல் முறையின் கீழான விருப்பு வாக்குகளுக்காக அடிபடுகின்ற நிலைமை மறைமுகமாக இடம்பெறுகின்றது.

சாதாரண கட்சி அரசியலுக்குள் நின்று கொண்டு அதுவும் ஒற்றையாட்சி அரசியல் யாப்பின் கீழான இலங்கை நாடாளுமன்றத்தின் பிரதிநிதியாகித் தமிழ்த்தேசிய அரசியல் பிரச்சினைக்குத் தீர்வை முன்வைக்க முடியாது என்று, நான் மாத்திரமல்ல வேறு சில அரசியல் பத்தி எழுத்தாளர்களும் ஏலவே சுட்டிக்காட்டிவிட்டனர்.

இந்த நிலையில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி இம்முறையும் இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுகிறது. 2018 ஆம் பெப்ரவரி மாதம் இடம்பெற்ற உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிட்டு, வடக்குக் கிழக்கில் உள்ள சபைகள் ஒவ்வொன்றிலுமாக 92 ஆசனங்களை முன்னணி கைப்பற்றியிருந்தது.

இலங்கை ஒற்றையாட்சி அரசின் உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலைப் புறக்கணித்து வந்த, தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி, ஏன் இந்தத் தேர்தலில் போட்டியிட்டது என்ற கேள்விகள் அன்று எழுந்தன. தற்போதும் கூட இந்தக் கேள்வி உள்ளது.

ஆனால் வடக்குக் கிழக்கில் ஜனநாயக முறையில் மக்களின் ஆதரவு இருக்கிறது என்பதை வெளிப்படுத்தவும், தமிழர்கள் ஒரு தேசம் என்ற கொள்கையை முன் நிறுத்தி வலியுறுத்தவும் இந்தத் தேர்தலைத் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி பயன்படுத்தியது என்ற கருத்துக்களும் உண்டு.

92 ஆசனங்களை 2018இல் கைப்பற்றியதென்பது கூட ஒரு வகையிலான ஆரம்பம் என்றும் சிலர் சொல்லுகின்றனர். ஏனெனில் காலம் காலமாக வீட்டுச் சின்னத்துக்கு வாக்களித்துப் பழகிய மக்களை என்னதான் கொள்கை என்று பேசினாலும் உடனடியாக மாற்றிவிட முடியாது.

அத்துடன் ஏனைய கட்சிகளும் தேர்தல் காலங்களில் தமிழ்த்தேசியம் என்று அர்த்தம் புரியாமலேயே அல்லது அதனை ஒரு தேர்தல்கால லேகியமாக மாத்திரம் பயன்படுத்தியே பிரச்சாரம் செய்தனர்.

பிரச்சாரம் மாத்திரமல்ல சிங்களக் கட்சிகள் போன்று நிவாரணம் சலுகை அரசியலையும் பழக்கிவிட்டவர். ஆகவே தமிழ்த்தேசியம் என்பதை தேர்தல்கால லேகியமாக்கி நிவாரணங்களையும் சலுகைகளையும் வழங்கி மேற்கொள்ளப்படும் பிரச்சாரத்தின் மத்தியில், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியால் நின்று பிடிப்பது என்பது போர்க்காலச் சிரமம்தான்.

ஆனாலும் அதற்குள் நின்று பிடித்துக் கொள்கையின் வெற்றியாக மாற்றக் கூடிய வல்லமை முன்னணிக்கு இருந்தது என்பதை உள்ளூராட்சி சபைத் தேர்தல் முடிவுகள் காண்பித்திருந்தன- ஆனாலும் அந்தத் தேர்தலுக்கும் நாடாளுமன்றத் தேர்தலுக்குமிடையே வேறுபாடுகள் உண்டு.

எவ்வாறாயினும் சாதாரண கட்சி அரசியல் போன்று செயற்படமால், தமிழ்த்தேசியத்தை முன்நிறுத்திச் செயற்படுவதாகவே நீங்கள் கூறுகின்றீர்கள்- ஆகவே இலங்கை ஒற்றையாட்சி அரசின் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும்போது, சாதாரண கட்சி அரசியலுக்குரிய பண்புகளை நீங்கள் வெளிப்படுத்தக் கூடாது-

குறிப்பாக விருப்பு வாக்குகளுக்காக உங்கள் வேட்பாளர்கள் மோதுப்படக் கூடாது- கட்சியின் சின்னத்துக்கு மாத்திரமே வாக்களிக்க வேண்டும் என்று நீங்கள் மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்ய வேண்டும். கட்சிக்கு வாக்களித்து விட்டுப் பின்னர் அந்தக் கட்சியில் போட்டியிடும் மூன்று பேருக்குப் புள்ளடியிடும் முறைதான் இந்த விகிதாசாரத் தேர்தலின் பிரதான அடிப்படை.

ஆகவே விருப்பு வாக்கின்போது யாருக்குப் புள்ளடியிடுவது என்பதை மக்கள் தீர்மானிக்கட்டும் அல்லது விருப்பு வாக்குகளைத் தவிர்த்துக் கட்சிக்கு மாத்திரம் புள்ளியிடுமாறு நீங்கள் மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்யலாம்- (மக்களை அந்த அரசியலுக்குப் பழக்க வேண்டும்)

அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ், இலங்கை ஒற்றையாட்சி அரசியலமைப்பின் தேர்தல் சட்ட விதிகளுக்கு அமைவாகப் பதிவு செய்யப்பட்டது என நீங்கள் கூறுகின்றீர்கள்- ஆகவே அதன் சைக்கிள் சின்னத்தில் மாத்திரமே தேர்தலில் போட்டியிடுவதாக நீங்கள் மக்களுக்குக் காண்பிக்க வேண்டும்-. தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி என்பது தேசிய இயக்கம் போன்றது என்ற தோற்றப்பாட்டையும் வெளிப்படுத்துதல் அவசியமாகிறது.

சைக்கிள் சின்னத்தில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியாகப் போட்டியிடும் உங்கள் கட்சி, சாதாரண கட்சி அரசியல் பண்புகளோடு நின்று விருப்பு வாக்குகளுக்காக ஒவ்வொரு வேட்பாளர்களும் தங்களை மாத்திரம் முன் நகர்த்திப் பிரச்சாரம் செய்தால், தேசம் என்பதும் தமிழ்த்தேசிய அரசியல் என்பதும் அடிபட்டுப் போய்விடும் அல்லவா?

அன்று தீர்க்க தரிசனமாக ஜே.ஆர் விதைத்த நச்சுக் கொடி இன்று வளர்ந்து வந்து, 2009 ஆம் ஆண்டு மே மாதத்திற்குப் பின்னரான ஒரு தசாப்தகால அரசியல் சூழலில் உங்களையும் சுற்றிப் பிடித்துவிட்டது என்ற முடிவுக்கு வரக்கூடிய ஆபத்தான நிலைதான் ஏற்பட்டுள்ளது.

தற்போது வெவ்வேறு வழிகளில் தமிழ்த்தேசிய அரசியல் நீக்கம் செய்யப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில், நீங்கள் உங்களை அறியாமலேயே அந்த நச்சுக் கொடிக்குள் சிக்கக் கூடிய ஏது நிலை தென்படுகிறதல்லவா?

ஏனைய தமிழ்க் கட்சிகளை நீங்கள் குற்றம் சுமத்தி விமர்சிப்பதற்கான காரணம் எதுவோ, அந்தக் காரணங்களுக்குள் நீங்களும் இழுத்துச் செல்லப்படலாம் என்ற ஒரு ஆபத்தும் உருவாகும் அல்லவா?

விருப்பு வாக்குகளுக்காக வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் தங்களை மாத்திரமே முன் நிறுத்திப் பிரச்சாரம் செய்யும்போது, அங்கே ஒரு பிரமுகர் அரசியல் தன்மையும் வெளிப்பட ஆரம்பிக்கின்றது. தலைவர் யார், செயலாளர் யார் என்பது கூட மறைக்கப்படுகிறது.

சில இடங்களில் தலைவர், செயலாளரை மாத்திரம் மிகைப்படுத்திப் பிரச்சாரம் செய்யும் நிலையும் காணப்படுகிறது. ஆகவே ஆட்களை முன்லைப்படுத்தல் என்பதைத் தவிர்த்து தேசம் என்பதைக் கட்டியெழுப்புவதற்காகவே தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி என்பதைத் தேசிய இயக்கமாகக் காண்பித்துப் பிரச்சாரம் செய்ய வேண்டுமெனப் பலரும் கருதுகின்றனர்.

அப்படி இல்லையேல் நாங்களும் ஒரு சாதாரண அரசியல் கட்சிதான் என்று வெளிப்படையாகவே கூறுங்கள். அப்படிக் கூறினால் கொழும்பை மையமாகக் கொண்ட இலங்கை ஒற்றையாட்சி அரசுடன் பேரம் பேசலாம்.

ஏனெனில் பேரம் பேசும் அரசியல் மூலம் தமிழ்த்தேசிய அரசியலில் சாதிக்கலாம் என்று சிலர் நியாயம் கற்பிக்கின்றனர். ஆனால் தமிழ்த்தேசிய அரசியலைப் பேரம் பேசுதல் என்ற வரையறைக்குள் கொண்டுவரக் கூடாதென்பதை என்னைப் போன்ற அரசியல் பத்தி எழுத்தாளர் சிலரும் ஏலவே விளக்கமளித்துவிட்டனர். நீங்களும் அதனை மறுக்கப் போவதுமில்லை.

அத்தோடு இலங்கை அரசியல் யாப்புக்கு உட்பட்ட நீதித்துறையில் வழக்குகளைத் தாக்கல் செய்து ஈழத் தமிழர் அரசியலில் பல விடயங்களைச் சாதிக்கலாமென்று சில சட்டத்தரணிகள் நம்பிக்ககையை உருவாக்குகின்றனர். போரின் பக்க விளைவுகளான காணி அபகரித்தல், அரசியல் கைதிகளை விடுவித்தல் போன்ற விவகாரங்களைக் கூட இலங்கை நீதிமன்றம் பௌத்த தேசியக் கண்ணோட்டதில் பரிசீலித்தே பாதகமாகத் தீர்ப்பு வழங்குகிறது.

இவ்வாறானதொரு நிலையில் இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் நீங்கள் அங்கே சாதிக்கப் போவது என்ன என்ற கேள்விகளுக்கும் அப்பால், போட்டியிடுவதற்கான காரணங்கள் பற்றி நீங்கள் கூறும் விளக்கங்களை மக்கள் பலரும் நம்புகிறார்கள்

ஆனால் விருப்பு வாக்குகளுக்காக உங்கள் வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் தங்களை மாத்திரமே முன் நிறுத்திச் செய்யும் பிரச்சாரங்கள் தவிர்க்கப்பட்டுத் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியாகச் செயற்படுவதற்கான ஏற்பாடுகளை முதலில் வெளிப்படுத்த வேண்டும்.

அப்போதுதான் தேசத்தைக் கட்டியெழுப்புதல் என்ற இலக்குக்கான பாதையைச் சீர்ப்படுத்த முடியும். ஏனைய தமிழ்க் கட்சிகளில் இருந்து மக்கள் உங்களை வேறுபடுத்தியும் நோக்குவார்கள்-

-அ.நிக்ஸன்-