Breaking News

வீட்டுச் சின்னம் சாக்கடைக்குள் தள்ளப்பட்டுள்ளது?

வீட்டுச் சின்னம் சாக்கடைக்குள் தள்ளப்பட்டுள்ளது. இதனை மாற்ற வேண்டிய நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளார்கள் என சிறிரெலோ கட்சியின் செயலாளர் நாயகமும், தமிழர் சமூக ஜனநாயக கட்சியின் வேட்பாளருமான ப. உதயராசா தெரிவித்துள்ளார்.


வவுனியாவில் இன்று (20) இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போது கருத்து தெரிவித்த போதே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், நீண்ட காலமாக பல ஆசனங்களை சுவீகரித்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு இந்த பொதுத் தேர்தலில் மக்களால் நிராகரிக்கப்படுவோம் என்பதற்காக பல பொய்யான பிரச்சாரங்களை மக்கள் முன் கொண்டு வருகிறார்கள்.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன் மற்றும் சிவமோகன் ஆகியோர் எங்கள் மீதும் தமிழர் சமூக ஜனநாயக கட்சி மீதும் மோசமான விமர்சனங்களை முன் வைத்து வருகின்றனர். என்னை சிங்களவர் என பொய் பிரச்சாரம் செய்கிறார்கள். மஹிந்த ராஜபக்ஸ தமிழ் மக்களின் வாக்கை உடைப்பதற்காக என்னை அனுப்பியுள்ளதாக கூறுகிறார்கள். மற்றவர்களை பற்றி விமர்சிப்பதை விடுத்து உங்களால் என்ன செய்ய முடியும் என மக்களுக்கு கூறுங்கள்.

நீங்கள் சொல்லும் ஒவ்வொரு பொய்களும் மாற்று இனத்தவருக்கு சந்தர்ப்பம் வழங்கக் கூடிய நிலையை உருவாக்கியுள்ளது. உங்களது அரசியல் வழிநடத்தல் தவறாக இருந்தமையால் தான் வன்னியில் இந்த நிலமை உருவாகியுள்ளது.

வடமாகாணத்தில் யாழ்ப்பாணத்தின் நிலைமை வேறு. வன்னியின் நிலமை வேறு. வன்னி மூவின மக்களும் வாழும் தேர்தல் தொகுதியாகும். நீங்கள் விடும் தவறுகள் எமது பிரதிநித்துவம் மாற்று இனத்தவருக்கு போகக் கூடிய நிலைமையை உருவாக்கும். யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களை வைத்து பிழையான அரசியல் செய்யாதீர்கள். எனக்கு தெரிந்த வகையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு மிக மோசனமான பொய்களை சொல்லி வருகிறது. வீட்டுச் சின்னம் சாக்கடைக்குள் தள்ளப்பட்டுள்ளது. இதனை மாற்ற வேண்டிய நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளார்கள்.

வேறு மாவட்டங்களை சோந்தவர்கள் வந்து போட்டியிடுகிறார்கள். அவர்களை விமர்சிக்கவில்லை. முன்னாள் அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் இருக்கிறார்கள். அவர்களையும் விமர்சிக்கவில்லை. அபிவிருத்திக்காக தமிழ் அமைச்சர் உருவாவதை தடுப்பது தான் தமிழ் தேசியக் கூட்டமைப்பிக் செயற்பாடாக இருக்கிறது.

2015 ஆம் ஆண்டு தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இணைந்து ஐக்கிய தேசியக் கட்சியின் ரணில் விக்கிரமசிங்க ஊடாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு எதிர் கட்சி ஆசனங்களைப் பெற்று அந்த 5 வருடங்களுக்குள் தமிழ் மக்களுக்காக எந்தவிதமான செயற்பாடுகளையும் செய்யவில்லை. அரசியல் கைதிகள், காணாமல் ஆக்கப்பட்டோர், உயர்பாதுகாப்பு வலய காணிகள் என எது சம்மந்தமான நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.