இங்கிலாந்தை தெறிக்கவிட்டு வெஸ்ட் இண்டீஸ் அணி அபார வெற்றி!! - இங்கிலாந்து மண்ணில்
இங்கிலாந்து, மேற்கிந்திய அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி, இங்கிலாந்தின் ஹாம்ப்ஷயர் நகரில் உள்ள ரோஸ் பெளவுல் மைதானத்தில் கடந்த 8 ஆம் தேதி தொடங்கியது.
டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. முதல் இரண்டு நாட்களும் இங்கிலாந்து அணி பேட்டிங் செய்தபோது, மழை மற்றும் மேக மூட்டத்துடன் வானிலை காணப்பட்டு பந்து வீச்சாளர்களுக்கு ஆடுகளம் சாதகமாக மாறியது.
பந்துகள் தாறுமாறாக ஸ்விங் ஆனதால் இங்கிலாந்து அணி ரன் குவிப்பில் ஈடுபட முடியாமல், முதல் இன்னிங்சில் 204 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. அதிகபட்சமாக கேப்டன் (பொறுப்பு) பென் ஸ்டோக்ஸ் 43 ரன்கள் சேர்த்தார்.
வெற்றியை நோக்கி வெஸ்ட் இண்டீஸ்.... விக்கெட்களை வீழ்த்த போராடும் இங்கிலாந்து பெளலர்கள்!!
மூன்றாம் நாள் மேற்கிந்தியத் தீவுகள் அணியினர் பேட்டிங் செய்தபோது, வானம் பிரகாசமாகக் காணப்பட்டது. இதனால், இங்கிலாந்து அணி பந்து வீச்சாளர்கள் பந்துகளை ஸ்விங் செய்வதற்குத் திணறினர். மேற்கிந்தியத் தீவுகள் அணி நிதானமாக ஆடி ரன் குவிப்பில் ஈடுபட்டது.
பிராத்வெயிட் (65 ரன்கள்) மற்றும் டௌரிச் (61 ரன்கள்) ஆகியோர் அரை சதம் விளாசி, அணியின் ஸ்கோர் உயர்வதற்கு காரணமாக இருந்தனர். முதல் இன்னிங்ஸில் மேற்கிந்தியத் தீவுகள் அணி 318 ரன்கள் எடுத்து 114 ரன்கள் முன்னிலை பெற்று அசத்தினர்.
114 ரன்கள் பின்தங்கிய நிலையில், இரண்டாம் இன்னிங்ஸை விளையாடிய இங்கிலாந்து அணி 313 ரன்களுக்கு ஆட்டமிழந்து, மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு 200 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயம் செய்தது.
ஐந்தாம் நாள் முற்பகுதியில் 200 ரன்கள் வெற்றி இலக்கை துரத்திக் கொண்டு களமிறங்கிய மேற்கிந்தியத் தீவுகள் அணி, உணவு இடைவேளைக்கு முன்பு வரை 3 விக்கெட் இழப்பிற்கு 35 ரன்கள் எடுத்துத் தடுமாறியது. இதனால், இங்கிலாந்து அணிக்கு வெற்றி வாய்ப்பு சற்று அதிகரித்தது.
உணவு இடைவேளைக்குப் பின் மேற்கிந்தியத் தீவுகள் அணியின் கை ஓங்கியது. விக்கெட்களை தக்க வைத்துக் கொண்டு நிதானமாக ரன்கள் சேர்த்தது. பிராத்வெயிட், சாய் ஹோப், ஷமர் ப்ரூக்ஸ் ஆகியோர் சொற்ப ரன்களுக்கு வந்த வேகத்தில் நடையைக் கட்டினர்.
நிதானமாக ஆடிய ரௌஸ்டன் சேஸ் 37 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பிளாக்வுட் 95 ரன்கள் விளாசி வெற்றிக்கு உதவினார். ஹோல்டர் (14* ரன்கள்) மற்றும் ஜான் கேம்பில் (*8 ரன்கள்) ஆகியோர் கடைசி வரை களத்திலிருந்தனர்.
ஆட்டத்தின் இரண்டாவது ஓவரின்போது, ஜோப்ரா ஆர்ச்சர் வீசிய ‘யாக்கர்’ பந்தில் தொடக்க ஆட்டக்காரர் கேம்பல் காயமுற்றார். அதன் காரணாமாக, ஒரு ரன் எடுத்திருந்த நிலையில் அவர் பெவிலியன் திரும்பினார். பின்பு, பிளாக்வுட் விக்கெட்டிற்குப் பின் கேம்பல் 60 ஆவது ஓவரில் மீண்டும் களமிறங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
2000 ஆம் ஆண்டிற்குப் பின் இங்கிலாந்து மண்ணில் மேற்கிந்தியத் தீவுகள் அணி இரண்டாவது முறை டெஸ்ட் வெற்றியை பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.