Breaking News

இடைக்கால கணக்கறிக்கை பாராளுமன்றில் இன்று விவாதத்திற்கு!


நாடாளுமன்ற ஒழுங்குப் புத்தகத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள அடுத்துவரும் நான்கு மாதகால செலவீனங்களுக்கான இடைக்கால கணக்கறிக்கை இன்றைய தினம் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. 

நேற்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது இடைக்கால கணக்கறிக்கைக்கான அனுமதி கிடைக்க பெற்றுள்ளது. இதற்கமைய, நான்கு மாதகாலத்திற்கான ஆயிரத்து 300 பில்லியன் ரூபாவை விடவும் அதிகரிக்காத செலவீனங்களுக்கான அனுமதியைக் கோரி அந்த இடைக்கால கணக்கறிக்கை இன்றைய தினம் நாடாளுமன்றில் முன்வைக்கப்படவுள்ளது.

இதையடுத்து, இன்றும் நாளையும் விவாதத்திற்கு உட்படுத்தி, நிறைவேற்றப்படவுள்ளது. இதேவேளை, மறு அறிவித்தல் வரை நாடாளுமன்றத்தின் பொது மக்கள் பார்வை கூடம் மீள திறக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. 

நாடாளுமன்றத்தின் படைக்கல சேவிதர் நரேந்திர பெர்ணாண்டோ இதனை தெரிவித்துள்ளார். 

கொவிட் 19 தொற்று காரணமாக நாடாளுமன்றத்தின் பொதுமக்கள் பார்வை கூடம் அண்மைக்காலமாக மூடப்பட்டுள்ளது. சுகாதார அறிவுறுத்தலுக்கு அமைவாக மறு அறிவித்தல் வரை அதனை மீள திறக்காதிருப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். 

நாடாளுமன்ற பொதுமக்கள் பார்வை கூடம் மீள திறக்கப்படும் திகதி குறித்த அறிவிப்பு சுகாதார துறையினரின் ஆலோசனையின் படி எதிர்காலத்தில் வெளியிடப்படும் எனவும் நாடாளுமன்றத்தின் படைக்கல சேவிதர் நரேந்திர பெர்ணாண்டோ தெரிவித்துள்ளார்.