Breaking News

ஜனாதிபதி ஊடக பிரிவு வௌியிட்டுள்ள அறிக்கை!

தற்போதைய அரசாங்கம் அதிகாரத்திற்கு வந்ததன் பின்னர், முன்னர் இல்லாத அளவில் சுற்றாடல் அழிக்கப்படுவதாக குறிப்பிடும் பொய்யான செய்திகளை பரப்புவதற்கு முயற்சிகள் எடுப்பது இனங்காணப்பட்டுள்ளது. 

காடுகளுக்கு தீயிட்டு அழிப்பதாகவும் இயற்கையாக காடுகளில் உள்ள மரங்களை வெட்டுவதாகவும் இந்த பொய்யான செய்திகளினால் குறிப்பிடப்படுகின்றது. 

இதற்கு முன்னர் எக்காலத்திலும் இவ்வாறான சுற்றாடல் அழிவுகள் நடைபெறவில்லை என்றும் அரசாங்கம் அவ்வாறன சட்ட விரோத செயல்களில் முன்னர் மௌனம் காப்பதாகவும் குறிப்பிட்டு இவ்வாறான செய்திகளை உருவாக்குவதற்கு முயற்சி எடுக்கின்றனர். இவ்வாறான செய்திகளில் முழுமையாக பொய் மற்றும் திரிவுபடுத்தப்பட்ட தகவல்கள் அடங்கியுள்ளமை அவதானிக்கப்பட்டுள்ளது. 

சுற்றாடல் அழிவுகள் தொடர்பாக கூறப்படுகின்ற பொய்யான செய்திகள் விசேடமாக சமூக ஊடகங்களில் மற்றும் ஒரு சில அச்சு ஊடகம், தொலைக்காட்சி மற்றும் வானொலிகளிலும் பிரச்சாரம் செய்யப்படுகின்றது. இவ்வாறாக வெளியிடப்படுகின்ற செய்திகள் பொய்யானவை என்பது தகுந்த ஆதாரங்களுடன் உறுதிப்படுத்தப்படும் போது அவை சமூக ஊடகங்களிலிருந்து நீக்கப்படுகின்றது. 

பின்னர் மீண்டும் வேறொரு பொய்யான செய்தி பிரசுரிக்கப்படுகின்றது. எதிர்க் கட்சியினர் மற்றும் அவர்களின் ஆதரவாளர்கள் பொய்யான செய்திகளை பரப்புகின்றனர். அவர்களின் கூட்டங்கள் ஊடக அறிக்கைகள் மற்றும் நேர்காணல்களின் போது பொய்யான செய்திகளுக்கு மிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. 

மகாவலி அதிகார சபைக்கு உட்பட்ட ´எச்´ வலயத்தின், அனுராதபுரம் இஹலதலாவ குளத்தை புனர்நிர்மாணம் செய்யும்போது பாரிய காடழிப்பு இடம்பெறுவதாக குற்றம் சுமத்தி தனியார் தொலைக்காட்சி நிறுவனம் ஒன்று கடந்த செப்டெம்பர் 15 ஆம் திகதி தமது செய்தி அறிக்கையில் உள்ளடக்கப்பட்டிருந்த தகவல்கள் பொய்யான செய்திகளை உருவாக்கி சமூக மயப்படுத்தும் முயற்சிக்கு ஒரு உதாரணமாகும். 

வன அழிப்புக்கு மேலதிகமாக பாரிய ஊழல்கள் இடம்பெறுவதாகவும் அதில் குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. 

தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய செய்திகள் முழுமையாக பொய்யானவை என்று இலங்கை மகாவலி அதிகார சபையின் ´எச்´ வலயத்தின் வதிவிட முகாமையாளர் உபய கல்யாண குமார செப்டெம்பர் 17 ஆம் திகதி மகாவலி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் அவர்களுக்கு சாட்சிகளுடன் அறிவித்திருந்தார். 

அதில் குறிப்பிடப்படும் வகையில் 2016ஆம் ஆண்டு ஏற்பட்ட பாரிய மழை வீழ்ச்சியினால் இஹலதலாவ குளத்தின் கரை உடையும் அபாயம் ஏற்பட்டது. இராணுவத்தினர் மற்றும் பிரதேசத்தினரின் ஒத்துழைப்புடன் மணல் மூட்டைகள் அடுக்கப்பட்டு குளத்தின் கரை தற்காலிகமாக பாதுகாக்கப்பட்டது. கரை உடைந்திருந்தால் தலாவ நகரம் மற்றும் புராதன கிராமம் முழுமையாக நீரில் முழ்கியிருக்கும் கொழும்பு – யாழ்ப்பாணம் வீதி மற்றும் அனுராதபுரம் – பாதெனிய வீதியும் அதிகளவில் சேதமடைந்திருக்கும். 

பின்னர் கமத்தொழில் அமைச்சினால் காலநிலை சீர்கேடுகளை குறைக்கும் வேலைத்திட்டத்தின் கீழ் குளத்தை புனர்நிர்மாணம் செய்வதற்காக உலக வங்கி 38.9 மில்லியன் ரூபாவை நன்கொடையாக வழங்கியது. இத்திட்டத்தின் செயற்பாடுகள் கடந்த ஜுலை மாதத்தில் ஆரம்பிக்கப்பட்டது. புனர்நிர்மாண செயற்திட்டத்தின் முன்னேற்றம் வங்கியினால் கண்காணிக்கப்படுகின்றது. 

புனர்நிர்மாண செயற்திட்டத்தில் குளம் மற்றும் குளத்தின் கரையில் வளர்ந்துள்ள 80 மரங்கள் அகற்றப்பட்டன. அவை அனைத்தும் மாறா மரங்களாகும் இத்திட்டத்திற்கு சுற்றாடல் தகுதிச் சான்றிதழ் மற்றும் புவிச் சரிதவியல் அளவை சுரங்கப் பணியகத்தின் அனுமதியும் கிடைத்துள்ளது. அனுமதி வழங்கிய கடிதங்களில் கைத்தெழுத்திட்டிருப்பது புவிச் சரிதவியல் அளவை சுரங்கப் பணியகத்தின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி சி.எச்.ஈ.ஆர்.சிறிவர்தன மற்றும் காலநிலை சீர்கேடுகளை குறைக்கும் செயற்திட்டத்தின் பணிப்பாளர், பொறியியலாளர் டி.சீ.எஸ்.எலக்கந்த ஆகியோராவர். வெட்டப்பட்ட மரங்கள் அரச மரக்கூட்டுத்தாபனத்தின் மூலம் அகற்றப்பட்டது. 

குளத்தை புனர்நிர்மாணம் செய்யும்போது பாரியளவில் காடழிப்பு இடம்பெறுவதாக குற்றம் சுமத்திய தனியார் தொலைக்காட்சி நிறுவனம், இந்த உண்மையான தகவல்கள் எதையும் குறிப்பிடவில்லை. பொதுமக்களை திசை திருப்புவதற்காக வேண்டுமென்றே பொய்யான செய்திகளை உருவாக்கி பல்வேறு ஊடகங்களின் மூலம் சமூகமயப்படுத்துபவர்களை இனங்கண்டு அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.