Breaking News

அத்தியாவசிய சேவை ஊழியர்களுக்கு பயணிக்க தடையில்லை!

தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமுலிலுள்ள இடங்களில் அத்தியாவசிய சேவை நிறுவனங்களைச் சேர்ந்த ஊழியர்கள், பயணங்களை மேற்கொள்வதில் தடையில்லை என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதி பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். 

மின்விநியோகம், தொடர்பாடல் முதலான துறைகளைச் சேர்ந்தவர்கள், தமது கடமைக்குரிய அடையாள அட்டைகளைப் பயன்படுத்தி பயணம் செய்ய முடியுமென பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறினார்.  

கொழும்பு மாவட்டத்தின் ஐந்து பொலிஸ் பிரிவுகளில் நேற்று (22) காலை தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. மட்டக்குளி, முகத்துவாரம் (மோதர) புளுமென்டல், கிராண்ட்பாஸ், வெல்லம்பிட்டி ஆகிய பொலிஸ் பிரிவுகளில் மறு அறிவித்தல் வரை தற்போது ஊரடங்குச் சட்டம் அமுல் படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.  

கம்பஹா மாவட்டத்தின் 33 பொலிஸ் பிரிவுகளிலும், குருநாகல் மாவட்டத்தின் குளியாபிட்டிய, கிரிஉல்ல, நாரம்மல, தும்மலசூரிய, பன்னல ஆகிய பொலிஸ் பிரிவுகளில் பொலிஸ் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் தொடர்ந்தும் அமுலாகிறது.  

தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டது முதல் இதுவரை அதனை மீறிய 596 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர், 76 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.  

(அரசாங்க தகவல் திணைக்களம்)