Breaking News

துருக்கி நிலநடுக்கம் ; உயிரிழப்பு அதிகரிப்பு


துருக்கி மற்றும் கிரீஸ் நாடுகளில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 19 ஆக உயர்ந்துள்ளது. காயமடைந்தோர் எண்ணிக்கை 700ஐக் கடந்துள்ளது. 

துருக்கியின் ஏஜியன் கடல்பகுதியை மையமாக வைத்து நேற்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவு கோலில் 7 புள்ளி பூஜ்யம் ஆக பதிவான நிலநடுக்கம் காரணமாக துருக்கியின் இஸ்மிர் நகரில் கட்டடங்கள் குலுங்கின. இதனால் பொதுமக்கள் சாலைகளில் தஞ்சமடைந்தனர்.  

சில நொடிகளே நீடித்த நிலநடுக்கம் காரணமாக இஸ்மிர் நகரில் மட்டும் 20க்கும் மேற்பட்ட அடுக்கு மாடிக் குடியிருப்புகள் சரிந்து விழுந்தன.  

நிலநடுக்கம் காரணமாக துருக்கியின் இஸ்மிர் மாகாணத்தின் சில பகுதிகளிலும், கிரேக்க தீவான சமோஸிலும், செஸ்மி மற்றும் செஃபெரிஹிசர் பகுதிகளில் சுனாமி அலைகள் ஊருக்குள் புகுந்தன.  

சக்தி வாய்ந்த நிலநடுக்கம் காரணமாக துருக்கியின் மேற்கில் கடலோரப் பகுதிகளில் 17 பேர் கொல்லப்பட்டதாகவும், கிரேக்க தீவான சமோஸில் இரண்டு இளைஞர்கள் இறந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். துருக்கியில் மட்டும் குறைந்தது 709 பேர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டின் பேரிடர் நிறுவனம் தெரிவித்துள்ளது. கட்டட இடிபாட்டுக்குள் சிக்கியவர்கள் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு வருகின்றனர்.  

நிலநடுக்கத்தைத் தொடர்ந்து 196 முறை பின் அதிர்வுகள் ஏற்பட்டதாக புவியியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். அவற்றில் சில ரிக்டர் அளவு கோலில் 4 புள்ளிகளுக்கு மேல் பதிவாகி உள்ளதால் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறும் அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.