Breaking News

ஊரடங்கு உத்தரவு தொடர்பில் இராணுவ தளபதி தெரிவித்த விடயம்!


மேல் மாகாணத்தில் அமுல்ப்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் நாளை அதிகாலை 5 மணியுடன் தளர்த்தப்படவுள்ளது. இராணுவ தளபதி லெப்டினன் ஜென்ரல் சவேந்திர சில்வா இதனை தெரிவித்துள்ளார்.

எனினும், முன்னதாகவே ஊரடங்கு சட்டம் அமுல்ப்படுத்தப்பட்ட 68 காவற்துறை பிரதேசங்களுக்கும் நாளைய தினம் ஊரடங்கு சட்டம் நீக்கப்படமாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேல் மாகாணத்தில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்ப்படுத்தப்பட்ட காலப்பகுதியில் வெளிமாவட்டங்களுக்கு சென்று மீண்டும் திரும்புவர்கள் தொடர்பில் நாளை முதல் மாவட்ட எல்லைகளில் நிறுத்தப்பட்டுள்ள காவற்துறை அதிகாரிகளின் ஊடாக தகவல்கள் பெறப்படவுள்ளன.

இதனையடுத்து அவ்வாறு மேல்மாகாணம் மற்றும் குளியாப்பிட்டியில் இருந்து வெளிமாவட்டங்களுக்கு சென்றவர்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படவுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர், பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

அதேநேரம், தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி மேல் மாகாணத்தில் இருந்து வெளிமாவட்டங்களுக்கு சென்றவர்களில் இதுவரை 454 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

மேல் மாகாணத்தில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு செல்வதை தவிர்க்குமாறும், அவ்வாறு செல்வதால் ஏனைய மாவட்டங்களுக்கும் கொவிட் 19 தொற்று பரவல் ஏற்பட வாய்ப்புள்ளதாக அறிவுறுத்தப்பட்டிருந்தது.

எனினும் அதனை பொருட்படுத்தாது தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்ட காலத்தில் மேல் மாகாணத்தில் இருந்து வெளிமாவட்டங்களுக்கு பலர் சென்றிருந்தனர்.

இந்தநிலையில் அவ்வாறு மேல் மாகாணம் மற்றும் குளியாப்பிட்டியில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு சென்றவர்கள் தொடர்பில் கண்டறிந்து அவர்களை சுயதனிமைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் அவர்கள் தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ், தனிமைப்படுத்தலுக்கு அனுப்பி வைக்கப்படுவர்.

மேலும், தற்போது மேல் மாகாணம் மற்றும் குளியாப்பிட்டியில் ஊரடங்கு சட்டம் அமுல்ப்படுத்தப்பட்டிருந்த காலப்பகுதியில் வெளிமாவட்டங்களுக்கு சென்றுள்ளவர்கள் அவர்கள் தங்கியுள்ள இடங்களிலேயே 14 நாட்கள் சுயதனிமைப்படுத்தப்படவுள்ளனர்.

அதன் பின்னர், அவர்களுக்கு 10 ஆயிரம் ரூபா அபராதம் அல்லது, 6 மாத கால சிறை தண்டனை விதிக்கப்படவுள்ளதாகவும் காவற்துறை பேச்சாளர் பிரதி காவற்துறை மா அதிபர் அஜித் ரோஹண குறிப்பிட்டுள்ளார்.