Breaking News

ஓடிடி ரிலீஸ் குறித்து 'மாஸ்டர்' தயாரிப்பாளரின் அதிகாரபூர்வ அறிவிப்பு!


தளபதி விஜய் நடிப்பில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அனிருத் இசையில் உருவான ’மாஸ்டர்’ திரைப்படம் ஓடிடியில் வெளியாகாது என்றும் திரையரங்கில் தான் வெளியாகும் என்று ஏற்கனவே பலமுறை தயாரிப்பாளர் தரப்பிலிருந்து அறிக்கைகள் வெளிவந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. 

இருப்பினும் நேற்று மாலை முதல் ’மாஸ்டர்’ திரைப்படம் ஓடிடியில் வெளியாக இருப்பதாகவும் இதற்கான பேச்சுவார்த்தை நடந்து விட்டதாகவும் செய்திகள் வெளியானது. இதனை அடுத்து ’மாஸ்டர்’ திரைப்படத்தின் தயாரிப்பாளர் மீண்டும் இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அவர் சற்றுமுன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:  

தற்போதைய கொரோனா வைரஸ் பாதிப்பு நேரத்தில் அனைவரும் பாதுகாப்பாக இருப்பீர்கள் என்று நாங்கள் நம்புகிறோம். மேலும் ’மாஸ்டர்’ திரைப்படத்தை ரசிகர்கள் கொண்டாடும் வகையில் திரையரங்குகளில் ரிலீஸ் செய்ய வேண்டும் என்பது மட்டுமே எங்களது நோக்கம். அந்த ஒரு மிகப் பெரிய நாளுக்காக நாங்கள் காத்திருக்கின்றோம். இந்த படம் குறித்து கடந்த சில நாட்களாக ஏராளமான வதந்திகள் வெளிவந்து கொண்டிருப்பதை அடுத்து நாங்கள் இதனை தெளிவுபடுத்த வேண்டிய நிலையில் உள்ளோம்.  

’மாஸ்டர்’ திரைப்படத்தை ஓடிடியில் ரிலீஸ் செய்ய எங்களுக்கு வாய்ப்பு கிடைத்த போதும் நாங்கள் திரையரங்குகளில் மட்டுமே ரிலீஸ் செய்ய விரும்புகிறோம். ரசிகர்களும் ’மாஸ்டர்’ படத்தை தியேட்டரில் காணவே விரும்புகின்றனர். ஏனெனில் திரையரங்குகள் மீண்டு வரவேண்டும் என்பதே எங்கள் நோக்கம். இதற்கு திரையரங்கு உரிமையாளர்களும் எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு அளிக்க வேண்டும் என்று நாங்கள் கேட்டுக் கொள்கிறோம். ’மாஸ்டர்’ திரைப்படம் ரிலீஸ் தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புடன் விரைவில் சந்திப்போம்’ என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது