புரெவி புயல் இலங்கையை நெருங்கியது; மக்கள் அவதானம்!
‘புரெவி புயல்’ இலங்கையின் கிழக்கு கரையை இன்றிரவு 7 மணிக்கும் இரவு 10 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் கடக்கும் என எதிர்பார்ப்பதாக, வானிலை அவதான நிலையம் அறிவித்துள்ளது.
இந்த சூறாவளி கிழக்கு கரையோரத்திலிருந்து மேற்கு நோக்கி நகர்ந்து மன்னார் வளைகுடாவினூடாக வெளியேறும் என எதிர்பார்க்கப்படுகின்றதாக வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இதன்போது கிழக்கு, வடக்கு, வடமத்திய, வடமேல், மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் இடையிடையே மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
சில இடங்களில் 200 மி.மீ க்கும் அதிகமான மிகப் பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்நிலையில், சீரற்ற வானிலை நிலைமைகள் குறித்து அவசர தகவல்களுக்கு 117 என்ற விசேட தொலைபேசி இலக்கத்தை அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.
நிலவுகின்ற சீரற்ற காலநிலை காரணமாக ஏதேனும் அவசர தேவைகள் காணப்படுமாயின் 117 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பினை மேற்கொள்ளுமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் பொது மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.
இதேவேளை வடக்கு மாகாணத்தில் 4 மாவட்டங்களில் நாளை வியாழக்கிழமையும் மறுநாள் வெள்ளிக்கிழமையும் பாடசாலைகள் மூடப்படும் என்று மாகாண ஆளுநர், பி.எம்.எஸ். சார்ள்ஸ் அறிவித்துள்ளார்.
சீரற்ற காலநிலை காரணமாக இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் வடக்கு, வட மத்திய, வட மேல் மாகாணங்களில் மழை பெய்து வருவதோடு, திருகோணமலை மாவட்டத்திலும் இடைக்கிடையே மழை பெய்து வருவதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த புயல் நிலை காரணமாக பொது மக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.








