Breaking News

தமிழ் அரசியல் கைதிகளின் பாதுகாப்பைஉறுதிப்படுத்துங்கள்- சிவசக்தி ஆனந்தன்!

 



அனுராதபுரத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் அனைவரினதும் பாதுகாப்பை உறுதிப்படுத்துங்கள் என தமிழ்த் மக்கள் தேசியக் கூட்டணியின் பொதுச்செயலாளர் சிவசக்தி ஆனந்தன் பகிரங்க கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.

சிவசக்தி ஆனந்தன் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு வலியுறுத்தியுள்ளார்.

குறித்த அறிக்கையில் சிவசக்தி ஆனந்தன் மேலும் கூறியுள்ளதாவது, “கடந்த ஞாயிற்றுக்கிழமை மதுபோதையில் அனுராதபுரம் சிறைச்சாலைக்குள் தனது சகபாடிகளுடன் பிரவேசித்த விடயதானத்திற்கு பொறுப்பாகவிருந்த இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த, தமிழ் அரசியல் கைதிகள் அனைவரையும் முழந்தாளிடச் செய்து இருவரை மிகமோசமாக அச்சுறுத்தியுள்ளார்.

அத்துடன் காலணிகளை நாக்கால் சுத்தம் செய்யுமாறு மனித விழுமியங்களுக்கு முற்றிலும் முரணான மிலேச்சத்தனமான செயற்பாடுகளை முன்னெடுத்திருப்பதாகவும் குரலற்றவர்களுக்கான குரல் அமைப்பின் தலைவர் கோமகன் குறிப்பிட்டிருக்கின்றார்.

இவ்விதமான செயற்பாடுகள் இந்த நாட்டில் சிறுபான்மையினத் தேசிய இனங்களை தற்போது ஆட்சியில் உள்ளவர்கள் எவ்வாறு நடத்துகின்றார்கள் என்பதை சர்வதேசத்திற்கு வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.

ஆகவேஇ இத்தகைய குரூரமான மனோநிலை கொண்டவர்களிடத்தில் நீதியை, நியாயத்தினை எதிர்பார்க்க முடியுமா என்பதும் அப்பட்டமாக வெளியாகியுள்ளது.

தற்போது இராஜாங்க அமைச்சர் சிறைச்சாலை விடயதானத்திலிருந்து மட்டும் பதவியில் இருந்து இராஜினாமாச் செய்துள்ளார். இந்த செயற்பாட்டை அரசாங்கம் குறித்த விடயத்திற்கான பொறுப்புக்கூறலாக படம் காட்டுவதற்கு முயற்சிக்கின்றது.

மேலும்,சிறைச்சாலை நிருவாகம் இவ்விதமான சம்பவம் ஒன்று நடைபெறவில்லை என்கிறது. இராஜாங்க அமைச்சர் சிறைக்குச் சென்றேன் மதுபோதையில்லை என்று வாக்குமூலம் கூறுகின்றார்.

இந்த நிலையில் அனுராதபுரம் சிறைச்சாலையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகள் மிகுந்த பாதுகாப்பு அச்சத்திற்கு உள்ளாகியிருப்பதாக அவர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

அவ்வாறிருக்கையில், மிக சொற்பமான எண்ணிக்கையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளுக்கு திரைமறைவில் தீட்டப்படும் திட்டங்களால் ஆபத்துக்கள் ஏற்பட்டு விடுமோ என்ற அச்சம் வெகுவாகவே ஏற்பட்டுள்ளது.

இதனைவிட, அதிகாரத்திலுள்ள இராஜாங்க அமைச்சர் ஒருவருக்கு எதிராக சாட்சியமளிக்கின்றபோது அவர்களின் பாதுகாப்பு நிச்சயம் கேள்விக்குறியாகும். சிறை அதிகாரிகளும் இந்த விடயத்தில் நியாயமாக நடந்துகொள்ளும் மனோநிலையில் இல்லை.

ஆகவே வேறெந்த காரணங்களை வைத்தும் தமிழ் அரசியல் கைதிகள் பழிவாங்கப்படுவதற்கும் வாய்ப்புக்கள் இல்லாமல் இல்லை. இதனால் அவர்களின் பாதுகாப்பை உடன் உறுதிப்படுத்த வேண்டும்.

அதன் முதற்கட்டமாக அவர்களை வடக்கு கிழக்கில் உள்ள சிறைச்சாலைகளுக்கு இடமாற்ற வேண்டும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.