Breaking News

தமிழ் அரசியல் கைதிகளை நேரில் சந்தித்த கஜேந்திரன் !

 


அனுராதபுரம் சிறைச்சாலையிலுள்ள தமிழ் அரசியல் கைதிகளை, தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன், நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.

சிறைச்சாலையிலுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் உறவினர்களின் வேண்டுகோளுக்கிணங்க, நேற்று (திங்கட்கிழமை) அவர்களை சந்தித்ததாக செல்வராசா கஜேந்திரன் தெரிவித்தார்.

கடந்த 12ம் திகதி, சிறைச்சாலை இராஜாங்க அமைச்சர் லொஹான் ரக்வத்த, அனுராதபுரம் சிறைச்சாலைக்குச்சென்று, அங்குள்ள தமிழ் அரசியல் கைதிகளை அழைத்து அவர்களுக்கு உயிர் அச்சுறுத்தல் மேற்கொண்ட சம்பவத்தை நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தனது ருவிட்டர் பதிவினூடாக வெளிக்கொண்டு வந்தார்.

அதனைத் தொடர்ந்து குறித்த சம்பவம் தொடர்பாக பல்வேறு தரப்புகளினாலும் அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கப்பட்டதை தொடர்ந்து,   சிறைச்சாலை அமைச்சர் லொஹான் ரக்வத்த தனது அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்திருந்தார்.

இந்த நிலையில் குறித்த சம்பவத்தை அடுத்து தங்களுடைய உறவுகளின் பாதுகாப்பு குறித்து அச்சமைடைந்துள்ள அரசியல் கைதிகளின் உறவுகள், அவர்களை நேரில் சென்று பார்வையிடுமாறு கேட்டுக்கொண்டதன் பிரகாரம்,2ஆவது முறையாகவும் அவர்களை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் சென்று பார்வையிட்டுள்ளனர்.

இதற்கு முன்னரும்,  அனுராதபுரம் சிறைச்சாலைக்கு முன்னணியின் தலைவர், செயலாளர் சட்டத்தரணிகள் கடந்த 16ம் திகதி தமிழ் அரசியல் கைதிகளுடன் சந்திப்பினை மேற்கொண்டிருந்தனர்.

இந்த நிலையில் நேற்றும், தமிழ் அரசியல் கைதிகளுடன் சந்திப்பினை மேற்கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன், “குறித்த அச்சுறுத்தல் சம்பவத்தைத் தொடர்ந்து, தமிழ் அரசியல் கைதிகள் மிகவும் உளரீதியாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஆகவே, குறித்த சம்பவத்தில் ஈடுபட்ட அமைச்சர் பதவி விலகுவது மட்டுமல்லாமல், உரிய விசாரணைகளை மேற்கொண்டு அவர் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

அத்துடன், அரசியல் கைதிகளுடைய வழக்குகள் இழுபறிகளின்றி விசாரணைகளுக்கு எடுத்துக்கொள்ளப்பட வேண்டும்.

மேலும், விசாரணைக்காலம் வரை அவர்கள் தமது சொந்த பிரதேசங்களுக்கு அருகாமையிலுள்ள சிறைச்சாலைக்கு மாற்றப்பட வேண்டும்”  என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.