Breaking News

தமிழரசை விட்டு வெளியேறுகிறது ரெலோ?

பொய்களைத் தேடிக் கண்டுபிடித்து, சரியான பதில் ஏற்பாடுகளை மேற்கொள்ளாதவர்கள் பின்னர் கவலைப்படுவர் என்பது என் கருத்து. ஏற்பதும், கவனத்தில் எடுப்பதும், எடுக்காமல் விடுவதும் அவரவர்களைப் பொறுத்தது.கூட்டமைப்புத் தொடர்பில் தமிழரசின் பலவீனத்தைத் பயன்படுத்தியே தமிழரசை ஓரம் கட்டி, ஒட்ட வெட்டுவதற்குத் திட்டம் வகுத்து, கனகச்சிதமாகத் தயாராகி விட்டது ரெலோ. மாவை சேனாதிராசாவின் பலவீனமான தமிழரசுத் தலைமயையும், சம்பந்தனின் செயற்றிறனற்ற போக்கையும், தாங்கள்தான் பிரதான பங்காளிக் கட்சி என்ற தமிழரசின் மமதை நடத்தையையும் சரியாகப் பயன்படுத்திகாய் நகர்த்தும் தந்திரோபாயத்தை ரெலோ முன்னெடுக்கின்றது.

இரண்டு நாள்களுக்கு முன்னர் சூம் முறையில் நடைபெற்ற ரெலோவின் மத்திய குழுக் கூட்டத்தில் ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதனின் உரையின் வாசகங்களுக்கு இடையே இந்தத் தந்திரோபாயத் திட்டம் மறைந்து கிடப்பது தெளிவாகத் தெரிந்ததாகக் கட்சியின் பிரமுகர்கள் சிலர் குறிப்பிட்டனர்.தமிழரசு ஏனைய பங்காளிக் கட்சிகளைத் தூக்கி எறிந்து நடப்பது, ஒவ்வொரு தடவையும் தேசியப்பட்டியல் எம்.பி. நியமனங்களைத் தம்பாட்டிலேயே சுருட்டிக் கொள்வது, கூட்டமைப்பைப் பதிவு செய்யவிடாது தமிழரசின் கிளை அமைப்புப் போல அதை நடத்துவது, கட்சிப் பேச்சாளர் மற்றும் கொறடா பதவிகளைத் தராமல் ஏமற்றுவது என்று தமிழரசுக்கு எதிராக நீண்ட குற்றப் பட்டியலை அடுக்கு வச னத்தில் இந்தக் கூட்டத்தில் தொடுத்திருக்கின்றார் செல்வத்தார்.சம்பந்தனைப் போன்ற கேடு கெட்ட தலைவர் இல்லை என்ற சாரப்பட அவரது உரை அமைந்தது.தமிழரசின் நகர்வுக்கு இரண்டு வழிகளில் பூட்டுப் போட அல்லது "செக்' வைக்க ரெலோ தயாராகி விட்டமை உறுதியாகியுள்ளது.உடனடியாகத் தேர்தல் ஏதும் இல்லை. தேர்தல் வரும் போது தமிழரசைக் கையாள்வது ஒரு விடயம். அதைப் பின்னர் விவரிக்கிறேன்.

உடனடியாக, கூட்டமைப்பு என்ற பெயரில் தமிழரசு எடுக்கக் கூடிய நகர்வுக்கு "செக்' வைப்பதற்குத் திட்டம் தயார் என்றும் தெரிகின்றது.பல்வேறு நெருக்கடிகளும் நீடித்தாலும் அரசுடன் - கோட்டாபயவுடன் - எந்தச்சமயத்திலும் பேச்சுக்குத் தயார் என்ற நிலைப்பாட்டில்தான் சம்பந்தன் - சுமந்திரன் அணி களத்தில் உள்ளது. இனப்பிரச்சினைத் தீர்வுக்கு பிசாசுடனும் கூடப் பேசுவோம் என்ற நிலைப்பாட்டைத்தான் அவர்கள் பிரதிபலித்துத்து வருகின்றனர்.

இது தொடர்பில் கோட்டாவின் அழைப்பை அவர்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றார்கள். அதை வைத்தே தமிழரசை ஓரம் கட்ட ரெலோ வலை விரித்து விட்டது.பேச்சுக்கு கோட்டா அழைத்தால் இன்ன, இன்ன நிபந்தனைகளை நிறைவேற்றினால்தான் பேச வருவோம் என்ற நீண்ட பட்டோலையை சித்தார்த்தன், விக்னேஸ்வரன், ஸ்ரீகாந்தா, சுரேஷ் பிறேமச்சந்திரன் ஆகியோருடன் இணைந்து முன்வைக்க ரெலோ இப்போதே தயார்.

சம்பந்தனின் பேச்சு முயற்சிக்கு முதலடியிலேயே கால் தடம் போடக் கனகச்சிதமான சுருக்குத் தயார்.தமிழரசு விரும்புகின்றதோ இல்லையோ விக்கி, சுரேஷ், ஸ்ரீகாந்தா, சித்தார்த்தன் அணியுடன் தமிழ்த் தேசியக் கட்சிகளின் ஒன்றிணைவுப் பணி தொடரும் என்ற ரெலோவின் வெளிப்படையான நிலைப்பாட்டின் பின்னால் புதைந்து கிடக்கும்சூக்குமம் இதுதான்.கோட்டாபய அரசுடன் பேச்சுக்குப்போகத் தயாராக இருக்கும் சம்பந்தன் - சுமந்திரன் அணியை அவ்விடயத்தில் தனித்து விட்டு, அந்த விடயத்துக்கு எதிராகத் தாங்கள் ஐந்து கட்சிகளும், (ரெலோ, புளொட், விக்கி, சுரேஷ், ஸ்ரீகாந்தா அணிகள்) ஒரே நிலைப்பாடாக அதை எதிர்த்து அறிக்கை வெளியிட்டால், அதே பாணியில் சம்பந்தன் - சுமந்திரனின் பேச்சு முயற்சிக்கு எதிராக கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் அறிக்கை வெளியிடும் சூழ்நிலை இருப்பதாக ரெலோ கருதுகின்றது.

சிங்களம் தொடர்ந்து ஏமாற்றி வருகின்றது, நிபந்தனையின்றி மீண்டும் சிங்களத்திடம் - அதுவும் கோட்டாவுடன் - பேசப் போகும் முடிவை சம்பந்தன் - சுமந்திரன் அணி தனித்து எடுக்கின்றது என்று காட்டி அந்த அணியையும், தமிழரசையும் துரோகிகளாக அடையாளப்படுத்த ரெலோ வியூகம் வகுத்துள்ளது.

இந்த விடயங்கள் புரியாமல் தாங்கள்தான் தலைவர் பிரபாகரனின் ஏக வாரிசுகள் என்று வேடம் போடும் தமிழரசின் வேறு சில தலைகளும் சேர்ந்து, இந்தச் சமயத்தில் சம்பந்தன் - சுமந்திரன் அணிக்கு எதிராகக் குழி பறிக்கும் வேலையை ஆரம்பித்திருப்பது ரெலோ முன்னெடுக்கும் நகர்வுக்கு மேலும் உத்வேகத்தைக் கொடுத்திருக்கின்றது.

தமிழரசின் தலைமையைக் கைப்பற்றும் நப்பாசையோடு அவசரப்பட்டு அவர்கள் முன்னெடுக்கும் கைங்கரியம் ஒட்டுமொத்தமாகத் தமிழரசுக்கே ஆபத்தாய்ப்போய் முடியப்போவதை அவர்கள் அறியாமல் இருப்பது வேடிக்கை.தேர்தல் ஒன்று வருமானால் கூட்டமைப்புக்குள் விக்கி, ஸ்ரீகாந்தா, சுரேஷ் அணியையும் உள்வாங்கித்தான் செயற்பட வேண்டும் என்பதையும் ரெலோ ஒற்றைக் காலில் வலியுறுத்தப் போவதாகத் தெரிகின்றது. அதற்கு தமிழரசு இணங்காவிட்டால், தமிழரசு கூட்டமைப்பில் இருந்து போகட்டும், நாங்கள்தான் கூட்டமைப்பின் மூத்த உறுப்பினர்கள், இணங்கி வரும் ஏனைய தமிழ்த் தேசியக் கட்சிகளையும் (புளொட், சுரேஷ், விக்கி, ஸ்ரீகாந்தா அணிகளையும்) இணைத்துக் கொண்டு நாங்கள் கூட்டமைப்பாக முன்நகர்வோம் என்பதுதான் ரெலோவின் நிலைப்பாடு.

தமிழ்க் கூட்டமைப்பு ஆரம்பிக்கப்பட்ட போது அதில் ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எவ்., தமிழர் விடுதலைக் கூட்டணிதான் இருந்தன. தமிழரசு வந்தது பின்னால்தான். ஆகவே தாங்கள்தான் கூட்டமைப்பின் மூத்த கட்சி, அந்தப் பெயருக்கு உரியவர்கள் நாங்களே, நாங்களும் சுரே´ன் ஈ.பி.ஆர்.எல்.எவ்வும் ஒன்றுபட்டு நின்றால் முதல் உரிமை எங்களுக்கே என்ற ரெலோவின் நிலைப்பாட்டிலும் ஒரு நியாயம் இருப்பது மறுக்கக் கூடியதல்ல.

இன்றைய நிலையில் ஒரு தேர்தல்  வந்தால் தமிழரசு தனியாகவும் (சில சமயங்களில் ஜனநாயகப் போராளிகள் கட்சி தமிழரசுடன் நிற்கக் கூடும்),தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தனியாகவும், ஏனைய தமிழ்க் கட்சிகள் (ரெலோ, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எவ்., தமிழ் மக்கள் கூட்டணி, தமிழ்த் தேசியக் கட்சி) ஓரணியிலும் மூன்றாகக் கன்னை பிரிய வாய்ப்புண்டு.தமிழரசைத் தனித்து விடும் துணிவில் ரெலோ இருக்கின்றது.

துலாக்கோல் எந்தப் பக்கம் சரியும் என்று பார்த்து தாழும் பக்கம் சேரும் மதில் மேல் பூனை நிலைப் பாட்டில் புளொட். இந்த இரண்டுடனும் சேர்ந்து தமிழரசுக்குப் பாடம் புகட்டும் ஒரே இலக்கில் விக்கி, சுரேஷ், ஸ்ரீகாந்தா அணிகள்.இது ஒன்றும் புரியாமல் மாகாண முதலமைச்சர் நப்பாசையில் கட்சியையே கோட்டை விடும் நீரோ மன்னராகக் கட்சித் தலைவர் மாவை.

இவ்வளவும் புரிந்தும், இந்தக் குளறு படிக்குள் கட்சித் தலையைக் கைப்பற்றும் நப்பாசையில் காய் நகர்த்தி தமிழரசுக் கட்சியையே நட்டாற்றில் விடும் வேலையை ஒப்பேற்றும் சிற்றரசர்கள்.எல்லாம் தமிழரசின் தலைவிதி...!


வல்வெட்டித்துறை நகர சபைத் தலைவர் தெரிவு நாளை.பதினேழு உறுப்பினர்களைக் கொண்ட சபையில் தமிழ்க் கூட்டமைப்புக்கு ஏழு 

ஆசனங்கள்தான் உண்டு. அதுவும் கன்னை பிரிந்து நிற்கிறது.


இது குறித்து ஆராய்வதற்காக ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன் எம்.பியும் செயலாளர் கோவிந்தம் கருணாகரன் எம்.பியும் நேற்று யாழ் வந்தனர். இங்கிருக்கும் ரெலோ பிரமுகர்கள் 

சபா குகதாஸ், நிரோrன் தியாகராஜா ஆகியோரோடு வல்வெட்டித்துறையில் கூட்டமைப்பினரை சந்தித்துள்ளனர். தமிழரசுத் தலைவர்களுக்கு எந்தத் தகவலும் இல்லை. 


ரொலோவின் சம்மதத்தோடு கூட்டமைப்பிலிருந்து தமிழரசுக் கட்சியினால் வெளியேற்றப்பட்ட சதீஸ் என்பவரை நகரசபைத் தலைவராக தெரிவு செய்ய வேண்டும் என்று செல்வம் தலைமையிலான குழு கட்டளை பிறப்பித்துச் சென்றுள்ளது. சுரேஷ் மற்றும் சிவாஜிலிங்கம் அணிகளின் ஆதரவைத் தாங்கள் பெற்றுத் தருவார்கள் என்றும் கூறியுள்ளன ராம்.யாழ்ப்பாணத்தை விட்டுப்போகும் போது மாவையரைச் சந்தித்து, இப்படி முடிவு செய்துள்ளோம். என்று ரெலோ குழு அவருக்குத் தகவல் தெரிவித்துள்ளது. 


முதலமைச்சர் கனவுக்காக ரெலோவின் பாதத்தைக் பற்றி நிற்கும் மாவையரும் "யயஸ் ஸேர்' என்று கூறாத குறையாகத் தலையசைத்தார் என்று கேள்வி.மீண்டும் ஒரு தடவை பாவம் தமிழரசு என்று குறிப்பிட்டு, அதன் தலைவிதியைப் பச்சாதபத்துடன் பார்ப்பதைத் தவிர எமக்கு வேறுவழியில்லை.


தீர்க்கதரி சனமற்ற மாவையைத் தலைவராகவும், நிலைமையைப் புரிந்து கொள்ளாத செயற்றிறனற்ற சம்பந்தனை கட்சியின் பெருந்தலைவராகவும், கூட்டமைப்பின் தலைவ ராகவும் வைத்திருக்கும் வரை தமிழரசுக்கு மீட்சி இல்லவே இல்லை. இது உறுதி.


- மின்னல்-