அப்பாவி மக்களின் நிலங்கள் சூறையாடப்படுகின்றன - எதிர்க்கட்சித்தலைவர்!
நாட்டின் வளங்களைத் துச்சமாகக் கருதி வெளிநாட்டவர்களுக்கு விற்பனை செய்கின்ற அரசாங்கம், மறுபுறம் அப்பாவிப் பொதுமக்களின் நிலங்கள் சூறையாடுவதை ஊக்குவிப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சாட்டியுள்ளார்.
பாணமவில் உள்ள ராகம்வேல கிராமத்தில் இடம்பெற்றுவருவதாகக் கூறப்படும் நில அபகரிப்பு சம்பவங்கள் தொடர்பாக ஆராய்வதற்காக விஜயம் மேற்கொண்டிருந்த அவர், பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இதனை தெரிவித்தார்.
இவை அனைத்தும் நாட்டின் பொதுச் சொத்துக்கள் என்றும் இது ஒரு தனிநபருக்கோ அல்லது குழுவிற்கோ சொந்தமானது அல்ல என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சுட்டிக்காட்டினார்.
அரசியல் அதிகாரத்தையோ அல்லது பணபலத்தையோ பயன்படுத்தி இந்தக் காணிகளை எந்தவொரு தரப்பினரும் கொள்ளையடிப்பதற்கு அனுமதிக்கக் கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார்.
இத்தகைய செயற்பாடுகள் மூலம் அரசாங்கம் நாட்டை மிகமோசமான நிலைக்குத் தள்ளியிருக்கின்றது என குற்றம் சாட்டிய சஜித் பிரேமதாச, உரிய சட்டங்களுக்கு மாறாக இடம்பெற்றுவரும் நில அபகரிப்பைத் தடுப்பதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.








