Breaking News

கர்ப்பிணித் தாய்மார்களுக்கான விசேட அறிவிப்பு...



கர்ப்பிணித் தாய்மார்களுக்கு தற்பொழுது 10 மாதங்கள் வரை வழங்கப்படுகின்ற ரூபா 20,000 பெறுமதியான உணவுப் பொதியினை 2 வருடங்கள் வரை நீடித்து தொடர்ந்து வழங்குவதற்கு முன்மொழியப்படுவதாக நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்தார்.

2022 ஆம் ஆண்டிற்கான சம கால அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டம் நிதி அமைச்சர், பசில் ராஜபக்ஷவினால் பாராளுமன்றத்தில் இன்று சமர்ப்பிக்கப்பட்டது.

அவர் தனது உரையில்...

மனைப் பொருளாதார பாதுகாப்பு நிகழ்ச்சித்திட்டத்தில் அதிகூடிய முன்னுரிமையானது தாயின் தலைமையில் இலங்கையில் உருவாகின்ற எதிர்கால சந்ததியினரின் போசாக்கு பற்றியதாகும்.

உண்மையில் நாட்டுக்கு அவசியமானது அறிவார்ந்த சந்ததியொன்றாகும். பிறக்கின்ற குழந்தையின் அறிவாற்றல் வளர்ச்சி அதிகளவு இடம்பெறுவது தாயின் மடியில் என்பதுடன் பிரசவம் நிகழ்ந்ததிலிருந்து ஆரம்ப காலத்திலாகும். எனவே பிறக்கின்ற குழந்தைகளினதும் தாய்மாரினதும் போசாக்கு மிகவும் முக்கியமானதாகும்.

எனவே, கர்ப்பிணித் தாய்மார்களுக்கு தற்பொழுது 10 மாதங்கள் வரை வழங்கப்படுகின்ற ரூபா 10,000 பெறுமதியான உணவுப் பொதியினை 24 மாதங்களுக்கு அதாவது, 2 வருடங்கள் வரை நீடித்து தொடர்ந்து வழங்குவதற்கு முன்மொழியப்படுகின்றது.

இதனடிப்படையில், இந்நிகழ்ச்சித்திட்டத்திற்காக தற்பொழுது ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள ரூபா 4,000 மில்லியனுக்கு மேலதிகமாக ரூபா 1,000 ஒதுக்கீடு செய்யப்படுகின்றது.

அதேபோல், தாய் மற்றும் சேயினது போசாக்குடன் குடும்பத்தினது போசாக்கும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். எனவே, அதிகரித்துள்ள வாழ்க்கைச் செலவினைக் குறைப்பதற்கு, கிராம சேவை அலுவலர் பிரிவு மட்டத்தில் பொருளாதார ரீதியாக வறுமை நிலையில் காணப்படும் குடும்பங்களை இனங்கண்டு அவர்களுக்கு உணவுப் பொதிகளை வழங்கும் நிகழ்ச்சித்திட்டத்தினை செயற்படுத்துவதற்காக ரூபா 15,000 மில்லியன் நிதி ஒது்கீடு செய்யப்படுகின்றது.

அதேபோல், இதுவரை தாய், சேய் உள்ளடங்களாக முழு குடும்பத்திற்குமான போசாக்கு தொடர்பாக தயாரிக்கப்பட்ட நிகழ்ச்சித்திட்டங்களுக்கு எமது நிதி ஏற்பாடு மேற்கொள்ளப்பட்டது. அதேபோன்று அவர்களது பொருளாதாரத்தினை வலுப்படுத்த வேண்டிய தேவையினை நிவர்த்தி செய்ய வேண்டியுள்ளது. எனவே, பெண் தொழில்முயற்சியாளர்களை அடிப்படையாகக் கொண்ட பொருளாதார அபிவிருத்திக்கான புதிய நிகழ்ச்சித் திட்டமொன்றினை நாம் நாடு முழுவதிலும் செயற்படுத்தி வருகின்றோம்.

கடந்த தொற்றுநோய் காலப்பகுதியில் கிராமங்களுக்கு அத்தியவசிய உணவுப் பொருட்களை பகிரந்தளிக்கும் போது எமக்குக் கிடைத்த அனுபவங்கள் இந்நிகழ்ச்சித்திட்டத்திற்கான அடிப்படையாக அமைந்தன.

அவை,

 கிராமிய மக்களின்உணவுத் தேவையினை நிறைவு செய்தல்

 கிராமத்தில் உற்பத்தி செய்யப்பட்ட உணவுப் பொருட்கள், உள்ளடங்களாக ஏனைய பொருட்களினைச் சந்தைப்படுத்தல்

 தகவல் தொழில்நுட்பத்துடன் இணைக்கப்பட்ட பிரதான வழங்கல் வலையமைப்பு மற்றும் இணைப்பு

 எந்தவொரு அனர்த்தத்தின் போதும் தொடரான வழங்கல் மற்றும் பகிர்வினை உறுதிப்படுத்தல்.

சிறிய கடைத்தொகுதி வலையமைப்பினை கிராம சேவை அலுவலர் பிரிவு மட்டத்தில் உருவாக்கும் இந்நிகழ்ச்சித்திட்டத்திற்காக ரூபா 15,000 மில்லியன் நிதி ஏற்பாடு செய்யப்படுகின்றது.