Breaking News

ரஷியாவிற்கு கண்டனம் தெரிவிக்கும் தீர்மானம்- ஐ.நா. வாக்கெடுப்பை புறக்கணித்தது இந்தியா



உக்ரைன் மீது ரஷியா நடத்தி வரும் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்க ஐ.நா. சபையில் இன்று தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

ரஷியா உடனடியாக நிபந்தனையின்றி உக்ரைன் எல்லையில் இருந்தும் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட எல்லைகளுக்குள் இருந்தும் அனைத்து ராணுவப் படைகளையும்  முழுமையாக  திரும்பப் பெற வேண்டும் என்றும் அந்த தீர்மானத்தில் தெரிவிக்கப் பட்டிருந்தது.

அமெரிக்கா, போலந்து, இத்தாலி, ஜெர்மனி, நியூசிலாந்து உள்ளிட்ட பல நாடுகளின் ஆதரவுடன் தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. 

அதில், 11 நாடுகள் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தன. இந்தியா, சீனா, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய 3 நாடுகள் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை. 

எனினும் ரஷியா தனக்கு உள்ள வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி தீர்மானத்தை முறியடித்தது. இதனால், உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்கும் ஐ.நா. சபையின் தீர்மானம் தோல்வியில் முடிந்தது. 

முன்னதாக இந்த தீர்மானம் மீது நடைபெற்ற விவாதத்தில் ஐ.நா.வுக்கான இந்திய பிரதிநிதி திருமூர்த்தி, பேசியதாவது:

உக்ரைனில் ஏற்பட்டுள்ள சமீபத்திய நிகழ்வுகளால் இந்தியா மிகவும் கவலையடைந்துள்ளது. வன்முறை மற்றும் விரோதப் போக்கை உடனடியாக நிறுத்த அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.  

அனைத்து உறுப்பு நாடுகளும் ஆக்கபூர்வமான வழியைக் கண்டுபிடிப்பதில் முன்னேற்றம் காண வேண்டும். கருத்து வேறுபாடுகள் மற்றும் சர்ச்சைகளை தீர்ப்பதற்கான ஒரே பதில் பேச்சுவார்த்தை மட்டுமே. இவ்வாறு அவர் தெரிவித்தார்.