Breaking News

இந்திய அமைதிகாக்கும் படையின் வல்வெட்டித்துறைப் படுகொலைகள்


1987 ஆம் ஆண்டில் இந்திய அரசுக்கும் இலங்கை அரசுக்குமிடையே செய்துகொள்ளப்பட்ட அமைதி உடன்பாட்டிற்கு அமைய, சுமார் 80,000 இந்திய ராணுவத்தினர் இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் நிலைகொண்டிருந்தனர்.

ஆரம்பத்தில் தமது காவலர்களாக இந்திய ராணுவத்தை எண்ணிய தமிழ் மக்கள் நாளடைவில், இந்திய ராணுவம் அவர்கள் மீது மேற்கொள்ளத் தொடங்கியிருந்த துன்புறுத்தல்கள், கொலைகள், சித்திரவதைகள், பாலியல் வன்புணர்வுகள் ஆகியவற்றைத் தொடர்ந்து அவர்களை வெறுக்கத் தொடங்கியிருந்ததுடன், இந்திய அமைதி காக்கும் படை எனும் பெயரினை மாற்றி இந்திய மக்கள் கொல்லும் படை என்றே அழைத்துவந்தனர்.

தமிழ் மக்கள் மீதான இந்திய ராணுவத்தின் கண்மூடித்தனமான தாக்குதல்கள தொடரவே, தமிழீழ விடுதலைப் புலிகளும் இந்திய ராணுவத்தின்மீதான தமது தாக்குதல்களை தீவிரப்படுத்தத் தொடங்கியிருந்தனர்.

அந்தவகையில், 1989 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 2 ஆம் திகதி, யாழ்ப்பாண நகரின் வடபுறத்தில் அமைந்திருந்த மீன்பிடிக் கிராமமான வல்வெட்டித்துறையில் இந்தியராணுவம் ஆடிய கோரத் தாண்டவத்தில் கொல்லப்பட்ட 64 தமிழ் அப்பாவிகள் தொடர்பான துயரம் கீழே விரிகிறது.

அது ஒரு காலை, 11 மணியிருக்கும். வழமைபோல வல்வெட்டித்துறையின் நகர்ப்புறச் சந்தை வெகு சுறுசுறுப்பாக இயங்கிக்கொண்டிருந்தது. சந்தையூடாகச் செல்லும் பிரதான வீதியெங்கும் மக்கள் கூட்டம். வீதியின் அருகே, சந்தைப்புறத்தின் பின்பகுதியில் புலிகளின் குழுவொன்று குழுமியிருந்தது. புலிகள் அங்கிருப்பது தெரிந்துவிடவே, வல்வெட்டித்துறைப் பகுதியில் நிலைகொண்டிருந்த இந்திய ராணுவம் சந்தைப் பகுதியினை நோக்கி நகர ஆரம்பித்தது. சந்தையை அண்மித்த பகுதியில் புலிகளும், இந்திய ராணுவமும் ஒருவரை ஒருவர் நேர் எதிர்கொள்ள கடும் துப்பாக்கிச் சமர் வெடித்தது. சில நிமிடங்கள் மட்டுமே நடைபெற்ற கடும் சமரினை அடுத்து புலிகள் அங்கிருந்து பின்வாங்கிச் சென்றுவிட, கொல்லப்பட்ட தமது 6 சகாக்களையும், காயப்பட்ட வீரர்களையும் சுமந்துகொண்டு இந்திய ராணுவம் முகாம் திரும்பியது.

மக்கள் கூட்டமாகக் குழுமியிருந்த சந்தைப்பகுதியில் இம்மோதல் இடம்பெற்றதனையடுத்து, அங்கிருந்தவர்கள் நாலா பக்கமும் சிதறியோடி, இந்திய ராணுவம் திருப்பித் தாக்கலாம் என்கிற அச்சத்தில் சந்தையை ஒட்டி அமைந்திருந்த சில வீடுகள் மற்றும் கடைகளில் தஞ்சம் புகுந்துகொண்டனர். மக்கள் அச்சப்பட்டதுபோலவே சில மணிநேரத்தில் இந்தியராணுவம் அப்பகுதியினைச் சூழ்ந்துகொண்டது. எவரும் அப்பகுதியிலிருந்து வெளியேறாது வண்ணம் பார்த்துக்கொள்ளவும், நடக்கவிருக்கும் படுகொலைகள் வெளியே தெரியாமலிருப்பதற்கும், காயப்பட்டவர்களுக்கான மருத்துவ உதவிகள் வெளியே இருந்து உள்ளே வராமல்த் தடுப்பதற்கும் வசதியாக, ஆகஸ்ட் 4 ஆம் திகதிவரை ஊரடங்கு உத்தரவினை இந்திய ராணுவம் அக்கிராமத்தின் மீது பிறப்பித்தது.

பின்னர் இடம்பெற்றவை வார்த்தைகளில் விபரிக்க முடியாத, மிகவும் திட்டமிட்ட முறையில் நடத்தப்பட்ட அப்பாவிகள் மீதான படுகொலைகள். இப்படுகொலைகள் இடம்பெற்ற விதமும், இரு நாட்களாக உலகின் கண்களிலிருந்து மறைக்கப்பட்டு இந்திய ராணுவம் ஆடிய மனித வேட்டையும் கிழே விரிகிறது.

இப்படுகொலைகளிருந்து உயிர்தப்பிய நடராஜா ஆனந்தராஜா எனும் அப்பாவியின் வாக்குமூலத்திலிருந்து இக்கொலைகள் பற்றிய விபரங்களைத் தொடங்கலாம்.

" சந்தைப்பகுதியில் நூற்றுக்கணக்கான இந்திய ராணுவத்தினர் நிற்பதை நான் கண்டேன். அப்பகுதியில் நின்ற பல வாகனங்கள் தீயில் எரிந்துகொண்டிருந்தன. அப்பகுதியெங்கும் இருந்த கடைகள மற்றும் வீடுகளை இந்திய ராணுவத்தினர் தீயிட்டுக்கொண்டிருந்தனர். அப்பகுதியெங்கும் கடுமையான துப்பாக்கிச் சூட்டுச் சத்தங்களும் மக்களின் அவல ஓலங்களும் எழுந்தவண்ணம் இருந்தன".

இப்படுகொலைகள் பற்றிய விமர்சனங்களை இந்திய அரசும் ராணுவமும் அசட்டை செய்தன. நாம் அப்பாவிகளை இலக்குவைத்துக் கொல்லவில்லை. ஒன்றில் அவர்கள் துப்பாக்கிச் சண்டையில் கொல்லப்பட்டிருக்க வேண்டும் அல்லது கொல்லப்பட்டவர்கள் அனைவரும் புலிகளாக இருந்திருக்கவேண்டும் என்று விடாப்பிடியாக தெரிவித்து வந்தன.

"தமிழ் மக்கள் மீது ஆயுதத் தாக்குதல்களை நடத்தவேண்டாம் என்றும், அவர்களை கண்ணியமாக நடத்தவேண்டும் என்றும் எமது ராணுவத்தைப் பணித்திருக்கிறேன். அவர்கள் தமிழ் மக்களை அன்புடனும், பண்புடனும் நடாத்தும் விதம் கண்டு பெருமையடைகிறேன். தமிழ்மக்களைக் காப்பதற்காக எமது ராணுவத்தினர் உயிர்த்தியாகங்களுக்கு மத்தியில் கடுமையாகப் போராடி வருவதுடன், புலிகளின் பிடியிலிருந்து அம்மக்களைக் காத்தும் வருகின்றனர்" என்று அன்றைய இந்தியப் பிரதமர் லோக் சபாவில் தெரிவித்திருந்தார். ஆனால், இலங்கையின் தமிழர் தாயகத்தில் அப்பாவிகள் மீது இந்திய ராணுவம் நடாத்திவந்த தாக்குதலக்களையடுத்து, இந்திய ராணுவத்தை விலக்கிக் கொள்ளுமாறு இந்தியாவிலிருந்தும், இலங்கையிலிருந்து குரல்கள் ஆங்காங்கே ஒலிக்கத் தொடங்கியிருந்த நேரத்தில் ராஜீவின் இந்த பாராளுமன்ற உரை நிகழ்ந்திருந்தது.

ஆனால், இத்தாக்குதல்பற்றி பாராளுமன்றில் உரையாற்றிய முன்னாள் இந்திய பாதுகாப்புச் செயலாளர் ஜோர்ஜ் பெர்ணாண்டஸ் , "இத்தாக்குதலின் மூலம் இந்திய ராணுவம் தனக்கான மை லாய் படுகொலையினைச் செய்திருக்கிறது" என்று கூறியிருந்தார். மை லாய் படுகொலையென்பது வியட்நாமியப் போரின்போது போராளிகளை தேடியழிக்கிறோம் என்று கூறிக்கொண்டு மை லாய் கிராமத்தில் புகுந்த அமெரிக்க ராணுவம் குழந்தைகள் பெண்கள் என்று அப்பாவிகள் மேல் நடத்திய கண்மூடித்தனமான தாக்குதலில் குறைந்தது 300 அப்பாவிகள் கொல்லப்பட்டதுடன், முழுக் கிராமும் அமெரிக்கப் படைகளால் எரித்துச் சாம்பலாக்கப்பட்டது. இந்தியப் படைகள் வல்வெட்டித்துறையில் நடத்திய வெறியாட்டத்தை பெர்ணாண்டஸ் அவர்கள் இந்த மை லாய் படுகொலைகளுடனேயே ஒப்பிட்டுக் கூறியிருந்தார்.

தாக்குதல் நடந்த சில நிமிடங்களில், இடையே அகப்பட்ட பொதுமக்கள் சிதறியடித்துக்கொண்டு நாலாபக்கமும் ஓடி ஒளிக்கத் தலைப்பட்டனர். அவ்வாறு ஒளிந்துகொண்ட ஒரு மக்கள் கூட்டம், சந்தையிலிருந்து சுமார் 400 மீட்டர்கள் தொலைவிலிருந்த சுப்ரமணியம் என்பவரது வீட்டில் அடைக்கலமாகியிருந்தனர். மோதல் முடிந்து, புலிகள் அப்பகுதியை விட்டகன்ற நிலையில் அங்கே வந்த இந்திய ராணுவத்தினர், வீட்டினுள்ளே இருப்பவர்களை வெளியே வருமாறு கர்ஜிக்கவே, இனிமேல் உள்ளேயிருந்தால் ஆபத்து என்பதை உணர்ந்த சுப்ரமணியமும், இன்னும் சிலரும் கைகளை தலைக்குமேலே உயர்த்தியபடி வாசலை நோக்கி நடக்கவும், முன்னால் நின்றிருந்த இந்திய ராணுவ வீரர்கள் அவர்கள் மீது கண்மூடித்தனமாகச் சுட ஆரம்பித்தனர். துப்பாக்கிச் சூட்டில் சுப்ரமணியமும் இன்னும் ஐவரும் துடிதுடித்து இறக்கவே, வீட்டில் மீதமிருந்தோர் தப்பியோட எத்தனித்தனர். உள்ளே இன்னும் மக்கள் ஒளிந்திருப்பதை அவதானித்த இந்தியப் படை வீட்டினுள் புகுந்து அங்கிருந்தவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியது. அதில் இன்னும் நான்கு அப்பவிகள் செத்து விழ, இன்னும் ஆறுபேர் காயமடைந்தனர். அவ்வீட்டில் அப்போது மட்டும் கொல்லப்பட்ட மக்களின் விபரங்கள் வருமாறு,

சுப்ரமணியம் (50), உமராணி (26), இளையபெருமாள் (70), புஷ்பராணி (45), ஜவனராஜ் (11), சுந்தரேஸ்வரன் (11), கணேசலிங்கம் (35), சஷி கணேசலிங்கம் (18 மாதங்கள்), அமிர்தம் உமாதேவி (36)

சந்தைப்பகுதியிலிருந்து மக்கள் குடியிருப்புப் பகுதியை நோக்கி நகர்ந்துவந்த இந்திய ராணுவத்தினர் வீதியின் இரு மருங்கிலுமிருந்த வீடுகளையும் கடைகளையும் தீயிட்டுக் கொழுத்திக்கொண்டே வந்தனர். ராணுவம் மக்கள் வீடுகளைக் கொழுத்திக்கொண்டே வருவதை அறிந்த சிவபுரம் வீதியைச் சேர்ந்த மக்கள் தீருவில் வீதியின் அருகிலும், பக்கத்திலேயிருந்த சிவகணேசன் என்பவரது வீட்டிலும் அடைக்கலமாகியிருந்தனர். அவ்வீட்டினை அடைந்த இந்திய வீரர்கள் உள்ளே மக்கள் ஒளிந்திருப்பதைக் கண்டதும், அவர்களில் 8 ஆண்களை வெளியே இழுத்துவந்து வீதியில் வைத்துச் சுடவே நால்வர் அவ்விடத்திலேயே உயிரிழக்க, மேலும் நால்வர் படுகாயமடைந்தனர். கொல்லப்பட்டவர்கள் விபரம் வருமாறு,

ஆறுமுகசாமி ராமச்சந்திரன் (41), கதிர்காமத்தம்பி சிவனேசராஜா (36), பொன்னம்பலம் ரஜிதகுமார் (25), நடராஜா ரவீந்திரன் (32)

பின்னர் கந்தசாமி மகேந்திரராஜா என்பவரது வீட்டிற்குச் சென்ற இந்திய ராணுவத்தினர், அவரது வீட்டின் முன்னால் நின்றிருந்த காரினைக் கொழுத்தியதுடன், வீட்டிற்கும் தீவைத்தனர். உள்ளே ஒளிந்திருந்த மக்கள் கூக்குரலிடவும், அவர்களை வெளியே இழுத்துவந்து சகட்டுமேனிக்குச் சுட ஆரம்பித்தன்ர். அவ்விடத்திலேயே மகேந்திரராஜாவும் அவரது நண்பரும் உயிரிழக்க, மற்றையவர்கள் கடுமையாகக் காயப்பட்டனர்.

பிரதான வீதி வழியே முன்னேறிய ராணுவம் இவ்வாறு வீதியின் அருகிலிருந்த வீடுகளை அழித்துக்கொண்டு வர, இன்னொரு அணி ஊர்மனைக்குள் நுழைந்து அங்கேயிருந்த மக்களை வீதிக்கு இழுத்து வந்தது. மக்கள் கூட்டமாக வீதியில் நிற்கவைத்து இந்திய ராணுவம் கண்மூடித்தனமாகச் சுடத்தொடங்கியது. இவ்வாறு 6 அப்பாவிகள் அப்போது கொல்லப்பட இன்னும் பலர் காயமடைந்து வீழ்ந்தனர். கொல்லப்பட்டவர்கள் வருமாறு,

ராசமாணிக்கம் நடராஜா (62), விநாயகமூர்த்தி அருள்சோதி (25), சிவபாக்கியம் (40), ராஜரத்தினம் (35), தங்கராஜா (60), பிரேம்ராஜ் (22)

மறுநாள் அவ்விடத்தில் மீண்டும் கூடிய இந்திய ராணுவம், வீடுகளுக்குள்ளிருந்து சிறுவர்கள் அடங்கலாக 75 ஆண்களை வெளியே இழுத்துவந்தது. அவர்களது மேலாடைகள் களையப்பட்டு கொதிக்கும் வெய்யிலில் தார்வீதியில் உருளும்படி பணிக்கப்பட்டார்கள். அவ்வாறு உருண்டுகொண்டிருந்த அப்பாவிகள் மீது பொல்லுகளாலும், துப்பாக்கியின் கத்திகளாலும் தாக்குதல் நடத்திக்கொண்டே இந்திய ராணுவம் நடந்துவந்துகொண்டிருந்தது. இந்த ஆண்களில் 6 பேரைக் கடுமையாகத் தாக்கிக் காயப்படுத்திய இந்திய ராணுவம், அவர்களைத் தனியே வெளியே இழுத்து முகத்தில் சுட்டுக் கொன்றது. கொல்லப்பட்டவர்கள் விபரம் வருமாறு,

ரவிச்சந்திரன் (28), மயில்வாகனம் (55), உமாசங்கர் (19), நாகதாஸ் (28), மகேந்திரதாஸ் (18)

வல்வெட்டித்துறை ராணுவ வீரர்களுக்கு ஆதரவாக பொலிகண்டியிலிருந்து புறப்பட்ட இன்னொரு ராணுவ அணி வீதியில் கண்டவர்கள் மீது கண்மூடித்தனமாகச் சுட்டுக்கொண்டே வல்வெட்டித்துறை நோக்கி முன்னேறியது. அவர்களால் கொல்லப்பட்டவர்கள் வருமாறு,

சுவர்ணராஜ் (16), செல்வரத்தினவேல் (19)., முரளீதரன் (20), ரமேஸ்குமார் (18), ராசேந்திரம் (22), செபமணி (35), கிரிஷ்ணவதனி (33), நல்லமுத்து (70).

அந்த இருநாட்களில் சிறுமிகள் உற்பட பல பெண்கள் இந்திய ராணுவத்தினால் கூட்டுப் பாலியல் வன்புணர்விற்குள்ளாக்கப்பட்டனர். 15 வயது சிறுமிகள் முதல் 60 வயது மூதாட்டிகள் வரை பல தமிழ்ப்பெண்களை அன்று இந்திய ராணுவம் வேட்டையாடியது. இந்த ஈனச் செயலினைச் செய்துகொண்டிருந்த ராணுவச் சிப்பாய்களை அதிகாரிகள் ஊக்குவித்தார்கள். ஒரு கட்டத்தில், இளம்பெண் ஒருவரை தனது ராணுவ வீரர்கள் முன்னாலேயே வன்புணர்வுக்குள்ளாக்கிய இளம் இந்திய அதிகாரியின் செயலினை, சுற்றியிருந்த ராணுவச் சிப்பாய்கள் கைதட்டி ஆதரித்ததைக் கண்ட சாட்சியங்கள் இருக்கிறார்கள்.

இருநாட்களாக இந்திய ராணுவம் ஆடிய நரவேட்டையில் 64 அப்பாவிகள் கொல்லப்பட்டு, பல பெண்கள் பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்டு, 123 வீடுகளும், 45 கடைகளும், 176 மீன்பிடிப் படகுகளும் எரித்துச் சாம்பலாக்கப்பட்டு அந்தச் சின்னஞ்சிறிய கிராமமே சுடுகாடாக மாற்றப்பட்டது.

காந்தியின் அகிம்ஸா தேசம் அன்று அப்பாவிகள் மேல் நடத்திய ஊழித்தாண்டவத்தை அடியோடு மறுத்த இந்திய அரசும் ராணுவமும், கொல்லப்பட்டவர்கள் அனைவரும் புலிகளென்றும் அல்லது துப்பாக்கிச் சண்டையில் கொல்லப்பட்டவர்கள் என்றும் கூறி கைகழுவி விட்டது.

இந்த நரவேட்டையில் ஈடுபட்ட ஒரு இந்திய சிப்பாய்கூட இதுவரையில் விசாரிக்கப்படவில்லையென்பது, இலங்கையில் இந்திய ராணுவம் செய்ததாகக் கூறப்படும் அட்டூழியங்களை விசாரிக்கும் அதிகாரம் இலங்கைக்கோ அல்லது சர்வதேச அமைப்பொன்றிற்கோ இல்லையென்று அன்றைய இந்தியத் தூதுவர் டிக்ஸீத் கூறியதிலிருந்து உறுதிப்படுத்தப்படுகிறது.

இந்திய ஜவான்களை கண்ணியமானவர்கள் என்று இன்றுவரை கனவுகாணும் இந்தியப் போலித்தேசியவாதிகளுக்கு இந்த இந்தப் படுகொலைகள் சமர்ப்பணம்.

இந்தியக் காட்டுமிராண்டிகளினால் அன்று பலியிடப்பட்ட அப்பாவித் தமிழர்களின் ஆத்மாக்கள் சாந்தியடைவதாக !