Breaking News

சோமாலியாவில் ஐ.எஸ்.பயங்கரவாத அமைப்பின் மூத்த தலைவர் சுட்டுக்கொலை!

 


 

ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் மூத்த தலைவர் பிலால் அல்-சூடானி. இவர் ஆப்பிரிக்காவில் ஐ.எஸ். அமைப்பின் வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றியவர். மேலும் ஆப்கானிஸ்தான் உள்பட பல நாடுகளில் செயல்பட்டு வரும் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதி உதவியும் அளித்து வந்தார். 

இதையடுத்து அல்-சுடானியை கண்டுபிடிக்க அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உத்தரவிட்டார். அல்-சுடானியை தேடும் பணி தொடங்கியது. இந்த நிலையில் அல்-சுடானி சோமாலியாவில் பதுங்கி இருப்பதாக அமெரிக்க படையினருக்கு தகவல் கிடைத்தது. 

ராணுவ வீரர்கள் பயங்கரவாதிகள் பதுங்கி இருந்த வடக்கு சோமாலியாவின் மலைப் பகுதியில் நுழைந்தனர். அங்கு பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் மீது அமெரிக்க வீரர்கள் தாக்குதல் நடத்தினர். பயங்கரவாதிகளும் பதிலுக்கு தாக்குதல் நடத்தினார்கள். 

 

இந்த துப்பாக்கி சண்டையில் சுடானி உள்பட 10 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். அமெரிக்க வீரர்கள் தரப்பில் உயிரிழப்புகள் இல்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. 

இந்த தாக்குதல் குறித்து அமெரிக்க அதிபர் அதிகாரி ஒருவர் கூறும்போது, 10 ஆண்டுகளுக்கு முன்பு அல்-சூடானி ஐ.எஸ். அமைப்பில் சேருவதற்கு முன்பு சோமாலியாவில் அல்-ஷபாப் என்ற பயங்கரவாத அமைப்புக்கு ஆட்சேர்ப்பு மற்றும் பயிற்சி அளித்துள்ளார். 

இது அமெரிக்க பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளில் முக்கிய இலக்காக ஆனது. சுடானி பதுங்கி இருந்த இடத்தின் மாதிரியை வடிவமைத்து அமெரிக்க வீரர்களுக்கு பல மாதங்கள் பயிற்சி வழங்கப்பட்டது. 

இதன் காரணமாக வீரர்கள் துல்லியமாக தாக்குதல் நடத்தி சுடானியை சுட்டுக் கொன்றனர். இதில் அமெரிக்க வீரர் ஒருவருக்கு மட்டும் சிறிய காயம் ஏற்பட்டது என்றார்.