துருக்கி நிலநடுக்கத்தில் இதுவரை 15 ஆயிரம் பேர் உயிரிழப்பு!
துருக்கி- சிரியா எல்லையில் கடந்த திங்கட்கிழமை அதிகாலை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. துருக்கி காசியான்டெப் மாகாணத்தில் உள்ள நூர்டகிக்கு கிழக்கே 23 கிலோமீட்டர் (14.2 மைல்) தொலைவில் 24.1 கிலோமீட்டர் (14.9 மைல்) ஆழத்தில் நிலநடுக்கம் தாக்கியது.
மேலும் 100 ஆண்டுகளுக்கு பிறகு இப்பகுதியைத் தாக்கிய சக்தி வாய்ந்த நிலநடுக்கம் இதுவாகும். ரிக்டர் அளவில் 7.8 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் துருக்கி, சிரியாவின் எல்லை நகரங்களில் ஏராளமான கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. இந்த நிலநடுக்கம் இஸ்ரேல், லெபனான் போன்ற அண்டை நாடுகளிலும் உணரப்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்க பாதிப்பால் இறந்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்று பிற்பகல் நிலவரப்படி உயிரிழப்பு 11 ஆயிரத்தை தாண்டியது.
இந்நிலையில் இன்று காலை நிலவரப்படி துருக்கி, சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பலி எண்ணிக்கை மேலும் உயர்ந்து 15 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இன்னும் பலர் இடிபாடுகளில் சிக்கியுள்ளதால், பலி எண்ணிக்கை உயர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
 

 
 
 
 
 
 











