இங்கிலாந்து மக்களை கவர்ந்த லண்டன் 'வீராசாமி' ஹோட்டல்!
இங்கிலாந்தை 70 ஆண்டுக்காலம் ஆட்சி செய்த ராணி 2-ம் எலிசபெத், கடந்த ஆண்டு செப்டம்பர் 8-ந்தேதி அன்று ஸ்காட்லாந்து அரண்மனையில் மரணம் அடைந்தார்.
அதற்கு பிறகு, இங்கிலாந்தின் மன்னராக சார்லஸ் அரியணை ஏறினாலும், அதிகாரபூர்வமாக அவர் இதுவரை முடிசூட்டிக்கொள்ளவில்லை.
அவரது முடிசூட்டு விழா அடுத்த மாதம் (மே) 6-ந்தேதி நடைபெறவுள்ளது. 70 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறும் பாரம்பரிய விழா என்பதால் லண்டன் நகரம் இப்போதிலிருந்தே விழாக்கோலம் பூண்டு வருகிறது.
முடிசூட்டு விழாவின்போது லண்டன் வீதிகளில் சிறப்பு விருந்து, கச்சேரி உள்ளிட்டவற்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில் மன்னர் சார்லசின் முடிசூட்டு விழாவில் லண்டனில் இயங்கி வரும் சுமார் 100 ஆண்டுகள் பழமையான இந்திய ஓட்டல் ஒன்று கவனம் பெற்று வருகிறது.
லண்டனில் மையப்பகுதியில் கடந்த 1926-ம் ஆண்டு தொடங்கப்பட்ட 'வீராசாமி' ஓட்டல் இந்தியா-இங்கிலாந்து இடையிலான உணவு கலாசாரத்தை பறைசாற்றும் விதமாக ஆங்கிலோ-இந்திய உணவு வகைகளை வழங்கி வருகிறது.
இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க ஓட்டலின் பின்னணியில் இருக்கும் பெண் தொழிலதிபர் கேமிலியா பஞ்சாபி மற்றும் இந்திய சமையல் வரலாற்றாசிரியர் மற்றும் எழுத்தாளரான அனுதி விஷால் ஆகிய இருவரும் இணைந்து இந்தியாவுக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான சமையல் தொடர்புகளை கவனத்தில் கொள்ளும் விதமாக ஆங்கிலோ-இந்திய உணவு வகைகளை தயாரித்து வழங்கி வருகின்றனர்.