Breaking News

தொண்டைமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்திலிருந்துகதிர்காம பாத யாத்திரை ஆரம்பம்

 


தொண்டைமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்திலிருந்து கதிர்காம பாதயாத்திரை இன்றையதினம் ஆரம்பமாகியுள்ளது. 

இந்துக்களின் பாரம்பரிய கதிர்காமத்திற்கான பாத யாத்திரையினை வழமைபோல இம்முறையும் தொண்டைமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்திலிருந்து பக்தர்கள் பாத யாத்திரையை ஆரம்பித்தனர் .

கடந்த வருடத்தினை போன்று இவ்வருடமும் ஜெயா வேல்சாமி தலைமையில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் பாத யாத்திரை செல்கின்றனர்.

வடக்கு கிழக்கு ஊவா ஆகிய 3 மாகாணங்களையும் யாழ்ப்பாணம் கிளிநொச்சி, முல்லைத்தீவு, திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை மொனராகல என 7 மாவட்டங்களையும் இணைத்து 46 நாட்களில் 98 ஆலயங்களைத் தரிசித்து 815 கிலோமீற்றர் தூரத்தை நடந்து கடக்கும் இப் பாத யாத்திரை இலங்கையின் மிக நீண்ட தூர கதிர்காம பாத யாத்திரையாக கருதப்படுகின்றது.

கடந்த 23 வருடங்களாக சைவ மரபு பாரம்பரியத்துடன் இடம்பெற்றுவரும் இப் பாத யாத்திரை கதிர்காமக் கந்தனாலய கொடியேற்றத்தினத்தில் கதிர்காமத்தைச் சென்றடைவது வழமையாகும்.

செல்வச் சந்நிதி ஆலயத்தில் காலை நடைபெற்ற விசேட பூசையினைத் தொடர்ந்து மோகன் சுவாமியால் வேலாயுதமானது கதிர்காம பாத யாத்திரைக் குழுத்தலைவர் ஜெயா வேல்சாமியிடம் சம்பிரதாயபூர்வமாக ஒப்படைக்கப்பட்டதோடு,

ஆரம்பமாகியுள்ள பாத யாத்திரை வற்றாப்பளை கண்ணகை அம்மன் ஆலயத்தை அடைந்த பின்னர் அங்கிருந்து வழமையாக பயணிக்கும் நூறு பக்தர்களுடன் பாதயாத்திரை தொடர்ந்து இடம்பெறும்.

பாத யாத்திரைக்கான சகல அனுமதிகளும் வழமைபோல பெறப்பட்டிருப்பதாக பாத யாத்திரைக் குழுத்தலைவர் ஜெயா வேல்சாமி தெரிவித்தார்.

இதேவேளை கதிர்காம ஆடிவேல்விழா உற்சவத்திற்கான கன்னிக்கால் அல்லது பந்தல் கால் நடும் வைபவம் இன்று நடைபெறவிருக்கிறது.

யூன் 19ஆம் திகதி கொடியேற்றம் இடம்பெற்று யூலை 4ஆம் திகதி எசலபெரஹராவுடனான தீர்த்தோற்சவம் இடம்பெறவுள்ளது.

எது எவ்வாறிருப்பினும் உற்சவம் தொடர்பான இறுதி முடிவுகள் காட்டுப்பாதை திறப்பு உற்சவ காலம் பெரஹரா தொடர்பிலான இறுதிக்கட்ட தீர்மானங்கள் மொனராகல மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் நடைபெறவிருக்கும் முக்கிய கூட்டத்தில் தீர்மானிக்கப்படுமென்பது குறிப்பிடத்தக்கது.

1972ஆம்ஆண்டில் அமெரிக்க முருகபக்தர் பற்றிக்ஹரிகன் கதிர்காம பாதயாத்திரையை ஒழுங்கமைக்கப்பட்ட குழுவடிவில் ஆரம்பித்தார்.

அதன்தொடர்ச்சியாக 1978இல் அவர் ஓய்வுபெற்றதும் அவர்தாங்கி வந்த வேலை காரைதீவைச் சேர்ந்த வேல்சாமி மகேஸ்வரனிடம் ஒப்படைத்தார்.

அன்றிலிருந்து 21வருடங்களாக வேல்சாமி தலைமையில் பாதயாத்திரை நடைபெற்று வந்தது.கடந்த இரண்டு வருடங்களாக ஜெயா வேல்சாமி இப்பணியில் ஈடுபட்டு வருகிறார்.

ஆரம்பத்தில் வெருகலிலிருந்து இது இடம்பெற்றது. எனினும் நாட்டின் அமைதிநிலவிய பிற்பாடு 2012 முதல் சந்நிதியிலிருந்து இப்பாதயாத்திரை ஆரம்பமானது குறிப்பிடத்தக்கது.