Breaking News

உக்ரைன் கொடி நிறத்தில் ஆடை.. உடல் முழுவதும் ரத்தம்.. கேன்ஸ் திரைப்பட விழாவில் பரபரப்பை ஏற்படுத்திய பெண்!

 


உக்ரைன்-ரஷியா போர் ஓராண்டைக் கடந்து நீடிக்கிறது. போரை முடிவுக்கு கொண்டு வருவதுடன், அமைதி பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணவேண்டும் என உலக தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். அமைதிப் பேச்சுவார்த்தைக்கான முயற்சிகள் ஒருபுறம் நடைபெற்றாலும், அதற்கு முழுமையான பலன் கிடைக்கவில்லை. 

போரினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து சர்வதேச கவனத்தை ஈர்க்கும் வகையில், உக்ரைனுக்கு ஆதரவாக சர்வதேச நிகழ்வுகளில் பரபரப்பான செயல்கள் அரங்கேறுகின்றன. அவ்வகையில், பிரான்சில் நடைபெற்று வரும் 76வது கேன்ஸ் திரைப்பட விழாவில் உக்ரைனுக்கு ஆதரவாக ஒரு பெண் செய்த செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

 உக்ரைனுக்கு ஆதரவளிக்கும் விதமாக அந்த பெண் உக்ரைன் தேசியக் கொடி நிறத்தில் உடையணிந்து வந்ததுடன், திடீரென ஆடைக்குள் மறைத்து வைத்திருந்த ரத்த நிறத்திலான திரவத்தை தலையில் ஊற்ற ஆரம்பித்தார். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. 

பாதுகாவலர்கள் அந்த பெண்ணை வலுக்கட்டாயமாக வெளியேற்றினர். இதையும் படியுங்கள்: 59 வயதில் அடுத்த திருமணத்திற்கு தயாரான அமேசான் நிறுவனர்- மணப்பெண் யார் தெரியுமா? கேன்ஸ் திரைப்பட விழாவின் இயக்குனர் தியரி ப்ரீமாக்ஸ், கடந்த வாரம் பேசும்போது உக்ரைனுக்கு ஆதரவு தெரிவித்ததாக டெலிகிராப் செய்தி வெளியிட்டுள்ளது. 

திரைப்பட விழாவின் தொடக்க நிகழ்வில், பிரெஞ்சு நடிகை கேத்தரின் டெனியூவ், உக்ரைன் கவிஞர் லெஸ்யா உக்ரைன்கா எழுதிய ஹோப் என்ற கவிதையை வாசித்து, போரில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினார்.

 ரஷிய அரசாங்கத்துடன் தொடர்புடைய குழுவினர் அல்லது திரைப்பட நிறுவனங்களின் மீது கடந்த ஆண்டே தடை விதிக்கப்பட்டது. இந்த ஆண்டு திரைப்படவிழாவிலும் அந்த தடை அமலில் உள்ளது என்று டெலிகிராப் தெரிவித்துள்ளது. 

கடந்த ஆண்டு கடந்த திரைப்பட விழாவில், உக்ரைன் பெண் ஒருவர் ரஷிய படைகளுக்கு எதிராக சிவப்புக் கம்பளத்தின் மீது திடீரென நிர்வாணப் போராட்டம் நடத்தினார். மேலாடை முழுவதையும் கழற்றினார். மார்பில் உக்ரைன் தேசியக் கொடியின் நிறத்தில் வண்ணம் பூசியிருந்தார். அத்துடன், எங்களை பாலியல் பலாத்காரம் செய்வதை நிறுத்து என்ற வாசகத்தை மார்பில் எழுதியிருந்தார்.