Breaking News

மூழ்கிய டைட்டானிக் கப்பலை பார்க்க சுற்றுலா சென்ற நீர்மூழ்கி கப்பல் வெடித்து சிதறியது- 5 கோடீசுவரரும் பலி!

 


இங்கிலாந்தில் இருந்து அமெரிக்காவுக்கு கடந்த 1912-ம் ஆண்டு புகழ் பெற்ற டைட்டானிக் கப்பல் சென்று கொண்டிருந்தது. இந்த கப்பலில் 2,500-க்கும் மேற்பட்ட பயணிகள் மற்றும் ஊழியர்கள் சென்று கொண்டிருந்தனர். அப்போது வழியில் எதிர்பாராத விதமாக அந்த கப்பல் பனிப்பாறையில் மோதி கடலுக்குள் மூழ்கியது. இந்த மோசமான விபத்தில் 1,500-க்கும் மேற்பட்டவர்கள் இறந்தனர். 

கடலுக்குள் மூழ்கிய அந்த கப்பல் அமெரிக்காவின் நியூபவுண்ட்லாண்ட் தீவுக்கு 740 கிலோ மீட்டர் தூரத்தில் கடலுக்கடியில் உடைந்து கிடந்தது 1985-ம் ஆண்டு கண்டறியப்பட்டது. அதன் பிறகு இந்த கப்பலை கடல் ஆய்வாளர்கள், விஞ்ஞானிகள், திரைப்பட துறையினர் போன்றவர்கள் ஆழ்கடலுக்குள் சென்று பார்வையிட்டு வந்தனர். 

இந்த நிலையில் டைட்டானிக் கப்பலை பார்வையிடுவதற்காக சுற்றுலா பயணிகளை அழைத்த செல்வதற்காக ஓஷன்கேட் எக்ஸ் பெடிஷன்ஸ் என்ற அமெரிக்க தனியார் நிறுவனம் நீர் மூழ்கி கப்பலை வடிவமைத்தது. இந்த நீர் மூழ்கி கப்பலுக்கு டைட்டன் நீர் மூழ்கி என பெயரிடப்பட்டது.

 இதில் அதிகபட்சமாக 5 பேர் வரை பயணம் செய்ய முடியும். டை்டானிக் கப்பலில் மிச்சம் கிடக்கும் உடைந்த பாகங்களை பார்க்க சுற்றுலா பயணிகள் கப்பலில் அழைத்து செல்லப்படுவார்கள். அங்கிருந்த டைட்டன் நீர்மூழ்கியில் டைட்டானிக் கப்பலை நோக்கி ஆழ்கடல் பயணத்தை மேற்கொள்வார்கள். டைட்டானிக்கை நெருங்கி நீர்மூழ்கியின் காட்சி வழி மூலம் அதனை பார்ப்பார்கள்.

 இந்த நிலையில் டைட்டானிக் கப்பலை பார்வையிடுவதற்காக இங்கிலாந்து தொழில் அதிபர் ஹமிஷ் ஹார்டிங், ஓஷன் கேட் நிறுவனத்தின் நிறுவனர் ஸ்டாக்டன்ரஷ், நீர் மூழ்கி மாலுமியும் பிரான்ஸ் கடற்படை முன்னாள் கமாண்டருமான பால் ஹன்றி நார்கியோலே, பாகிஸ்தான் தொழில் அதிபர் ஷேஸாதா தாவூத் மற்றும் அவரது மகன் சுலைமான் தாவூத் ஆகிய 5 பேரும் கடந்த ஞாயிற்றுக்கிழமை டைட்டன் நீர் மூழ்கி கப்பலில் சென்றனர். 

காலை 6 மணிக்கு அவர்கள் கடலுக்குள் இறக்கி விடப்பட்டனர். மாலைக்குள் இவர்கள் மீண்டும் கப்பலுக்கு திரும்பி இருக்க வேண்டும். ஆனால் டைட்டானிக் கப்பல் உடைந்து கிடந்த இடத்தில் இருந்து சுமார் 4 கிலோ மீட்டர் தூரத்தில் சென்று கொண்டிருந்த போது நீர் மூழ்கிக்கும், போலார் பிரின்ஸ் கப்பலுக்கும் இடையே இருந்த தகவல் தொடர்பு சுமார் 1 மணி நேரம் 45 நிமிடங்களுக்கு பிறகு துண்டிக்கப்பட்டது. 

இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவர்களை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டது. அமெரிக்கா, கனடாவின் கடலோர காவல் படை கப்பல்கள், விமானங்களுடன், வணிக கப்பல்களும் குறிப்பிட்ட பகுதியில் முற்றுகையிட்டு தேடுதல் பணியில் ஈடுப்பட்டது. ஆனால் நீர் மூழ்கி கப்பலில் இருந்து எந்த தகவலும் வரவில்லை. இருந்த போதிலும் அவர்களை பத்திரமாக மீட்க கடந்த 4 நாட்களாக முழு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. 

இந்த நிலையில் டைட்டன் நீர் மூழ்கி கப்பல் கடலுக்கு அடியில் வெடித்து சிதறி அதில் பயணம் செய்த பாகிஸ்தான் தொழில் அதிபர், அவரது மகன் உள்ளிட்ட 5 கோடீசுவரர்களும் உயிர் இழந்தது தற்போது உறுதியாகி உள்ளது. 

இது குறித்து அமெரிக்க கடலோர காவல் படைப்பிரிவு தளபதி ஜான் மாகர் கூறியதாவது:- நீர்மூழ்கி மாயமான பகுதியில் தேடுதல் பணியின் போது அதன் சிதறிய பாகங்கள் ரிமோட் நீர் மூழ்கி சாதனம் (ஆர்.ஓ.வி.) மூலம் கண்டறியப்பட்டு உள்ளது. டைட்டானிக் கப்பல் உடைந்து கிடக்கும் பகுதிக்கு சுமார் 1,600 அடி தூரத்தில் அந்த நீர் மூழ்கியின் பாகங்கள் கடல் படுகையில் சிதறி கிடக்கிறது. 

கடலுக்குள் அழுத்தத்தை தாங்குவதற்கான நீர் மூழ்கியின் பகுதி உள் வெடிப்புக்கு உள்ளானதில் அதில் இருந்த அனைவரும் உயிர் இழந்தது உறுதியாகி உள்ளது. அவர்களது உடல்கள் தொடர்ந்து தேடப்பட்டு வருகிறது. நீர் மூழ்கி எப்படி வெடித்து சிதறியது என்பதை அறிந்து கொள்வதற்காக அந்த பகுதியில் தேடுதல் பணி தொடர்ந்து நடைபெறுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.