Breaking News

வாகன இறக்குமதி கட்டுப்பாடு நீக்கம்?

 


வாகன இறக்குமதி உட்பட பல வகையான பொருட்களுக்கு இறக்குமதி கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால் வரவு செலவு திட்டத்தில் எதிர்பார்த்த வருமானத்தை எட்ட முடியவில்லை என இலங்கை சுங்கம் தெரிவித்துள்ளது.


தேசிய பொருளாதாரம் மற்றும் பௌதீக திட்டமிடல் தொடர்பான துறைசார் மேற்பார்வைக் குழு, அதன் தலைவர் மஹிந்தானந்த அளுத்கமகே தலைமையில் அண்மையில் கூடி அரச வருமானத்தை அதிகரிப்பதில் இலங்கை சுங்கத்துறைக்கு வழங்கக்கூடிய பங்களிப்பு குறித்து கலந்துரையாடியது.

அங்கு இது தொடர்பில் கருத்து தெரிவித்த சுங்க அதிகாரிகள், இறக்குமதி கட்டுப்பாடுகள் இருக்கும் வரை எதிர்பார்த்த வருமானத்தை எட்ட முடியாது என தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் இவ்வருடம் 783 பில்லியன் ரூபா வருமானம் கிடைக்கும் என கணிக்க முடியும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், வாகன இறக்குமதிக்கு விதிக்கப்படும் வரிகளினால் சுங்கத்திற்கு 20 வீத வருமானம் கிடைப்பதாகவும், கட்டுப்பாடுகள் அமுல்படுத்தப்படும் வரை எதிர்பார்த்த வருமானத்தை எட்ட முடியாது எனவும் சுங்க அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

2014ஆம் ஆண்டு தொடக்கம் 2022ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் அதிகூடிய வரி வருமானம் 2018ஆம் ஆண்டு பெறப்பட்டுள்ளதாகவும், அதன் வரித் தொகை 923 பில்லியன் ரூபா எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதன்படி 194 பில்லியன் ரூபா வருமானம் வாகன இறக்குமதிக்கு விதிக்கப்பட்ட வரிகள் காரணமாக கிடைத்துள்ளதாக தெரியவந்துள்ளதாக பாராளுமன்ற தொடர்பாடல் பிரிவு தெரிவித்துள்ளது.

எனினும் கடந்த மூன்று வருட காலமாக வாகன இறக்குமதி மட்டுப்படுத்தப்பட்டுள்ளதால் சுங்க வருமானம் குறைந்துள்ளதாகவும் இம்மாதம் முதல் வாகன இறக்குமதிக்கு அனுமதி வழங்கினால் எதிர்வரும் 06 மாதங்களுக்குள் 150 பில்லியன் ரூபாய் வரியாக வசூலிக்க முடியும் எனவும் சுங்க அதிகாாிகள் சுட்டிக்காட்டியுள்ளனா்.