முதல் நாள், முதல் கையெழுத்து-மதுவிலக்கு: திண்டுக்கல்லில் விஜய் ரசிகர்கள் ஒட்டிய பரபரப்பு போஸ்டர்!
நடிகர் விஜய் கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் தமிழகம் முழுவதும் 10 மற்றும் 12-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் சாதனை படைத்த 1000-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகளுக்கு ரொக்கப்பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டினார். அப்போது மாணவர்களிடையே பேசிய நடிகர் விஜய், எதிர்கால வாக்காளர்களாகிய நீங்கள் ஓட்டுப்போட பணம் வாங்கக்கூடாது என்று அறிவுறுத்தினார்.
அவருடைய அரசியல் வருகை குறித்து மன்ற நிர்வாகிகள் வெளிப்படையாக தெரிவித்து அதற்கான பணியில் இறங்கியுள்ளனர். நடிகர் விஜய்யின் அரசியல் வருகைக்கு தமிழகத்தின் பல்வேறு நடிகர்களும், அரசியல் தலைவர்களும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் நடிகர் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் அவரது ரசிகர்கள் பரபரப்பு போஸ்டர்கள் ஒட்டியுள்ளனர். அதில், தலைமைச் செயலகத்தில் நடிகர் விஜய் முதல்-அமைச்சராக பதவியேற்பது போலவும், முதல் நாள் முதல் கையெழுத்தாக மது விலக்கை வலியுறுத்தி அவர் கையெழுத்திடுவது போலவும் போஸ்டரில் இடம்பெற்றுள்ளது.
ரசிகர்கள் ஒட்டிய போஸ்டர் அவரது இருக்கைக்கு மேலே அம்பேத்கர், பெரியார், காமராஜர் ஆகியோர் புகைப்படங்களும் இருக்கையின் அருகே அப்துல்கலாம், அண்ணா ஆகியோரது புகைப்படங்களும் இடம்பெற்றுள்ளன. இதே போல் மேலும் சில ரசிகர்கள் ஒட்டியுள்ள போஸ்டரில் மக்கள் இயக்க முதல்வரே, வருங்கால தமிழகமே என்ற வாசகங்களுடன் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது.
இது குறித்து அவரது ரசிகர்கள் தெரிவிக்கையில், நடிகர் விஜய் தனது அரசியல் வருகையை வெளிப்படையாக தெரிவித்துவிட்டார். இது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாடாளுமன்ற தேர்தலோ, சட்டமன்ற தேர்தலோ அவர் கண் அசைவுக்காக தொண்டர்கள், ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்துக்கிடக்கிறோம் என்றனர்.
இது மட்டுமின்றி நடிகர் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அவரது ரசிகர்கள் அன்னதானம், ரத்ததானம், வழங்கியதோடு மாணவ-மாணவிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினர். இது மட்டுமின்றி மும்மதக் கோவில்களில் சிறப்பு வழிபாடும் செய்தனர்.