தனி ஒருவனாக இல்லாமல் எங்கள் தலைவனாக வரவேண்டும்.. விஜய்யை அரசியலுக்கு அழைத்த மாணவி!
தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளில் 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ-மாணவிகளுக்கு விஜய் மக்கள் இயக்கம் சார்பில் கல்வி ஊக்கத்தொகை மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கும் விழா சென்னை நீலாங்கரையில் உள்ள ஆர்.கே.கன்வென்ஷன் சென்டரில் இன்று நடந்தது.
விழாவில் மாணவ-மாணவிகளுக்கு ஊக்கத்தொகை மற்றும் பாராட்டு சான்றிதழை நடிகர் விஜய் வழங்கினார். இந்த செயல் விஜய் விரைவில் அரசியலுக்கு வருவதற்கான ஒத்திகையாக இருக்கும் என்று பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், இந்த நிகழ்ச்சியின் போது மாணவி ஒருவர், "தனி ஒருவனாக இல்லாமல் எங்கள் தலைவனாக வரவேண்டும். நாங்கள் போடும் முதல் வாக்கை நீங்கள் மதிப்புமிக்கதாக மாற்றி தரவேண்டும். அந்த வாக்கு மிகவும் சக்தி வாய்ந்ததாக இருக்க வேண்டும் என்றால் நீங்கள் தான் அரசியலுக்கு வரவேண்டும். உங்களுடைய ஒவ்வொரு படமும் நல்ல கருத்துகளை சொல்லியிருக்கிறது. ஒரு வாக்கு எவ்வளவு முக்கியம் என்று நீங்கள் படத்தில் காண்பித்திருப்பீர்கள் அது எங்களுக்கு ஊக்கமாக இருக்கிறது" என்று கூறினார்.