Breaking News

அரசியலுக்கு வருவது குறித்து யோசிக்கலாம்- கீர்த்தி சுரேஷ் அதிரடி கருத்து!

 


'கண்ணை நம்பாதே' படத்தைத் தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'மாமன்னன்'. இப்படத்தை பரியேறும் பெருமாள், கர்ணன் படங்களை இயக்கிய மாரி செல்வராஜ் இயக்கியுள்ளார். 

இதில் வடிவேலு, ஃபகத் பாசில், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இப்படம் வருகிற 29-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. 

இதைத்தொடர்ந்து 'மாமன்னன்' படக்குழு புரோமோஷன் பணிகளில் ஈடுப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், மாமன்னன் படம் குறித்து நடிகை கீர்த்தி சுரேஷ் பேசியதாவது, மாமன்னன் ஒரு அரசியல் படம். நான் இப்போது படம் நடித்துக் கொண்டிருக்கிறேன். அரசியலுக்கு வருவது பற்றி யோசிக்கலாம். 

இந்தப் படத்தில் சீரியசான கேரக்டரில் நடித்துள்ளேன். தற்சமயம் அப்படிப்பட்ட கேரக்டர்கள் தான் எனக்கு வருகிறது. அடுத்த படம் காமெடி கலந்த கதாபாத்திரத்தில் வருகிறது. ஒவ்வொரு படத்திலும் முழு அர்ப்பணிப்புடன் நடிக்கிறேன். 

பிரபல டைரக்டர்கள் ராஜமவுலி, சங்கர் ஆகியோர் படங்களில் நடிக்க ஆசை. உதயநிதி நல்ல ஜாலியான மனிதர். படப்பிடிப்பு தளத்தை எப்போதும் மகிழ்ச்சியாக வைத்திருப்பார். கலகலவென்று சிரித்த முகமாகவே இருப்பார். படப்பிடிப்பே ஜாலி பயணமாகவே இருந்தது. நல்ல விஷயங்களை இந்த படத்தில் கூறியுள்ளோம். என்று பேசினார்.