அரசியல் கைதிகள் விவகாரத்தில் அநீதியான சட்டமே உள்ளது : கஜேந்திரகுமார் பொன்னம்பலம்!
அரசியல் கைதிகள் விவகாரத்தில் அநீதியான சட்டமே எமது நாட்டில் பின்னபற்றப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குறிப்பிட்டுள்ளார்.
இன்றைய நாடாளுமன்ற அமர்வில் கலந்;துகொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
“பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் ஊடாக தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைவரும் விடுவிக்கப்பட வேண்டும்.
பயங்கரவாத் தடைச்சட்டத்தை இல்லாது செய்ய வேண்டும் என்று கடந்த அரசாங்கமும் ஏற்றுக் கொண்டுள்ளது.
தற்போது 19 பேர் இந்தச் சட்டத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள்.
எனவே, இவர்கள் அனைவரும் விடுதலை செய்யப்பட வேண்டும் என்பதுதான் அனைவரது கருத்தாகவும் உள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பிரத்தானியாவிற்கு விஜயம் செய்திருந்தபோது, அரசியல் கைதிகள் அனைவரையும் விடுவிப்பதாக உறுதியளித்துள்ளார்.
யுத்தம் முடிவடைந்து 15 வருடங்களாகிவிட்டன. ஏனைய நாடுகளில் யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டவுடன் கைதிகள் விடுவிக்கப்படும் நிலையில், இங்கு அநீதியானதொரு சட்டம்தான் அரசியல் கைதிகள் விவகாரத்தில் நீண்ட காலமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.