உண்ணி கடித்ததால் அபாயகரமான நோய் பாதிப்பு.. கைகளை இழந்த அமெரிக்கர்!
அமெரிக்காவில், 35 வயதான மைக்கேல் கோல்ஹோஃப் என்பவருக்கு ஆபத்தான வகையை சேர்ந்த 'உண்ணி' ஒன்று கடித்ததால், ஒரு பயங்கர நோய் ஏற்பட்டு அவரது 2 கைகளும், 2 கால்களின் சில பகுதிகளும் துண்டிக்கப்பட்டது.
டெக்சாஸ் மாநிலத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. கடந்த மாதம், ஒரு உண்ணி கடித்ததால் மைக்கேலுக்கு காய்ச்சல் மற்றும் வயிற்று உபாதைகள் ஏற்பட்டன. அறிகுறிகள் தோன்றிய ஒரு வாரத்திற்குப் பிறகு, மைக்கேலின் நிலை வேகமாக மோசமடைந்தது. படுக்கையில் இருந்து எழுந்திருக்க கூட முடியவில்லை.
இதையடுத்து அவர், சான் அன்டோனியோ பகுதியில் உள்ள ஒரு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார். மருத்துவ சிகிச்சையில் இருக்கும்போதே அவரது உடல் உறுப்புகள் செயலிழக்கத் தொடங்கின.
அதனால் அவர் தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டார். அடுத்த 24 மணி நேரத்தில் நோய்க்கான காரணத்தை கண்டறியும் முயற்சியில் மருத்துவர்கள் ஈடுபட்டனர். மைக்கேலுக்கு வென்டிலேட்டர் உதவி தேவைப்பட்டது. ஆன்டிபயாடிக் மருந்துகள் கொடுக்கப்பட்டு, டயாலிசிஸ் தொடங்கப்பட்டது.
எனினும் அவருக்கு உடலில் பல இடங்களில் ரத்த ஓட்டம் நின்றது. இதனால் அவருக்கு கேங்க்ரீன் எனப்படும் திசுக்கள் இறக்கும் நிலை ஏற்பட்டது. இதன் காரணமாக மைக்கேலின் கால் விரல்கள், அவரது கால்களில் ஒரு அங்குலம் மற்றும் கைகளில் முழங்கை வரை துண்டிக்கப்பட்டது.
தொற்று பாதித்த உண்ணிகளில் உள்ள டைபஸ் எனும் பாக்டீரியா மூலமாக இந்த கொடிய நோய் பரவுகிறது. உலகளவில் 2,500 க்கும் மேற்பட்ட உண்ணி இனங்கள் உள்ளன.
அமெரிக்காவில் மட்டுமே 300க்கும் மேற்பட்ட இனங்கள் உள்ளன. இருப்பினும், அவற்றில் தேர்ந்தெடுக்கப்பட்ட சில உண்ணிகள் மட்டுமே கடித்தால் கடுமையான பாதிப்பை ஏற்படுத்துகின்றன.