சிறப்பாக இடம்பெற்ற மாமாங்கேஸ்வரர் ஆலய சிற்ப தேர் உற்சவம்!
கிழக்கிலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு அருள்மிகு ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் திராவிட முகப்புத்திர சிற்ப தேர் உற்சவம் இன்று (15) காலை பல்லாயிரக்கணக்கான அடியார்கள் புடைசூழ வெகுவிமர்சையாக நடைபெற்றது.
மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகியவற்றினை ஒருங்கே கொண்ட இந்த ஆலயத்தின் மஹோற்சவமானது கடந்த 07 ஆம் திகதி திங்கட் கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.அதனைத் தொடர்ந்து வெளிவீதி பஞ்சமுக விநாயர், தேரில் ஆரோகணிக்க அங்கு விசேட பூஜைகள் நடைபெற்று ஆயிரக்கணக்கான பெண்கள், ஆண்கள் வடமிழுக்க தேர் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது.
இந்த தேர் உற்சவத்தில் இலங்கையின் பல பாகங்களிலுமிருந்து ஆயிரக்கணக்கான அடியார்கள் கலந்து கொண்டனர். இதன்போது நாட்டியாஞ்சலி நிகழ்வுகளும் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.
இராமபிரானால் வழிபட்ட ஆலயம் என்ற பெருமையினையும் பிதிர்க்கடன் தீர்க்கும் தீர்த்தக் கேணியைக் கொண்ட பெருமையினையும் கொண்டதாக மாமாங்கேஸ்வரர் ஆலயம் இருந்து வருகின்றது.
இத்தகைய சிறப்புமிக்க ஆலயத்தின் ஆடி அமாவாசை தீர்தோற்சவம் நாளை நண்பகல் மாமாங்கேஸ்வரர் தீர்த்தக்கேணியில் நடைபெறவுள்ளது.