Breaking News

சந்திரயான்-3: அடுத்த கட்ட நடவடிக்கை என்ன?

 நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்வதற்காக கடந்த ஜுலை மாதம் 14 ஆம் திகதி இஸ்ரோவினால் விண்ணில்  ஏவப்பட்ட சந்திரயான்- 3 விண்கலம் நேற்றைய தினம் நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கி பலகோடி இந்தியர்களின் கனவை நனவாக்கியது.

இதன் மூலம் அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகளைத் தொடர்ந்து நிலவில் வெற்றிகரமாக கால்பதித்துள்ள நான்காவது நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளதோடு, சர்வதேச அளவில், விண்வெளி ஆராய்ச்சியில் மிகப் பெரிய சக்தியாகவும் இந்தியா உருவெடுத்துள்ளது.

இந்நிலையில் சந்திரயான்-3 நிலவில் தரையிறங்கிய இடத்தை லேண்டிங் இமேஜர் கெமரா (Landing Imager Camera) மூலம் படம்பிடித்து அனுப்பியுள்ளது. அத்துடன் நிலவின் சமதளத்தைத் தெரிவு செய்து சந்திரயான்-3 தரையிறங்கியுள்ளதாகவும், லேண்டரில் இருந்து பிரக்ஞான் ரோவர் தற்போது சாய்வுக்கதவு வழியாக வெளியேறி தரையைத் தொட்டுவிட்டதாகவும் இஸ்ரோ அறிவித்துள்ளது.

அடுத்த கட்ட நடவடிக்கை

விக்ரம் லேண்டரில் இருந்து இறங்கியுள்ள, ‘பிரஜ்ஞான்’ ரோவர், ரோபோ போன்றது. ஆறு சக்கரம், சோலார் பேனல், கெமரா இருக்கும். 500 மீற்றர் சுற்றளவுக்கு நிலவின் தரையில் ஊர்ந்து சென்று நிலவில் காணப்படும் தரைப்பரப்பு, தனிமங்கள், நீர் மற்றும்  வளிமண்டலம் குறித்து ஆய்வு செய்து பூமிக்கு அனுப்பும்.

குறிப்பாக ரோவர் நிலவின் மண்ணைக் குடைந்து அதிலிருந்து மாதிரிகளை எடுத்து, அதை தன்னிடம் உள்ள லேசர் கற்றைகள் வாயிலாக உடைத்து, என்ன தனிமங்கள் உள்ளன என்பது பற்றி ஆய்வு செய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை பிரக்யான் ரோவர் நிலாவில் பதிக்கும் இந்தியாவின் சின்னம் சந்திரயான் -3 ரோவர் பிரக்யானின் ஆறு சக்கரங்களும் நிலாவில் பதியும்போது இது இந்தியாவுடையது என அடையாளம் காணும் வகையில், அதன் சக்கரங்களில் முத்திரை பதிக்கப்பட்டுள்ளதாகவும்  இப் புகைப்படங்களை விரைவில் இஸ்ரோ வெளியிடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


நாசா வாழ்த்து

இந்நிலையில் நிலவில் வெற்றிகரமாக விண்கலத்தை தரை இறக்கிய 4-ஆவது நாடு என்ற பெருமையைப் பெற்ற இந்தியாவுக்கு வாழ்த்துகள். இந்தத் திட்டத்தில் உங்களுடன் கூட்டணி சேர்வதை எண்ணி மகிழ்கிறோம்” என்று அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு மையமான நாசா  கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.