Breaking News

இரண்டு இனங்களையும் சமாளிக்கிறார் ரணில் ? நிலாந்தன்.

 


குருந்தூர் மலையில் பூசைக்குள் நுழைந்த பிக்குவை அங்கிருந்த தமிழ் அரசியல் செயற்பாட்டாளர்களும் பக்தர்களும் எதிர்க்கும் காணொளியொன்று வெளிவந்திருக்கிறது. போலீஸ்காரர்கள் அந்த பௌத்த மத குருவை சாந்தமாக,பணிவாக அரவணைத்துக் கையாளுகிறார்கள். ஆனால் அங்கிருந்த தமிழர்கள் அவரை ஒரு வேண்டாத விருந்தாளியாக,பூசையைக் குழப்ப வந்தவராகக் கருதி அங்கிருந்து அகற்றுகிறார்கள். இவைபோன்ற சில காட்சிகள் போதும், மேர்வின் டி சில்வா,சரத் வீரசேகர,உதய கமன் பில,விமல் வீரவன்ச போன்றவர்கள் தென்னிலங்கையில் இன முரண்பாடுகளை ஊக்கிவிப்பதற்கு.

இவையாவும் அரசாங்கத்துக்கு தெரியாமல் நடக்கவில்லை. அல்லது எதிர்பாராமல் நடக்கவும் இல்லை.அரசாங்கத்துக்கு எல்லாமே தெரியும்.பிக்குகள் அந்த இடத்துக்கு போனால் தமிழ் மக்கள் கோபப்படுவார்கள் என்பதும் தெரியும். தமிழ்மக்கள் கோவப்பட்டால் அதன் அடுத்த கட்ட விளைவாக தென்னிலங்கையில் தமிழ்மக்களுக்கு எதிராக சிங்களமக்கள் கோபப்படுவார்கள் என்பதும் தெரியும்.எல்லாவற்றையும் நன்கு தெரிந்து கொண்டுதான் அரசாங்கம் விவகாரங்களைக் கையாண்டு வருகிறது. இவை யாவும் ஒரு நிகழ்ச்சி நிரலின் கீழ் முன்னெடுக்கப்படுகின்றன. அந்த நிகழ்ச்சி நிரல் என்ன ?

வெளியில் இருந்து பார்த்தால் அது ரணில் விக்கிரமசிங்கவை அடுத்த ஜனாதிபதியாகக் கொண்டு வருவதற்கான ஒரு நிகழ்ச்சி நிரல் என்றே தோன்றும்.அது சரிதான். ஆனால் அதைவிட ஆழமான பொருளில் அந்த நிகழ்ச்சி நிரலை விளங்கிக் கொள்ள வேண்டும், ரணில் விக்கிரமசிங்க யார்? அவர் நாடாளுமன்றத்தில் ஓர் ஒற்றை யானை. மக்கள் ஆணை இல்லாதவர். ஆனால் மக்கள் ஆணை இல்லாத அந்த ஜனாதிபதியை மக்கள் ஆணையை இழந்த தாமரை மொட்டுக் கட்சி நாடாளுமன்றத்தில் பாதுகாத்து வைத்திருக்கின்றது.ரணிலை ஏன் அவர்கள் பாதுகாக்க வேண்டும்? ஏனென்றால் ராஜபக்சக்களின் பெயர் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் கெட்டுப் போய்விட்டது.எனவே ராஜபக்சக்கள் தங்களைச் சுதாகரித்துக் கொள்ள வேண்டும்.அவர்கள் ஏற்கனவே சுதாகரிக்கத் தொடங்கிவிட்டார்கள். எதிர்காலத்தில் ராஜபக்ச குடும்பத்தின் அடுத்த வாரிசு ஆகிய நாமல் ராஜபக்ஸ ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தப்படுவதற்கு இடையில் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் கட்சியின் செல்வாக்கைத் தூக்கி நிறுத்த வேண்டும். அதற்கு ரணில் போன்ற ஒரு கவசம் அவர்களுக்கு தேவை.

ரணில் எப்படிக் கவசமாகிறார்? எப்படியென்றால்,அவர் மேற்கத்திய பாரம்பரியத்தில் வந்த ஒரு தலைவர்.அவருக்கு இது கடைசி வாய்ப்பு.அதை இழக்க அவர் விரும்ப மாட்டார் என்பது ராஜபக்சங்களுக்கு தெரியும்.அதே சமயம் அவரை இழக்கக்கூடாது என்றும் அவர்கள் கருதுகிறார்கள். ஏனென்றால் மேற்கத்திய பாரம்பரியத்தில் வந்த ஒருவரை வைத்துக்கொண்டுதான் பன்னாட்டு நாணய நிதியத்தை,உலக வங்கியை,மேற்கு நாடுகளை இலகுவாகக் கையாளலாம். இது முதலாவது காரணம். இரண்டாவது காரணம், ரணில் எல்லாப் பேரரசுகளையும் சம தூரத்தில் வைத்திருக்கக் கூடியவர்.எனவே அவரைப் போன்ற ஒருவரை வைத்துக்கொண்டு நிலைமைகளைச் சுதாகரிப்பது அதிகம் அனுகூலமானது. அதனால் ரணில் அவர்களுக்குத் தேவை. மூன்றாவது காரணம்,ரணிலுடைய சொந்தக் கட்சியும் ராஜபக்சக்களின் அரசியல் எதிரியும் ஆகிய ஐக்கிய தேசியக் கட்சியை ரணிலை வைத்தே பலவீனப்படுத்தலாம்.

மேற்கண்ட காரணங்களை முன்வைத்து ரணிலைப் பாதுகாக்க வேண்டும்; அடுத்த முறையும் அவரைத்தான் ஜனாதிபதியாக கொண்டுவர வேண்டும்; என்று தாமரை மொட்டுக் கட்சி விரும்ப இடமுண்டு. அதேசமயம் ரணில் ராஜபக்சக்களோடு சேர்த்து பார்க்கப்பட்டால், அவர் தமிழ் வாக்குகளை இழக்க கூடிய ஆபத்தும் உண்டு அதனால் அவரை ஆகக்கூடியபட்சம் தனிச் சிங்கள வாக்குகளால் வெல்லவைக்க வேண்டும் என்றால், இனமுரண்பாடுகளை தூண்டிவிடும் நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த வேண்டும்.அதுதான் இப்பொழுது நாட்டில் நடக்கின்றது.

எனவே எதுவும் தற்செயலாக நடக்கவில்லை. எல்லாமே ஓர் ஒட்டுமொத்த நிகழ்ச்சி நிரலின் கீழ் தான் நடக்கின்றன.அந்த நிகழ்ச்சி நிரல் என்னவென்றால், கடந்த ஆண்டு தென்னிலங்கையில் ஏற்பட்ட தன்னெழுச்சிப் போராட்டங்களின் விளைவாக நொந்துபோய் இருந்த,அல்லது தற்காப்பு நிலைக்குத் தள்ளப்பட்டிருந்த சிங்கள பௌத்த பெருந்தேசிய வாதமானது, தன்னை சுதாகரித்துக் கொள்வதற்கு கால அவகாசத்தை எடுத்துக் கொள்கிறது. ரணிலை ஒரு முன் தடுப்பாக பயன்படுத்துகின்றது. ரணில் அதை அழகாகவும் விசுவாசமாகவும் செய்கிறார். அவர் அதைப் பல முனைகளில் செய்கின்றார்.

முதலாவதாக மேற்கு நாடுகளைச் சமாளிக்கின்றார்;ஐநாவைச் சமாளிக்கின்றார்.நாடு பன்னாட்டு நாணய நிதியத்திடம் கடன் வாங்கிக் கொண்டிருக்கும் ஒரு காலகட்டத்தில்தான் சிங்களபௌத்த மயமாக்கல் முடுக்கிவிடப்படுகிறது என்றால், என்ன அர்த்தம்? ரணில் மேற்கத்திய நாடுகளை ஏதோ ஒரு விதத்தில் சமாளிக்கிறார் என்று தானே பொருள்?

மேலும், இந்தியாவை அவர் 13ஐ வைத்து வெற்றிகரமாகக் கையாளுகின்றார்.ஒருபுறம் ராமர் பாலத்தைக் கட்டலாம் என்று முன்மொழிகிறார். இன்னொரு புறம் 13ஐ அமுல்படுத்தப் போவதாக கூறுகிறார்.13 இலிருந்து போலீசைக் கழித்துவிட்டு அதை அமுல்படுத்துவதற்கு விக்னேஸ்வரனை ஒரு கருவியாக அவர் கையாண்டு வருகிறார்.விளங்கியோ விளங்காமலோ,விக்னேஸ்வரனும் தனக்கு முன்னுக்கு இருந்த எல்லாத் தலைவர்களும் ஏறிச் சறுக்கிய குதிரையில் ஏறுவது என்று ஆசைப்பட்டுவிட்டார்.விக்னேஸ்வரனின் ஆலோசனைகளைப் பற்றிப் ப்பிடிப்பதன் மூலம் ரணில் இந்தியாவைச் சமாளிக்கலாம்.

இவ்வாறு இந்தியாவை,மேற்கு நாடுகளைச் சுமுகமாகக் கையாளும் ரணில், இன்னொருபுறம் சீனாவையும் திருப்திப்படுத்த விளைகிறார். சீனாவின் அடுத்த கப்பலும் இலங்கைக்குள் வர இருக்கிறது. ஏற்கனவே சீன நிறுவனங்களுக்கு உள்ளூர் எரிபொருள் விநியோக அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. இவ்வாறாக எல்லாப் பேரரசுகளையும் சம தூரத்தில் வைத்திருக்கும் ஒருவரைப் பாதுகாத்து அடுத்த ஜனாதிபதியாகக் கொண்டுவரும் நோக்கத்தோடு சிங்களபௌத்த பெருந்தேசியவாதம் தற்காப்பு நிலையிலிருந்து திட்டமிட்டுச் செயல்படுகின்றது. அது அதன் தக்கபூர்வ விளைவாக இன முரண்பாடுகளை நொதிக்கச் செய்யும்.இன முரண்பாடுகள் நொதிக்க,நொதிக்க ரணிலுடைய சிங்கள பௌத்த வாக்கு வங்கி பலப்படும். சிங்கள மக்களுக்கு அரசாங்கத்தின் மீது இருக்கும் கோபம் திசை திருப்பப்படும்.

நாட்டின் காலநிலை ரணில் விக்கிரமசிங்கவுக்கு சாதகமாக இல்லை. வறட்சி காரணமாக நாடு முழுவதும் முப்பத்தி ஏழாயிரம் ஏக்கர் நெல் வயல்கள் அழிந்து போய்விட்டதாக விவசாய அமைச்சர் கூறுகிறார்.இதனால் 32,967 விவசாயிகள் நட்டமடைந்திருப்பதாக அவர் மேலும் கூறியுள்ளார்.வடக்கில், வன்னியில், கடந்த போகத்தில் அறுவடை செய்த நெல்லை விற்க முடியாதிருப்பதாக விவசாயிகள் கூறுகிறார்கள்.ஏனெனில் நெல்லைக் கொள்ளளவு செய்யும் வணிகர்கள் அறா விலைக்கு நெல்லை வாங்க முற்படுகிறார்களாம்.அந்த விலைக்கு விற்றால்,தமக்குப் படுநட்டம் என்று விவசாயிகள் முறைப்பாடு செய்கிறார்கள்.வறட்சியான காலநிலை தொடந்தும் நீடித்தால்,அது மின்விநியோகத்தையும் பாதிக்கக்கூடும்.

அரசாங்கத்தின் வரிக் கொள்கை காரணமாக மருத்துவர்கள் அதிகளவு நாட்டைவிட்டு வெளியேறிக் கொண்டிருக்கிறார்கள். வடமாகாணத்தில் மட்டும் ஒரு வருடத்தில் 50 மருத்துவர்களும் 20 தாதியர்களும் நாட்டைவிட்டு வெளியேறியிருப்பதாக மாகாண சுகாதாரப் பணிப்பாளர் கூறுகிறார். எதிர்காலத்தில் மருத்துவர்களையும் இறக்குமதி செய்யவேண்டி வருமா? மருத்துவர்கள் மட்டுமல்ல,கதிரியக்கத் தொழில்நுட்ப வல்லுனர்களும் நாட்டைவிட்டு வெளியேறுகிறார்கள்.அதனால் ஆஸ்பத்திரிகளின் நாளாந்த நடவடிக்கைகள் மேலும் பாதிப்படைவதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

நாடு பொருளாதார நெருக்கடியில் இருந்து நம்பிக்கையூட்டக்கூடிய விதத்தில் விடுபடவில்லை என்பதற்கு மிகச்சிறந்த உதாரணம் முட்டையின் விலை. ஏறிய விலை இறங்கவேயில்லை. அரசாங்கம் சதோசாவில் முட்டையின் விலை 35 ரூபாய் என்று அறிவிக்கின்றது.ஆனால் எல்லாக் கடைகளிலும் அது 50 ரூபாய் தான் விற்கப்படுகிறது.

அதாவது நாட்டின் பொருளாதாரம் இப்பொழுதும் ஒரு சீருக்கு வரவில்லை. அதனால்,கடந்த ஆண்டு தென்னிலங்கையில் ஏற்பட்டது போன்ற தன்னெழுச்சிப் போராட்டங்கள் மீண்டும் ஏற்படலாம் என்ற பயம் அரசாங்கத்துக்கு உண்டு.நடுத்தர வர்க்கம் போராடுவதை விடவும் எப்படி நாட்டை விட்டுத் தப்பிச் செல்லலாம் என்றுதான் சிந்திக்கிறது என்பது அரசாங்கத்திற்கு ஒரு விதத்தில் ஆறுதலானது. ஆனாலும் பன்னாட்டு நாணய நிதியத்தின் நிபந்தனைகளுக்கு கீழ்ப்படியும்பொழுது, அதனால் சிங்கள மக்களுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகளை எதிர்த்து அவர்கள் வீதியில் இறங்கக் கூடிய வாய்ப்புகள் தொடர்ந்து அதிகமாகவே இருக்கின்றன. எனவே அரசாங்கத்துக்கு எதிரான சிங்கள மக்களின் கோபத்தை தமிழ் மக்களின் மீது திசை திருப்பி விடுவதற்கு தமிழ் பகுதிகளில் முன்னெடுக்கப்பட்டுவரும் சிங்கள பௌத்த மயமாக்கல் அதிகம் உதவும்.

இப்படிப் பார்த்தால் சிங்கள பௌத்த மயமாக்கலை முடுக்கி விடுவதன் மூலம் அரசாங்கம் ஒருபுறம் சிங்கள பௌத்த வாக்குகளைத் திரட்டலாம். போராடக்கூடிய சிங்கள மக்களை இனவாதத்தால் திசை திருப்பலாம். அதே சமயம் தமிழ்க்கட்சிகளையும் அரசியல் செயற்பாட்டாளர்களையும் அரசாங்கத்துக்கு எதிரான போராட்டங்களில் மினக்கெடச் செய்யலாம்.எனவே இன முரண்பாடுகளைத் தூண்டும் நடவடிக்கைகளின் மூலம் சிங்கள பௌத்த பெருந் தேசியவாதம் தன்னை படிப்படியாக சுதாகரித்துக் கொள்கின்றது.

கடந்த ஆண்டு,தன்னெழுச்சிப் போராட்டங்களின் விளைவாக சிங்கள பௌத்த பெருந்தேசியவாதம் பதுங்க வேண்டியிருந்தது.தவிர அனைத்துலக அளவில் அதன் பெயரும் கெட்டுவிட்டது.எனவே ஒரு லிபரல் முகமூடி அணிந்த பெருந்தேசியவாதியை முன் தடுப்பாக முன்னிறுத்துவதன்மூலம், சிங்கள பௌத்த பெருந்தேசியவாத சித்தாந்தம் தன்னை மிகத் தந்திரமாகத் தற்காத்துக் கொண்டுவிட்டது.இப்பொழுது தற்காப்பு நிலையில் இருந்து தாக்கும் நிலைக்கு முன்னேறத் தொடங்கி விட்டது என்பதைத்தான் நாட்டின் நடப்பு நிலைமைகள் நமக்கு உணர்த்துகின்றன.