Breaking News

நீதியை நாட்ட இளைஞர்கள் முன்வர வேண்டும் - சஜித் பிரேமதாசா!

 


சர்வதேச ஜனநாயக தினத்தை கொண்டாடும் இன்று உயிர்ரத்த ஞாயிறு தாக்குதலில் உயிரிழந்த குடும்பங்கள், உறவினர்கள் மற்றும் நண்பர்களை இழந்த மக்களின் ஜனநாயக உரிமைகளுக்காக அனைவரும் ஒன்றிணைந்து தங்கள் கடமையை ஆற்ற வேண்டும் என்றும், அரசாங்கம் இந்த விடயத்தில் உண்மையை வெளிப்படுத்தாவிடின் இங்குள்ள உண்மையான யதார்த்தத்தையும் உண்மையையும் கண்டறிய இந்நாட்டின் இளைஞர்களுக்கு வலுவூட்டுவதன் ஊடாக ஜனநாயக ரீதியிலான நடவடிக்கைகளை மேற்கொள்ள தயார் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

இன்று (15) உலக ஜனநாயக தினத்தை முன்னிட்டு காணொலி ஊடாக விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டு கருத்துத் தெரிவிக்கும் போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

சர்வதேச ஜனநாயக தினமான இன்றைய முக்கிய கருப்பொருளாக ஜனநாயகத்தை பாதுகாப்பதற்கான இலக்குகளை அடைவதில் இளைஞர்களின் வகிபாகம் அமைந்து காணப்படுவதாகவும், இளைஞர்களுக்கு அதிகாரமளிப்பதின் ஊடாக ஜனநாயகத்தை பாதுகாப்போம் என்ற தொனிப்பொருளை முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலால் பாதிக்கப்பட்ட இந்நாட்டு மக்களின் இழந்த உயிர்களுக்காக, உண்மையைத் தேடுவதில் இளைஞர்களதும் எங்களுடையதும் பங்கு அதன் உண்மையை தேடுவது என்றும்,அரசாங்கமும் அரசாங்கத்துடன் தொடர்புடைய அனைத்து குழுக்களும் உண்மையை மறைத்து, பிரதான சூத்திரதாரிகளாக செயல்பட்ட தலைவர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட நபர்கள் குறித்த உண்மையை மூடிமறைக்கும் நேரத்தில் இங்குள்ள உண்மையை வெளிக்கொணர வேண்டியதே நாட்டின் இளைஞர்கள் மற்றும் குடிமக்களின் பொறுப்பு என்றும், ஜனநாயக தினத்தை கொண்டாடும் இந்நாளில் இதை நாம் புரிந்து கொள்ள வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

அரசாங்கம் இது மொடர்பான தகவல்களை முன்வைக்காமல் ஏன் மறைக்கிறது என்பதில் சிக்கல் எழுவதாகவும், தேசிய பாதுகாப்பு என்ற பெயரில் 220 இலட்சம் மக்களிடம் உண்மையை மறைப்பது உகந்ததான செயல் அல்ல என்றும், கடும் பயங்கரவாதச் செயலுக்கான பிரதான காரணகர்த்தாக்களை தேடுவதைத் தவிர்த்து, தகவல்களை மறைப்பது நாட்டுக்கே கேடு விளைவிக்கும் செயல் என்றும், உண்மையை வெளிக்கொண்டு வந்து சம்பந்தப்பட்ட அனைவரையும் சட்டத்தின் முன் நிறுத்தி அவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்குவதே இந்த தருணத்தில் நாட்டுக்கு தேவையான விடயம் என்றும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

இதற்கு சர்வதேச ஆதரவு தேவையில்லை என்றாலும், பக்க சார்பற்ற வெளிப்படத்தன்மையுடன் கூடிய விசாரணை நாட்டில் இல்லை என்றால் சர்வதேச ஆதரவுடன் கூடிந உண்மையைக் கண்டறியும் வேலைத்திட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். சர்வதேச ஜனநாயக தினமான இன்றைய நாளில் இனம், மத, சாதி, வர்க்கம், கட்சி பேதமின்றி உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கான பிரதான சூத்திரதாரிகளை கண்டறியும் வேலைத்திட்டத்தை முன்னெடுப்பதற்கு முன்னோடியாக இளைஞர்கள் முன்வர வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேலும் கேட்டுக் கொண்டார்.