Breaking News

போர் நிறுத்த தீர்மானத்திற்கு ஐ.நா. சபை ஒப்புதல்: இஸ்ரேல் தாக்குதலை நிறுத்துமா?

 


ஹமாஸ் தாக்குதலை தொடர்ந்து காசா மீது இஸ்ரேல் தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது. பெரும்பாலான நாடுகள் காசா மீதான தாக்குதல் நிறுத்தப்பட வேண்டும் என குரல் கொடுத்து வருகின்றன.

ஹமாஸ் பயங்கரவாதிகள் இஸ்ரேல் மீது கடந்த அக்டோபர் 7-ந்தேதி கொடூரமான முறையில் தாக்குதல் நடத்தியதால், அரபு நாடுகள் உள்ளிட்டவை இஸ்ரேலுக்கு எதிராக நேரடியாக களம் இறங்க முடியவில்லை. இதனால் ஹமாஸ் பயங்கரவாதிகளை குறிவைத்து காசா மீது இஸ்ரேல் பயங்கர தாக்குதல் நடத்தி வருகிறது.

காசாவில் சுமார் 20 லட்சம் மக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள். பாலஸ்தீன மக்களும் இந்த போரால் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இதனால் போர் நிறுத்தம் தொடர்பான தீர்மானம் ஐ.நா. சபையில் கொண்டு வரப்பட்டது. இந்த தீர்மானம் மீது விவாதம் நடைபெற்றது.

இந்த தீர்மானத்தில், அக்டோபர் 7-ந்தேதி ஹமாஸ் பயங்கரவாதிகளால் தீவிரவாத தாக்குதல் நடத்தப்பட்டதற்கு கண்டனம் தெரிவிக்க வேண்டும். பிணைக்கைதிகளை உடனடியாக விடுவிக்க வலியுறுத்த வேண்டும் என அமெரிக்கா ஆதரவுடன் கனடா, தீர்மானத்தில் மாற்றம் கொண்டு முயற்சித்தது. அது நிராகரிக்கப்பட்டது.

இறுதியாக 193 உறுப்பினர்களை கொண்ட சபையில், தீர்மானத்திற்கு ஆதரவாக 120 பேர் வாக்களித்தனர். 14 பேர் எதிர்த்து வாக்களித்தனர். 45 பேர் கலந்து கொள்ளவில்லை.

இந்த தீர்மானத்திற்கு ஐ.நா. சபை ஒப்புதல் அளித்துள்ளது. இதன் காரணமாக இஸ்ரேல்- ஹமாஸ் இடையில் போர் நிறுத்தம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.