குழந்தைகளுக்கு வெளிநாட்டு மொழிகளை கற்பிக்க தடை: ஈரான் அரசு உத்தரவு!
ஈரானில் மழலையர் பள்ளி மற்றும் ஆரம்பப் பள்ளிகளில் ஆங்கிலம், அரபு உள்ளிட்ட அனைத்து வெளிநாட்டு மொழிகளை குழந்தைகளுக்கு கற்பிக்க அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது.
இதுதொடர்பாக கல்வி அமைச்சக அதிகாரி மசூத் தெஹ்ரானி பர்ஜாத் கூறும்போது, "மழலையர் பள்ளிகள், நர்சரி பள்ளிகள், தொடக்கப் பள்ளிகளில் வெளிநாட்டு மொழிகளை கற்பிப்பது தடை செய்யப்பட்டுள்ளது. ஏனென்றால் இந்த வயதில் குழந்தையின் ஈரானிய அடையாளம் உருவாகிறது" என்றார்.
ஏற்கனவே 2018-ம் ஆண்டு தொடக்கப்பள்ளிகளில் ஆங்கிலம் கற்பிக்க தடை விதிக்கப்பட்டது. ஆனாலும் ஆங்கிலம் நடுநிலைப் பள்ளியில் இருந்து கற்பிக்கப்படுகிறது. கடந்த மாதம், மாணவர்கள் சர்வதேச பள்ளிகளில் சேருவதற்கு அரசு தடை விதித்தது.
ஈரானிய குழந்தைகள் நாட்டின் பள்ளி பாடத்திட்டத்தை பின்பற்ற வேண்டிய கடமை இருப்பதாக அரசு தெரிவித்தது.