மீண்டும் இணையும் பேச்சுலர் கூட்டணி!
பிரபல இசையமைப்பாளரான ஜி.வி. பிரகாஷ் இசையில் மட்டுமல்லாமல் நடிப்பிலும் தனக்கான இடத்தை பிடித்துள்ளார். இவர் தற்போது டைகர் நாகேஸ்வர ராவ், கேப்டன் மில்லர், தங்கலான், போன்ற முன்னணி கதாநாயகர்களின் படங்களுக்கு பிசியாக இசையமைத்து வருகிறார். இதைத்தொடர்ந்து பல படங்களில் நடித்தும் வருகிறார்.
இந்நிலையில், ஜி.வி.பிரகாஷின் 25-வது படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, ஜி.வி.பிரகாஷின் 25-வது படத்தை 'காதலிக்க யாருமில்லை' படத்தை இயக்கியுள்ள கமல் பிரசாத் இயக்கவுள்ளதாகவும் இந்தப் படத்தில் நடிகை திவ்யபாரதி, ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியாக நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
மேலும், பிரமாண்டமாக உருவாகும் இப்படத்தை ஜி.வி.பிரகாஷ் தயாரிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2011-ஆம் ஆண்டு ஜி.வி.பிரகாஷ் - திவ்ய பாரதி நடிப்பில் வெளியான 'பேச்சுலர்' திரைப்படம் பெரிய அளவில் பேசப்பட்டது. தற்போது இந்த ஜோடி மீண்டும் இணையவுள்ளது எதிர்பார்ப்புகளை அதிகரித்துள்ளது.