Breaking News

கறுப்புத் துணியால் வாயைக் கட்டி முல்லைத்தீவில் போராட்டம்!

 


முல்லைத்தீவில்  இன்று நீதிபதி சரவணராஜாவுக்கு நீதி கோரி கண்டனப் போராட்டமொன்று மேற்கொள்ளப்பட்டது.

முல்லைத்தீவு இளைஞர்களின் ஏற்பாட்டில், முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு முன்பாகவே இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

கறுப்புத் துணியால் வாயினைக்  கட்டியவாறு அமைதியாக மேற்கொள்ளப்பட்ட இப் போராட்டத்தைத் தொடர்ந்து, மேலதிக அரசாங்க அதிபர் கனகேஸ்வரனிடம் நீதி அமைச்சின் செயலாளருக்கு அனுப்பி வைப்பதற்காக மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது.

இதன்போது, முல்லைத்தீவில் திட்டமிட்டு நடத்தப்படும் அத்துமீறிய குடியேற்றங்களுக்கும் எதிர்ப்பு வெளியிடப்பட்டது.

இப் போராட்டத்தில் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன், மதகுருமார், கரைதுறைப்பற்று பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் ஜெகதீஸ்வரன், சமூக செயற்பாட்டாளர்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.